தேடுதல்

Vatican News
தனிமை தனிமை 

விதையாகும் கதைகள்: தனிமை, ஞானம் பெற இறைவன் தந்த பரிசு

நம்மை எவரும் எதுவும் கைவிட்டபோதிலும், நம்முடன் எப்போதும் இருப்பவர் நம்மை ஒருபோதும் கைவிடாத இறைவன் மற்றும், நம் தனிமை. எனவே தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் இறைவனை நெருங்கிக்கொள்தல் வாழ்வுக்கு சுகம் தரும்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு நாள், இரு நண்பர்கள், தங்களுக்கிடையே ஒரு பந்தயம் கட்டினர். அதன்படி, முதல் நண்பர், ஓர் அறையில், ஒரு மாதம், யாரோடும் பேசாமல் இருக்கவேண்டும். அப்படி இருந்தால், அவருக்கு, இரண்டாவது நண்பர், பத்து இலட்சம் ரூபாயை ரொக்கமாக கொடுக்க வேண்டும். அறைக்குள் இருப்பவரால், பந்தயத்தை கடைப்பிடிக்க முடியவில்லையென்றால், அவர் மணியை அடிக்கவேண்டும். உடனடியாக அவர் அறையைவிட்டு வெளியேற்றப்படுவார். இந்த பந்தயத்திற்கு சரி என்று ஒத்துக்கொண்டார் முதல் நண்பர். பந்தயப்படி, அவர் ஒரு வீட்டில், ஓர் அறையில், தனியே வைக்கப்பட்டார். அவருக்கு, ஒவ்வொரு நாளும், இரண்டுவேளைக்கு உணவும், வாசிப்பதற்கு நூல்களும் கொடுக்கப்பட்டன. முதல் நாள் அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எரிச்சலும், கோபமும், அதிகரிக்க, அடுத்த சிலநாள்கள், சப்தமாய் கத்தினார், அழுதார், கோபத்தோடு, அறையில், வேகமாக அங்குமிங்கும் நடந்தார். ஆனால், அவர், மணியை மட்டும் அடிக்கவில்லை. எப்படியாவது பந்தயத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆவலில், எல்லா இடர்களையும் தாங்கிக்கொண்டார். பந்தயம் முடிய சிறிது நாள்களே இருந்தவேளை, திடீரென அவரது மனதில் ஒருவித அமைதி நிலவியது. அவருக்கு யாரோடும் பேசவேண்டுமென்று தோன்றவில்லை. அவருக்கு தனிமையாய் இருப்பது பிடித்துப்போகத் தொடங்கியது. பந்தயம் முடிய இரு நாள்கள்தான் இருந்தன. அச்சமயத்தில் இரண்டாவது நண்பரின் வரத்தகத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அவர் கையில் பணமே இல்லை. நண்பர் பந்தயத்தில் வெற்றிபெற்றுவிட்டால் பணத்தைக் கொடுக்கவேண்டுமே, என்ன செய்யலாம் என்று சிந்தித்தார் அவர். நண்பரைச் சுட்டுக் கொன்றுவிடலாம் என்று முடிவெடுத்து, நண்பரை வைத்திருந்த அறைக்குச் சென்றார் அவர். அங்கு, அவரது நண்பர் இல்லை. ஒரு மாதம் முடிவதற்கு ஒருநாள் இருந்தபோது, முதல் நண்பர், அந்த அறையைவிட்டுச் சென்றுவிட்டார். அவர் இருந்த அறையில் ஒரு மடல் இருந்தது. அதை அவர் எடுத்து வாசித்தார், இரண்டாவது நண்பர். தனிமையில் இருந்த இந்நாள்களில் நான் கடவுளோடு நெருக்கமாக இருந்தேன். இந்த உலகம் தர இயலாத மனஅமைதி எனக்கு கிடைத்தது. நம் தேவைகள் எந்த அளவுக்கு குறைகிறதோ அந்த அளவுக்கு மகிழ்வும் அதிகரிக்கும் என்பதையும் உணர்ந்துகொண்டேன். இந்த பந்தயப் பணம் எனக்கு வேண்டாம். அது எனக்கு மகிழ்வைத் தராது. எனவே நான் கிளம்புகிறேன். என்று அம்மடலில் எழுதப்பட்டிருந்தது. (பிரபல எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய பந்தயம் என்ற கதை). நம்மை எவரும் எதுவும் கைவிட்டபோதிலும், நம்முடன் எப்போதும் இருப்பது நம் தனிமையும், நம்மை ஒருபோதும் கைவிடாத இறைவனுமே. எனவே தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில், இறைவனை நெருங்கிவரப் பழகிக்கொள்வது, வாழ்வுக்கு சுகம் தரும். இந்த கோவிட்-19 ஊரடங்கிலும்தான்.

15 June 2020, 14:05