தேடுதல்

பாரம் சுமக்கும் படகுகள் பாரம் சுமக்கும் படகுகள் 

விதையாகும் கதைகள்: தீயவர்களோடு சேருவோர், பெருமையை இழக்கின்றனர்

தீயவர்களோடு சேர்ந்து தீயவனாய்த் திரிந்த மகனை திருத்த, வணிகர் சுட்டிக்காட்டிய நிகழ்வு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

காவிரிப்பூம்பட்டிணத்தில் ஒரு பெரிய வணிகர் இருந்தார். அவர் அயல்நாடுகளிலே சென்று வர்த்தகம் செய்து பெரும் பொருள் சேர்த்திருந்தார். அவருடைய மகனோ, தீயவர்களோடு சேர்ந்து அவனும் ஒரு தீயவனாய்த் திரிந்தான். தன் மகனைத் திருத்த என்ன வழியென்று சிந்தித்துப் பார்த்தும் வணிகருக்கு ஒன்றும் புலப்படவில்லை. ஒருநாள் வணிகரும் அவர் மகனும் கப்பல்துறைக்குச் சென்றார்கள். கப்பல்களில் தம் சரக்குகள் ஏற்றுவதைக் கண்காணிப்பதற்காக வணிகர் சென்றார். கூடவே மகனை அழைத்துச் சென்றார்.

துறையின் ஒரு பக்கத்திலே தெப்பம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. சிலை செய்வதற்குரிய பளிங்குக் கல் ஒன்றைத் தொழிலாளர்கள் அந்த தெப்பத்தில் ஏற்ற முயன்று கொண்டிருந்தார்கள். அதை வணிகருடைய மகன் கவனித்தான்.

"அப்பா, இவ்வளவு பெரிய கல்லை ஏற்றினால் அந்தத் தெப்பம் அமிழ்ந்து விடாதா?" என்று கேட்டான் மகன்.

உடனே அவருள்ளத்திலே ஓர் அருமையான எண்ணம் உண்டாயிற்று. "மகனே பார்த்துக் கொண்டேயிரு" என்றார்.

சிறிது நேரத்தில் தொழிலாளர்கள் பளிங்குக்கல்லைத் தெப்பத்தில் ஏற்றிவிட்டனர். தெப்பம் அமிழவில்லை. கல்லை ஏற்றிய பின் சிலர் தெப்பத்தைத் தள்ளிக்கொண்டு புறப்பட்டனர்.

"மகனே, கல் பெரியதுதான்; கனமானதுதான். ஆனால் இலேசான தெப்பத்தையடைந்தவுடன் அது தன் கனத்தையும் பெருமையையும் இழந்துவிட்டது. தெப்பத்தோடு அதுவும் மிதக்கிறது. இது போலத்தான் பெருமையோடு வாழ்பவர்கள், அற்பர்களோடு சேர்ந்தால் தங்கள் பெருமையை இழக்கிறார்கள்," என்று சொன்னார் வணிகர்.

தந்தை தன்னைச் சுட்டிக்காட்டித்தான் பேசுகிறார் என்று மகன் தெரிந்து கொண்டான். அவர் கூற்று அவன் மனதில் சுருக்கென்று தைத்தது. நாணித் தலை குனிந்தான். அன்று முதல் அவன் தீயோர் சேர்க்கையை விட்டுவிட்டான்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2020, 13:14