தேடுதல்

Vatican News
சான் தியெகோவில் சர்க்கஸ் கலைஞர் சான் தியெகோவில் சர்க்கஸ் கலைஞர் 

விதையாகும் கதைகள்: சிரிக்க வைப்பவர் எல்லாருமே மகிழ்வானவர்களா?

“நான் எப்போதும் மழையில் நடப்பதற்கு விரும்புவேன், அப்போதுதான் நான் கண்ணீர் சிந்துவதை எவராலும் காண முடியாது” - சார்லின் சாப்ளின்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு சமயம், நடுத்தர வயதுடைய ஒருவர், தன் வாழ்வில் முதல் முறையாக  மருத்துவரைப் பார்க்கச் சென்றார். மருத்துவர் அவரை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அவருக்கு உடலில் எந்தக் குறையுமே இல்லை, ஆனால் உடம்பு மட்டும் சற்று பருமனாக இருக்கிறது என்று சொன்னார். மருத்துவர் சொன்ன அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அவர், தன் முகத்தில் எவ்வித சலனத்தையும் வெளிப்படுத்தாமல், தனது மேல்சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த மருத்துவர், நீங்கள் எதைக் குறித்தோ அடிக்கடி சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன் என்று சொன்னார். ஆமாம் டாக்டர், நான் எவ்வளவு முயன்றாலும் மனதில் நிம்மதி இல்லை. நான் ஏன் இந்த உலகத்தில் வாழ்கிறேன் என்றுகூட அடிக்கடி நினைக்கிறேன் என்று சொன்னார் அந்த மனிதர். அதைக் கேட்டதும் மருத்துவர் அவருக்குப் பல ஆலோசனைகள் சொன்னதோடு, அன்று மாலையே அவர் மகிழ்வாக இருப்பதற்கு, கடைசியாக ஓர் ஆலோசனையையும் சொன்னார். இன்று மாலையில் நீங்கள் வழக்கமாகச் செய்யும் காரியங்களை விட்டுவிட்டு, இந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் நடைபெறும் சர்க்கஸ் அரங்கிற்குச் செல்லுங்கள். அங்கே கோமாளிகளின் விளையாட்டுகள் மிகவும் அருமையாக இருக்கும். உங்களைப் போன்ற பருமனான உடலைக்கொண்டிருக்கும் ஒரு கோமாளியின் பெயர் போசோ. அவர் உண்மையாகவே ஒரு சிரிப்புப் பெட்டகம். நான் இதுவரை பார்த்த எல்லா கோமாளிகளிலும் அவரே சிறந்தவர். அவர் நிச்சயம் உங்கள் கவலைகளை மறக்கச் செய்வார் என்று சொன்னார் மருத்துவர். அவ்வளவு நேரம்வரை தரையையே  பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதர், விரக்தியான ஒரு புன்னகையுடன், டாக்டர், அந்த நிகழ்ச்சியும், அந்த மனிதரும் எனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது, ஏனெனில் நான்தான் அந்த கோமாளி என்று சொன்னார்.

சிந்தனைக்கு

ஆம். மற்றவரை மகிழ்விக்கும் எல்லாருமே தங்கள் சொந்த வாழ்வில் மகிழ்வாக இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. (இன்றைய சிந்தனை 20152). சிரிப்புப் பெட்டகமாகிய சார்லின் சாப்ளின் அவர்கள், “நான் எப்போதும் மழையில் நடப்பதற்கு விரும்புவேன், அப்போதுதான் நான் கண்ணீர் சிந்துவதை எவராலும் காண முடியாது” என்று கூறினார். சிரிக்காமல் கழிந்த நாள் வீணான நாள் என்று சொன்னவரும் அவரேதான். நம் கவலைகள் பிரச்சனைகள் அனைத்தையும் கடவுளிடம் கூறி ஆறுதல் பெறுவோம். இறுதியில் நமக்கு வாழ்வில் மனநிம்மதி தருபவர் அவர் ஒருவர் மட்டுமே.

25 June 2020, 11:52