தேடுதல்

Vatican News
காஷ்மீரில் உலக சுற்றுச்சூழல் நாள் காஷ்மீரில் உலக சுற்றுச்சூழல் நாள்  (ANSA)

கொள்ளைநோயைத் தடுக்க, இயற்கை செய்தியை அனுப்புகிறது

மனிதராகிய நாம் ஆற்றும் தீய செயல்களால் இயற்கை உலகை அழித்துக்கொண்டிருக்கிறோம். காலநிலை மாற்றத்தால் உருவாகும் அழிவு அதிகரித்து வருகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், கொள்ளைநோயைத் தடுக்கவும், மனிதர் அனைவருக்கும், தெளிவான ஒரு செய்தியை, இயற்கை அனுப்புகிறது என்று, ஐ.நா. நிறுவனத்தின் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

ஜூன் 05, உலகச் சுற்றுச்சூழல் நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, இந்நாளின் முக்கியத்துவம் குறித்து, ஒரு காணொளிச் செய்தியின் வழியாகப் பேசியுள்ள கூட்டேரஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த பூமிக்கோளத்தின் நலனுக்கும், மனிதரின் நலனுக்கும் இடையேயுள்ள தொடர்பையும், மனிதவாழ்வைத் தாங்கிப்பிடிக்கும் பல்லுயிர்களைப் பாதுகாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும், இந்த உலக நாளில், ஐ.நா. நிறுவனம் சுட்டிக்காட்ட விரும்புகிறது என்று, கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மனிதராகிய நாம் ஆற்றும் தீய செயல்களால், இயற்கை உலகை அழித்துக்கொண்டிருக்கிறோம் என்றும், காலநிலை மாற்றத்தால் உருவாகும் அழிவு அதிகரித்து வருகின்றது என்றும், மனித சமுதாயத்தைப் பாதுகாக்கவேண்டுமெனில், நாம் இயற்கையைப் பாதுகாக்கவேண்டும் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், மனித உரிமைகள் மற்றும், சுற்றுச்சூழல் குறித்து சிறப்பு அறிக்கை தயாரிக்கும் ஐ.நா. அதிகாரி David Boyd அவர்கள், இந்த உலக நாளையொட்டி வெளியிட்ட செய்தியில், கோவிட்-19 போன்ற கொள்ளைநோய்களில், குறைந்தது எழுபது விழுக்காடு, விலங்குகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றுகிறது என்று எச்சரித்துள்ளார்.

இதனால், சுற்றுச்சூழலையும், மனித உரிமைகளையும், பாதுகாப்பதற்கு உடனடியாக, புதிய செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள Boyd அவர்கள், பல்லுயிர்களை அழிவினின்று காப்பாற்றவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவுகளைத் தடுக்கவும், உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

நச்சுத்தன்மைகொண்ட பொருள்களால் சூழலியல் மாசடைதல், விலங்குகளிடமிருந்து மனிதருக்குப் பரவும் நோய்கள் போன்றவற்றைத் தடைசெய்யவும், உலக நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும், Boyd அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, ஏறத்தாழ பத்து இலட்சம், தாவர மற்றும் விலங்கு உயிரின வகைகள், விரைவில் அழியக்கூடும் என்று, சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். (UN)

05 June 2020, 12:48