தேடுதல்

குளம் குளம் 

விதையாகும் கதைகள்: மனம் குளம்போல் இருந்தால்...

உனது மனத்தை குளம்போல் வைத்துக்கொள். அப்போது, கவலை என்கின்ற உப்பு அதில் கரைந்துவிட்டாலும், உனது மனம் இனிமை மாறாத குளம் போன்று இருந்தால், ஏன் உனக்கு வாழ்வு கசக்கிறது?

மேரி தெரேசா: வத்திக்கான்

தொழிலதிபர் ஒருவர், சென் துறவி ஒருவரிடம் சென்று, குருவே எனக்கு வாழ்வே சரியில்லை, தொழிலில் தோல்வி. எனது மனைவி, பிள்ளைகள் யாருமே என்னை மதிக்கவில்லை. நான் தெருவில் சென்றால் யாரும் என்னை மதிப்பதில்லை. எல்லாம் முடிந்துவிட்டது, இந்த நிலையில் நான் எப்படி வாழ்வது என்று கேட்டார். அப்போது துறவி தொழிலதிபரிடம், கவலைப்படாதே, உனக்கு ஒரு நல்ல மருந்து தருகிறேன் என்றார். ஒரு குவளையில் தண்ணீர் எடுத்தார். அதில் நான்கு கரண்டி உப்பு போட்டுப் அந்த நீரைக் குடிக்கச் சொன்னார். ஐயோ, உமட்டுது, உப்பு கக்கிறது என்று நீரை வெளியே துப்பினார் தொழிலதிபர். பின்னர் அருகிலிருந்த ஒரு குளத்திற்கு அவரை அழைத்துச் சென்று, அதிலும் நான்கு கரண்டி உப்பைப் போட்டார் துறவி. பின் அந்தக் குளத்து தண்ணீரைக் குடிக்கச் சொன்னார் அவர். எப்படியிருக்கிறது என்று கேட்டார் துறவி. தண்ணீர் சுவையாக உள்ளது என்றார் தொழிலதிபர். அது எப்படி, அதே நான்கு கரண்டி உப்பைத்தான் இரண்டிலும் போட்டேன் என்றார் துறவி. அதற்கு தொழிலதிபர், என்ன கேள்வி இது, அது ஒரு சிறிய குவளை, இது பெரிய குளம் என்றார். அப்போது துறவி அவரிடம், உனது மனத்தை ஏன் குவளையாக வைத்திருக்கிறாய், அதை குளமாக வைத்துக்கொள். உனது மனத்தை குளம்போல் வைத்துக்கொள். அப்போது, கவலை என்கின்ற உப்பு அதில், கரைந்துவிட்டாலும், உனது மனம் இனிமை மாறாத குளம் போன்று இருந்தால், ஏன் உனக்கு வாழ்வு கசக்கிறது, வாழ்வில் உமட்டல் வருகிறது என்று சொன்னார். ஆம். கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளதுபோன்று, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல்தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. பிரச்சனைகள் இல்லாத வாழ்வே கிடையாது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2020, 09:36