தேடுதல்

Vatican News
விழிப்புணர்வு விழிப்புணர்வு 

வாரம் ஓர் அலசல்: அரட்டையடிக்கும் மனதை அடக்கினால்..

உடலிலும், மனதிலும் ஏற்பட்டுள்ள கீறல்கள், காயங்கள் மற்றும், தழும்புகள் எதனால் உருவாயின என்று சிந்தித்துப் பார்ப்போம். இவையெல்லாமே பெரும்பாலும் கவனக்குறைவால் ஏற்பட்டவையாகத்தான் இருக்கும். நமது அக்கறையின்மையால், எத்தனையோ மலர்களுக்கு, செடிகளுக்கு, மரங்களுக்கு வலிகளை உண்டாக்கியிருக்கிறோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

புத்தரின் போதனையைக் கேட்பதற்கு, எப்போதுமே, பெரியோர் முதல் சிறியோர் வரை, செல்வந்தர் முதல் வறியோர் வரை வருவது வழக்கம். அன்றும் அப்படித்தான் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது புத்தர் கையில் விலையுயர்ந்த பட்டாலான ஒரு கைக்குட்டையுடன் அக்கூட்டத்தினர் மத்தியில் நடந்துவந்தார். அனைவருக்கும் ஆச்சரியம். ஏனெனில் புத்தர் விலையுயர்ந்த எந்தப் பொருளையும் வைத்துக்கொள்வதில்லை. அவற்றை அவர் எவரிடமிருந்து பெறுவதுமில்லை. அன்று அனைவரும் வியப்புடன் தன்னை நோக்குவதைப் பார்த்த புத்தர், அந்த துணியை தூக்கிக் காண்பித்து, இது ஒரு விலையுயர்ந்த பட்டுக் கைக்குட்டைதானே என்று கேட்டார். அனைவரும், ஆமாம் என்று தலையை அசைத்ததும், அவர் அதில் ஐந்து முடிச்சுகளைப் போட்டார். பின்னர் கூட்டத்தினரிடம் காட்டி, இப்போது இது என்ன? என்று கேட்டார். அவர்கள் எல்லாரும், இப்போதும் இது பட்டுத் துணியாலான கைக்குட்டைதான் என்று கூறினர். சரி, இதில் இப்போது ஒரு மாற்றமும் இல்லைதானே என்று கேட்டார். அதற்கும் கூட்டத்தினர், ஆமாம் என்றனர். இதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். இந்த முடிச்சுகள் அவிழ்ந்ததால் நான் இங்கே இருக்கிறேன், இதில் நீங்கள் சிக்கியிருப்பதால் நீங்கள் அங்கே இருக்கின்றீர்கள் என்று, முடிச்சுகள் பற்றி விளக்கத் தொடங்கினார் புத்தர். வன்முறை என்பது, சொல்லால், செயலால், பிறரைத் துன்புறுத்துவது மற்றும் தன்னைத்தானே துன்புறுத்துவது என்று சொன்னார், புத்தர். வன்முறை பற்றி, புத்தர் சொன்ன இந்த விளக்கம் பற்றி விவரித்த, விழிப்புணர்வு பேச்சாளரான, ரேகா பத்மநாபன் அவர்கள் ஆற்றிய உரை ஒன்றில், புத்தர் கூறியதை, சில எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்தார்.

நாம் காலையில் எழுந்து சமுதாய வலைத்தளங்களில், தினத்தாள்களில், மற்றும், தொலைக்காட்சிகளில், வன்முறைகள் பற்றி வாசிக்கிறோம் மற்றும், கேட்கிறோம். ஆறு வயது சிறுமி ஒருவர், பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்டார், கோவிட்-19ஆல் சொந்த இடங்களுக்குத் திரும்பும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் இரயில் பாதையில் மரணம்... போன்ற செய்திகளை வாசிக்கும்போது அல்லது அவற்றை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது, நம்மை அறியாமலே நமது மனம் கொந்தளிக்கிறது. அவ்வாறு ஆத்திரப்படும்போது நம்மையே நாம் துன்புறுத்திக்கொள்கிறோம். அதுவும் வன்முறைதான். ஆக, ஒருவர் சொல்லால், செயலால், தன்னையும் துன்புறுத்தக் கூடாது, தான் சூழ்ந்துள்ள சமுதாயத்தையும் துன்புறுத்தக் கூடாது. அடுத்து, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது, உண்மையற்றதன்மையைக் காட்டுகிறது. இது விழிப்புணர்வற்ற நிலையால் வருவது. அடுத்து, எங்கு குறைகண்டாலும், நாம் யாரையும் எளிதில் சுட்டிக்காட்டி விடுகிறோம். அந்த ஆளைப் பார், என்ன ஆணவத்தோடு அலைகிறான் என்று சுலபமாகச் சொல்லி விடுகிறோம். இது, நான் என்ற ஆணவத்தின் வெளிப்பாடு. இவ்வாறு பேராசை, கர்வம், உண்மையற்றநிலை போன்றவை, நமது எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தால், நாம் உண்மையிலேயே, “நான்” என்ற கர்வத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

வன்முறை பற்றி, பட்டாலான ஒரு கைக்குட்டையை வைத்து புத்தர், அன்று கூறிய விளக்கம் பற்றி எடுத்துரைத்த ரேகா பத்மநாபன் அவர்கள், அந்த நிகழ்வில் மேலும் நடந்தது பற்றி கூறினார். புத்தரின் சீடர்களில் ஒருவரான சாய்புத்ரா அவர்கள், அந்த கைக்குட்டையில் புத்தர் போட்ட முடிச்சுகளை எப்படி அவிழ்க்கவேண்டும்? அதற்கு வழிசொல்லுங்கள் என்று கேட்டார். அப்போது புத்தர், அந்த முடிச்சுகளை மேலும் இறுக்கினார் அப்போது சாய்புத்ரா அவர்கள், இப்படிச் செய்தால், முடிச்சுகள் மேலும் இறுக்கமாகிவிடும், அவற்றை அவிழ்ப்பது மிகவும் கடினம் என்று கூறினார். அப்போது புத்தர், ஆமாம். முதலில் அந்த முடிச்சுகளைத் தளர்த்திவிடவேண்டும், பின்னர் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்க வேண்டும் என்று சொன்னார். சரி, இதற்கு எந்த முடிச்சை முதலில் அவிழ்க்கவேண்டும், அதாவது எதிலிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று கேட்டார் சாய்புத்ரா. அதற்கு புத்தர் விழிப்புணர்வற்றதன்மையை முதலில் அகற்ற வேண்டும். அதாவது, முதலில், நான், நான் என்று சொல்லும் அறியாமையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவேண்டும். அதனை முதலில் நம் மனதிலிருந்து அகற்றவேண்டும். இந்த அறியாமையிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டால், மற்ற எல்லா அறியாமைகளும் தானாக விலகிவிடும் என்று புத்தர் சொன்னார். ரேகா பத்மநாபன் அவர்கள், இந்த நிகழ்வை தன் உரையில் குறிப்பிட்டு, விழிப்புணர்வுடன் வாழ சில வழிமுறைகளையும் பரிந்துரைத்தார்.

இவ்வாறு வாழ விரும்புகின்றவர்கள், ஒரு நாளில் ஓர் அரைமணி நேரம் மனதில் எழும் எண்ணங்களை, ஸ்மார்ட் கைபேசியில் பதிவுசெய்துகொள்ளுங்கள். பின்னர் தூங்கும்போது அதனை ஒலிக்கவிடுங்கள். ஓர் எண்ணத்திற்கும், அடுத்த எண்ணத்திற்கும் இடையே தொடர்பே இல்லாமல் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். அந்த எண்ணங்கள் இருவிதமாக இருக்கும். ஒன்று கடந்தகாலத்தைப் பற்றியதாகவும், மற்றொன்று வருங்காலத்தைப் பற்றியதாகவும் இருக்கும். எனவே நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். நமக்குள் எழும் எண்ணங்களுக்குச் சாட்சியாய் இருப்பதாகும். நாம் வெளியில் சமுதாயத்தில் எவ்வளவு பெரிய மனிதராக வளர்ந்திருந்தாலும், உண்மையில் நான் யார் என்பதில் ஆழமாக வேரூன்றி வளரவேண்டும். இவ்வாறு வளருவதற்குத் தடைகளாக பல பொழுதுபோக்குகள் இருக்கின்றன. அவை நம் எண்ணங்களைத் திருடிச் செல்கின்றன.  எனவே, மனதில் தோன்றும் எண்ணங்கள் என்ன என்ற, விழிப்புணர்வோடு வாழும்போது, தான் மட்டுமல்ல, தான் வாழும் சூழலில் இருப்பவர்களும் நிம்மதியாக வாழ உதவ முடியும். அதற்கு முதலில் மூச்சைக் கவனிக்கச் சொல்கிறார், ரேகா பத்மநாபன்.

விழிப்புணர்வின்மை

கொரோனா தொற்றுக்கிருமியால், எந்தவித வேறுபாடுமின்றி, எல்லா இனத்தவரும், மொழியினரும், நாட்டினரும் துன்புற்றுக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில்கூட, சமுதாயங்களில் மனிதமற்ற செயல்களும் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டு Minneapolis நகரில், மே 25, கடந்த திங்களன்று, 46 வயது நிரம்பிய ஆப்ரிக்க-அமெரிக்க இனத்தைச் சார்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் (George Floyd) என்பவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பதை காணொளியில் கண்டபோது நம் மனம் பதறியது. எந்தவித குற்ற உணர்வுமின்றி, 44 வயது நிரம்பிய காவல்துறை அலுவலகர் ஒருவர், தனது முட்டியால், ஃபிளாய்ட் அவர்களது கழுத்தை பலமாய் மிதித்ததில், ஃபிளாய்ட் அவர்கள் மூச்சடைத்து உயிரிழந்தார்.

சென்னையில், கொரோனா தொற்றுக்கிருமி வேகமாகப் பரவிவரும் இந்நாள்களில், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதற்கு, மூன்று இலட்சம் முன்பணம், ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட ஒரு நாளைக்கு ஒரு இலட்சம், தனிப்பட்ட பாதுகாப்பு கருவிக்கு (PPE) பத்தாயிரம், இல்லையென்றால் இடமில்லை என்று சொல்லப்படுவதாக, தொலைக்காட்சி ஒன்று செய்திகளை வெளியிட்டுள்ளது.

இந்தவிதமான வன்முறைகள் உருவாக ஆணிவேர் என்ன என்று சிந்திப்போம். புத்தர் குறிப்பிட்ட, பேராசை, ஆணவம், அகம்பாவம், உண்மையற்றநிலை, விழிப்புணர்வற்றதன்மை போன்றவையாகும். இன்றைய காலக்கட்டத்தில், மனிதர்,  இருந்த இடத்திலிருந்தே உலகின் எந்த மூலைக்கும் கணனி வழியாகச் சென்று அந்த இடத்தைக் கண்டு ரசித்து வரும் அளவிற்கு தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளனர். ஆனால், தொலைக்காட்சியில் அல்லது கணனியில் கவனம் செலுத்திக்கொண்டே  உணவு உண்பது போன்று, ஒரேநேரத்தில் பல காரியங்களில் ஈடுபடுவதால், பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கொரோனா தொற்றுக்கிருமி பரவல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு செய்திகள் வழங்கப்பட்டு வருகின்றன. நம்மில் எத்தனை பேர் அந்தச் செய்திகளை உண்மையிலேயே காதில் வாங்கிக்கொள்கிறோம்?

சாலையில் நடந்துசெல்கிறோம். எதையோ சிந்தித்துக்கொண்டு, கவனத்தைச் சிதறடித்துக்கொண்டு சென்றால், விபத்தை சந்திக்க நேரிடும். அதனால் அடுத்தவருக்கும் இழப்பு ஏற்படும். வாகனம் ஓட்டுபவர், கைபேசியிலேயே கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தால், வழியில் யார் மீதாவது முட்டி மோதி ஆபத்தை உருவாக்கக்கூடும். எனவே வாழ்வில் இவ்வாறு எத்தனைமுறை இடறி விழுந்திருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம். உடலிலும், மனதிலும்  ஏற்பட்டுள்ள கீறல்கள், காயங்கள் மற்றும், தழும்புகள் எதனால் உருவாயின என்று சிந்தித்துப் பார்ப்போம். இவையெல்லாமே பெரும்பாலும் கவனக்குறைவால் ஏற்பட்டவையாகத்தான் இருக்கும். நமது அக்கறையின்மையால், எத்தனையோ மலர்களுக்கு, செடிகளுக்கு, மரங்களுக்கு வலிகளை உண்டாக்கியிருக்கிறோம்.

மனித வாழ்வையும், இயற்கையையும் ஆபத்துக்களிலிருந்து அழிவுகளிலிருந்து காப்பாற்றுவதற்கு விழிப்புணர்வு மிகவும் முக்கியம். நம் வாழ்வின் அவசரம், வேகம், நமது விழிப்புணர்வைத் தின்று விழுங்கி விடுகின்றன. வாழ்வு, உயிர்த்துடிப்புடன் வாழவேண்டியதாகும். அதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது  விழிப்புணர்வு. ஒருவர் எந்த அளவுக்கு, தான் செய்யும் செயல்களை முழுஈடுபாட்டுடன் உணர்ந்து செய்கிறாரோ, விழிப்புணர்வுடன் செய்கிறாரோ, அந்த அளவுக்குத்தான் அந்தக் காரியம் சிறப்பாக அமையும். அந்தந்த நேரங்களில் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கவனித்து வாழ்ந்தால், பல எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க முடியும். விழிப்புணர்வுடன் மனதில் தோன்றும் எண்ணங்கள் என்ன என்பதை கவனித்து வாழ்ந்தாலே, எந்த சமுதாய ஊடகங்களும் நம்மை அடிமைப்படுத்த முடியாது. எனவே மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் பற்றிய தெளிவு நமக்கு அவசியம். நமது மனங்கள், முடிவில்லாமல் அரட்டை அடிப்பதையும் நாம் நிறுத்தவேண்டும். முயற்சிப்போமா.

வாரம் ஓர் அலசல்: அரட்டையடிக்கும் மனதை அடக்கினால்..
01 June 2020, 14:03