தேடுதல்

Vatican News
ஆற்றைக் கடக்கும் படகு ஆற்றைக் கடக்கும் படகு 

விதையாகும் கதைகள் : தவறுகள் தரும் பாடமே அனுபவம்

நமக்கு முன் செல்வோர் செய்த தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் அனுபவம் எனும் பாடத்தை, அறிவுத்திறனோடு பயன்படுத்தினால், வெற்றி பெறலாம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஓர் ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல, இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் நின்றுகொண்டிருந்தனர். முதலில் சென்ற ஆண், 'இந்த ஆற்றை நீந்திக் கடக்கத் தேவையான உடல் வலிமையைக் கொடு’ என்று கடவுளிடம் கேட்டார். உடல் வலிமையைக் கொடுத்தார் கடவுள். ஆனால் அவருக்கு நீந்தத் தெரியவில்லை. நீச்சல் பயிற்சி இல்லாமல், வெறும் உடல் வலிமையை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பயன்? தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தார்.

இரண்டாவதாக சென்ற ஆண், 'ஆற்றைக் கடந்து போவதற்கு எனக்கு ஒரு படகு தா’ என்று கடவுளிடம் கேட்டார். படகு வந்தது. அதில் ஏறிப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் அந்தப் படகில் ஓர் ஓட்டை இருந்தது. தண்ணீர் உள்ளே வந்து, படகு கவிழ்ந்து, அவரும் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.

மூன்றாவதாக அந்தப் பெண், 'நான் அந்தக் கரைக்குச் செல்ல வசதியாக தண்ணீரே இல்லாமல் செய்துவிடு’ என்று சொன்னார். தண்ணீர் வற்றியபின் நடந்து சென்று, அக்கரையை அடைந்தார். இதைக் கவனித்த பெரியவர் ஒருவர், 'எப்படியம்மா நீ மட்டும் புத்திசாலித்தனமாக இப்படி நடந்துகொண்டாய்?’ என்று கேட்டார். 'எனக்கு முன்னே சென்ற இருவரும் செய்த தவறுகளிலிருந்து நான் படித்த பாடம் இது. அந்த அனுபவம்தான், என்னை, புத்திசாலித்தனமாக செயல்பட வைத்தது’ என்று அந்தப் பெண்மணி சொன்னார்.

19 June 2020, 11:49