தேடுதல்

Vatican News
சீக்கிய மத நம்பிக்கையாளர்கள் சீக்கிய மத நம்பிக்கையாளர்கள்   (AFP or licensors)

விதையாகும் கதைகள் : உள்ளத்தைப் பார்க்கத் தெரிந்தவரே சான்றோர்

அறிவைப் பார்க்க வேண்டிய இடத்தில், தன் உடல் குறைபாடு கண்டு எள்ளி நகைத்த சபையோரின் அறியாமை கண்டு சிரித்த ஞானி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
ஜனகர் என்னும் பெயர் கொண்ட மாமன்னர் ஒருவர் விதேகபுரி நாட்டை ஆட்சி செய்து வந்தார். அவரது அரசவையில் புகழ்பெற்ற பேரறிஞர்களும், பெரிய ஞானிகளும் இடம்பிடித்திருந்தனர். ஆதலால் அந்த சபையில் ஞான அமுதம் பெருகி வழிந்து கொண்டிருந்தது.
நல்ல விடயங்களைக் கேட்பதற்காகவும், அறிவார்ந்த பல தகவல்களை பற்றி கலந்து பேசுவதற்காகவும், பல சான்றோர்கள் ஜனகரின் சபைக்கு வருவது வாடிக்கையான ஒன்று. ஒரு நாள் அவரது அரண்மனை வாசலில் ஒரு பெரிய ஞானி வந்திருப்பதாக, வாயில் காப்பாளன் வந்து சொன்னார். அப்போது ஜனகரும், அவரது சபையைச் சேர்ந்த சான்றோர்களும் அரசவையில் கூடியிருந்தனர். வந்திருப்பது யார்? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் ஜனகருக்கு ஏற்பட்டது. எனவே அவரை உடனடியாக உள்ளே அனுமதிக்கும்படி காவலனிடம் கூறி அனுப்பினார்.
வந்தவர் மிகப்பெரிய ஞானி, அஷ்டவக்ரர். அந்த மகா முனியின் உடலில் எட்டு இடங்களில் வளைவுகள் இருக்கும். அதன் காரணமாகவே அவர், ‘அஷ்டவக்ரர்’ என்று பெயர் பெற்றார். அரசவைக்குள் நுழைந்ததும், அஷ்டவக்ரரின் வளைந்த தோற்றத்தைக் கண்ட, அவையில் கூடியிருந்த சான்றோர்கள் அனைவரும் பலமாக சிரித்தனர். ஜனகருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவருக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. ஏனெனில் அவர், அஷ்டவக்ரரின் பெருமையை உணர்ந்திருந்தார்.
சபையோரின் பலத்த சிரிப்பொலி அடங்க சிறிது நேரம் ஆனது. அவர்கள் அனைவரின் சிரிப்பொலியும் அடங்கியபிறகு, பன்மடங்கு பலமாக ஒரே ஒரு சிரிப்பொலி மட்டும் ஒலிக்கத் தொடங்கியது. அந்த சிரிப்பொலிக்கு சொந்தக்காரர், அஷ்டவக்ரர். சபையோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர், ‘இவர் எதற்காக சிரிக்கிறார்?’ என்று.
ஜனகருக்கும் அதே எண்ணம்தான். அவர் தன் இருக்கையை விட்டு எழுந்துவந்து, அஷ்டவக்ரரின் காலில் விழுந்து வணங்கினார். ‘தவ முனியே! அவையோர் அறியாமையால் சிரித்தனர். ஆனால் தாங்கள் சிரித்ததன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை?’ என்று கேட்டார்.
‘ஜனகரே! உங்களுடைய சபையில் ஞானியரும், வேதியரும் சூழ்ந்திருப்பார்கள். அவர்களுடன் பல நல்ல விடயங்களைப் பற்றி பேசி ஆனந்தம் அடையலாம் என்று எண்ணி வந்தேன். ஆனால் உமது சபையில் உள்ளவர்கள், உள்ளே உள்ளதைப் பார்க்கத் தெரியாதவர்களாகவும், புறத்தில் உள்ள தோலை மட்டும் மதிக்கும் கீழானவர்கள் போல் அல்லவா தென்படுகிறார்கள். இவர்களைக் கண்டுதான் எனக்கு பெருஞ்சிரிப்பு வந்தது’ என்றார், அஷ்டவக்ரர்.
அவையில் இருந்த அனைவரும் வெட்கத்தில் தலைகுனிந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஜனகரின் சபை, உண்மையான ஞானத் தேடலுக்கான அவையாக விளங்கியது.

 

24 June 2020, 13:51