தேடுதல்

Vatican News
கத்தரிக்கோலும், ஊசியும் கத்தரிக்கோலும், ஊசியும் 

விதையாகும் கதைகள்: அன்பு, அறுக்கப்படாத சங்கிலியாக இருந்தால்…

கத்தரிக்கோல் பிரிக்கும், வெட்டும், ஊசி கிழிந்ததைப் பழுதுபார்க்கும், பிரிந்த தை இணைக்கும். இணைப்பதற்கு, இணைந்து நிற்கத் தேவைப்படுவது அன்பு.

மேரி தெரேசா: வத்திக்கான்

முகலாயப் பேரரசர் அக்பர் அவர்கள், இந்தியாவின் 75 விழுக்காட்டுப் பகுதியை ஆட்சி செய்த காலக்கட்டத்தில், மிகப் புகழ்பெற்ற, ஃபரீதி என்ற சூஃபி ஞானி ஒருவர் இருந்தார். மிக எளிமையாக, ஓலைக்குடிசையில் வாழ்ந்துகொண்டிருந்த இவர் மீது, அக்பர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அக்பர் அவர்களும், அவ்வப்போது ஞானியிடம் சென்று,  தன்னில் எழுகின்ற கேள்விகளுக்கு விடை கண்டு, ஆன்மீக நலம் பெற்றுத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவ்வாறு ஒருநாள் திரும்பிக்கொண்டிருந்தபோது, நான் ஞானியைச் சென்று சந்தித்தபோதெல்லாம், அதிகம் பெறுகிறவனாகவே திரும்புகிறேன், இதுவரைக்கும் ஒன்றைக்கூட அந்த ஞானிக்குத் தருகின்ற மனிதனாக இல்லையே, ஏதாவது ஒன்றை அவருக்குத் தரவேண்டும், பெறுவதும் கொடுப்பதும்தானே வாழ்க்கை என்று அக்பர் சிந்தித்தார். உடனே அமைச்சரிடம், அரண்மனையின் கருவூலத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் ஒன்றைக் கொண்டுவாருங்கள் என்று கட்டளையிட்டார். அமைச்சரும், கருவூல அதிகாரிக்கு கட்டளையிட்டார். அந்த அதிகாரியும், நிறைய நேரம் சென்று, ஒரு கத்தரிக்கோலைக் கொண்டுவந்து அமைச்சரிடம் கொடுத்தார். அதை உற்றுப்பார்த்த அமைச்சர், இதுதான் விலைமதிப்பற்ற பொருளா? என்று கேட்டார். இல்லை அமைச்சரே, அதை நன்றாக உற்றுப்பாருங்கள், அப்போது புரியும் என்றார் கருவூல அதிகாரி. அமைச்சரும் அதை உற்றுப்பார்த்தார், புரிந்துகொண்டார். அதை அக்பரிடம் கொண்டுவந்து கொடுத்தார் அமைச்சர். அந்தப் பொருளை பார்த்தவுடனேயே, அக்பருக்கு எல்லையற்ற கோபம் வந்தது. அப்போது அமைச்சர், அக்பரிடம், பேரரசே, நானும்கூட அப்படித்தான் நினைத்தேன். அதை உற்றுப்பாருங்கள். அதன் உடம்பு முழுவதும் கோமேதகம், வைரம், புஷ்பராகம், பவளம், இப்படி பல விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு விலையே கிடையாது என்று சொன்னார். அக்பரும் ஞானியிடம் சென்று, ஐயா, தங்களிடமிருந்து எப்போதும் பெற்றுக்கொண்டே செல்கிறேன், பெறுவதும் தருவதும் அல்லவா வாழ்வு, எனவே நான் இதை தங்களுக்கு அளிக்கிறேன் என்று அந்த கத்தரிக்கோலைக் கொடுத்தார். அதை இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டு, அதை திரும்பவும் அக்பரிடமே கொடுத்துவிட்டார் ஞானி. அக்பரின் முகம் வாடிவிட்டது. அப்போது ஞானி, மன்னா, நீ கொடுக்க, நான் வாங்கவேண்டும் அவ்வளவுதானே, அப்படியென்றால் ஓர் ஊசி இருந்தால் கொடு. மகிழ்வோடு பெற்றுக்கொள்கிறேன் என்றார். விலைமதிப்பற்ற கத்தரிக்கோலை பெறாமல், ஒற்றைக்காசு பெறாத ஊசியைக் கேட்கிறீர்களே என்று திகைப்புடன் ஞானியைப் பார்த்தார் அக்பர். அதற்கு ஞானி, மன்னா நீ கொடுத்த கத்தரிக்கோல் ஒன்றை இரண்டாக வெட்டிப் பிரிக்கும். ஒற்றைக் காசு மதிப்புப் பெறாத ஊசி, பிரிந்துகிடக்கின்ற இரண்டை ஒன்றாக இணைக்கும் என்று பதில் சொன்னார்.

சிந்தனைக்கு

கத்தரிக்கோல் பிரிக்கும், வெட்டும், ஊசியோ கிழிந்ததைப் பழுதுபார்க்கும், பிரிந்ததை இணைக்கும். இணைப்பதற்கும், இணைந்து நிற்கவும் தேவைப்படுவது அன்பு. அன்பு என்பது, அறுக்கப்படாத சங்கிலியாக இருந்தால், இந்த சமுதாயத்தில் குற்றம் விளையாது.

29 June 2020, 12:48