தேடுதல்

Vatican News
சந்தையில் மாம்பழ வியாபாரம் சந்தையில் மாம்பழ வியாபாரம்  

விதையாகும் கதைகள் : அழகுக்கு அழகூட்டும் நேர்மை

பேரம்பேசி குறைந்த விலைக்கு வாங்கியவர்களுடன், பேரம்பேசாமல் அதிக விலைக்கு வாங்கியவர்களை ஒப்பிடும்போது, இவர்கள் ஏமாற்றப்பட்டவர்களோ என எண்ணத் தோன்றுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒருமுறை மோகன் சென்னைக்கு பகல் பயணம் செல்லும்போது, சேலம் இரயில்நிலையத்தில், வயதான பாட்டி ஒருவர், இரயில் பெட்டியில் ஏறி, மாம்பழம் விற்கத் துவங்கினார். ஒவ்வொரு மாம்பழமும் பெரியதாக இருந்ததைக் கண்ட மோகன், மாம்பழம் என்ன விலை என்று கேட்டபோது 'ஒரு பழம் 80 ரூவா கண்ணு' என்று சொன்ன பாட்டியிடம், பேரம் பேசாமலேயே இரண்டு மாம்பழங்களை வாங்கிக்கொண்டார்.

அவரிடம் வியாபாரத்தை முடித்துக்கொண்டு பக்கத்து பெட்டிக்கு போய் விட்ட பாட்டியை, ஜோலார்பேட்டை நெருங்கும்போது மீண்டும் பார்த்தார் மோகன். எல்லா பழங்களும் விற்று தீர்ந்திருந்த நிலையில், மெல்ல நடந்துவந்த பாட்டி, தன் மடியில் கட்டி வைத்திருந்த ஒரு பெரிய மாம்பழத்தை எடுத்து, மோகனிடம் கொடுத்தார்.

“பாட்டி ஏற்கனவே இரண்டு பழம் வாங்கிட்டேன். அது போதும் எங்களுக்கு. எங்க வீட்டில் மொத்தமே நாலு பேர்தான். இதுவே ரொம்ப அதிகம்” என்று மோகன் சொன்னதற்கு அந்தப் பாட்டி, “இல்ல கண்ணு. இந்த வண்டில எல்லாரும் பேரம்பேசி, பேரம்பேசி, 50 ரூபாய்க்குன்னுதான் ஒவ்வொரு பழத்தையும் என்னால விக்க முடிந்தது. நீ மட்டும்தான் என்கிட்டே பேரம் பேசல. எனக்கு மனசே கேக்கல கண்ணு. மத்தவங்களுக்கு ஐம்பது ரூபாய் மதிப்பாகத்தான் தெரிந்த பழத்தை உனக்கு 80 ரூபாய்க்கு விற்றுட்டோமோன்னு மனசு உறுத்துது. இந்த பழத்துக்கு நீ ஏற்கனவே காசு கொடுத்தாச்சு, வாங்கிக்க கண்ணு' என்று சொல்லி அந்த பாட்டி பழத்தை நீட்டினார்.

அந்த பாட்டியின் நேர்மையைக் கண்டு, கண்களின் ஓரங்களில் கண்ணீர் ஒதுங்கியது மோகனுக்கு.

தன் வறுமையிலும், இப்படிப்பட்ட நேர்மையுடன் வாழும், இத்தகைய எளிய மனிதர்களால், அழகான இந்த உலகம், பேரழகாகி விடுகிறது.

12 June 2020, 12:26