தேடுதல்

Vatican News
ஐ.நா.அவையின் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் ஐ.நா.அவையின் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்   (AFP or licensors)

ஐ.நா.அவை வெளியிட்ட உன்னத ஆவணத்தின் 75ம் ஆண்டு

1945ம் ஆண்டில் ஐ.நா. அறிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளின் பிரதிநிதிகள், அன்றைய உலகில் நிலவிய கொள்ளைநோய், போர் மற்றும், மனச்சோர்வு ஆகியவை இணைந்த சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, புதியதும், சிறந்ததுமான உலகை உருவாக்குவதற்கு விதையைத் தூவினர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட கொள்கை ஆவணம், சிதைந்துபோயிருந்த உலகிற்கு விதிமுறைகளையும், நம்பிக்கையையும் கொணர்ந்தது என்று, ஐ.நா.அவையின் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

ஐ.நா.அவை தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்த இந்த ஆவணம் கையெழுத்திடப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு, ஜூன் 26, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், உலக அளவில் நெருக்கடிகள் அழுத்திக்கொண்டிருக்கும் இக்காலத்தில், நாம் சிறந்த்தொரு மைல்கல் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறோம் என்று கூறினார்.

இந்த ஆவணம், கொரோனா கொள்ளைநோய், இனப்பாகுபாடு, காலநிலை மாற்றம், வறுமை, சமத்துவமின்மை, போர், அணுஆயுதப் பரவல், இணையதள தாக்குதல்கள், ஊழல் போன்றவற்றால் நொறுங்குண்டுள்ள நம் உலகை சோதிப்பதாகவும், அதன் விழுமியங்களைத் தொடர்ந்து முன்னோக்கி கொண்டுசெல்லத் தூண்டுவதாகவும் உள்ளது என்றும் உரைத்தார், ஐ.நா.பொதுச்செயலர் கூட்டேரஸ்.

1945ம் ஆண்டில் இதில் கையெழுத்திட்ட நாடுகளின் பிரதிநிதிகள், உலகளாவிய கொள்ளைநோய், போர் மற்றும், மனச்சோர்வு போன்றவற்றை எதிர்கொண்டனர், அச்சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, புதியதும், சிறந்ததுமான உலகை உருவாக்குவதற்கு விதையைத் தூவினர், அதேபோல் இன்று நாமும் செயல்படவேண்டும் என்று, கூட்டேரஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆவணம், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரவிருந்த காலக்கட்டத்தில், 1945ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி, உறுப்பு நாடுகளால், சான் பிரான்சிஸ்கோவில் கையெழுத்திடப்பட்டது. பின்னர் அந்த ஆவணம், அதே ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி நடைமுறைக்கு வந்தது. 

போரின் வடுக்களிலிருந்து வருங்காலத் தலைமுறைகளைக் காப்பாற்றும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆவணம், உலகில் அமைதி மற்றும், பாதுகாப்பை நிலைநிறுத்தவும், சமுதாய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவும், தரமான வாழ்வை அனைவருக்கும் அமைத்துக்கொடுக்கவும், உலகளாவிய சட்டத்தை வலுப்படுத்தவும், மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், ஐ.நா. நிறுவனம் உழைக்குமாறு வலியுறுத்துகிறது. (UN)

27 June 2020, 13:26