தேடுதல்

Vatican News
ஆபிரகாம் லிங்கன் உருவச்சிலை ஆபிரகாம் லிங்கன் உருவச்சிலை  (AFP or licensors)

விதையாகும் கதைகள் : செருப்பு தைக்கவும், நாட்டை ஆளவும் தெரியும்

உயர் பதவியில் இருந்தாலும், அதிகாரத்தைக் காட்டாமல், புத்திசாலித்தனமாக, பணிவோடு பதில் அளித்து, தன்னை அவமானப்படுத்தியவரின் மூக்கை உடைத்தார் ஆபிரகாம் லிங்கன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒருமுறை, அமெரிக்க ஐக்கியநாட்டு பாராளுமன்றத்தில், அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் உரை நிகழ்த்தியபோது, அவரை மட்டம்தட்டும் நோக்கத்தில், எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து, ' ஆபிரகாம், உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது' என்றாராம்.

அதற்கு, ஆபிரகாம் லிங்கன் அவர்கள், 'நண்பரே, என் தந்தை இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும், அவர் தைத்து கொடுத்த செருப்பு, உங்கள் கால்களை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது, அந்த அளவுக்கு சிறப்பாகத் தைக்கப்பட்டுள்ளது என்றுதானே அர்த்தம்? இருப்பினும், அவர் தைத்த செருப்பில் ஏதேனும் பழுது எற்பட்டிருந்தால், அதை என்னிடம் கொடுங்கள், நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன். எனக்கு செருப்புத் தைக்கவும் தெரியும், நாட்டை ஆளவும் தெரியும்' என்று சொன்னாராம்.

அவமானப்படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல், புத்திசாலித்தனமாக பணிவோடு பதிலளித்து, அவமானப்படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன். இத்தகையப் பக்குவமான மனதாலும், விடாமுயற்சியாலும்தான், பல தோல்விகளுக்குப் பின்னர், அமெரிக்க ஐக்கியநாட்டு அரசுத்தலைவராகி, அடிமைத்தனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார், ஆபிரகாம் லிங்கன்.

இதைத்தான் கண்ணதாசனும், "நிலை உயரும்போது பணிவு கொண்டால், உயிர்கள் உன்னை வணங்கும்" என்றார்.

05 June 2020, 10:26