தேடுதல்

இந்தோனேசியாவில் கோவிட்19  சூழலில் கல்வி இந்தோனேசியாவில் கோவிட்19 சூழலில் கல்வி 

கோவிட்-19 சூழல், டிஜிட்டல் உலகில் ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், நலவாழ்வு குறித்த முக்கியமான தகவல்களைப் பெற இயலாமல் இருக்கின்ற மக்களுக்கு, அந்நிலை, வாழ்வா, சாவா என்ற பிரச்சனையாக மாறியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், நலவாழ்வு குறித்த முக்கியமான தகவல்களைப் பெற இயலாமல் இருக்கின்ற மக்களுக்கு, அந்நிலை, வாழ்வா, சாவா என்ற பிரச்சனையாக மாறியுள்ளது என்று, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், ஜூன் 11, இவ்வியாழனன்று கூறியுள்ளார்.

வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்கள், ஐ.நா.வின் நீடித்த மற்றும், நிலைத்த வளர்ச்சித் திட்டங்களில் உருவாக்கியிருக்கும் தாக்கங்கள் குறித்து, இணையதளம் வழியாக, ஐ.நா. பொது அவையில் நடைபெற்ற விவாதத்தில் இவ்வாறு கூறினார், அந்தோனியோ கூட்டேரஸ்.

இப்போதைய கொள்ளைநோயின் எதிர்மறை விளைவுகள், ஏறத்தாழ ஒவ்வொரு துறையிலும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திற்குப் பதிலளிப்பதற்கு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது என்றுரைத்த கூட்டேரஸ் அவர்கள், நோய் தடுப்பு ஊசி மருந்து குறித்த ஆய்வு, இணையதளம் வழியாக கல்விகற்கும் முறைகள், இணையதளம் வழியாக வர்த்தகம், மற்றும் வீடுகளிலுள்ள வசதிகளைக்கொண்டு வேலைசெய்தல் போன்றவற்றை குறிப்பிட்டார்.

கோவிட்-19 கொள்ளைநோய்க்குப்பின் உருவாகும் காலத்தின் சமுதாய நிலைகளைப் புரிந்துகொள்வதற்கு, இந்த விவாதமேடை உதவுகின்றது என்றும், உலகினர் இந்நோயிலிருந்து மீண்டெழுந்தபின், டிஜிட்டல் உலகம், முந்தைய காலத்தைவிட மிக இன்றியமையாததாக மாறிவிடும் என்றும், கூட்டேரஸ் அவர்கள் தெரிவித்தார்.  

டிஜிட்டல் உலகின் பலன்களை முழுமையாக அனுபவிப்பதற்கு, அந்த உலகில் நிலவும் சமத்துவமின்மைகள் களையப்படவேண்டும், இதற்கு உலக அளவில் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும், கூட்டேரஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார். (UN)

12 June 2020, 14:15