தேடுதல்

Vatican News
கோவிட்-19 காலத்தில் சிறார் கோவிட்-19 காலத்தில் சிறார் 

கோவிட்-19, சமத்துவமற்ற கல்விக்கு வழியமைத்துள்ளது

ஐரோப்பாவிலும், மத்திய ஆசியாவிலும், 90 விழுக்காட்டிற்கு அதிகமான நாடுகளும், இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதிகளில் 77 விழுக்காட்டு நாடுகளும் இணையதளத்தைப் பயன்படுத்தி கல்வி வழங்கி வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயால், ஏறத்தாழ 120 கோடி சிறார் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றவேளை, இணையதளம் மற்றும், ஏனைய வசதிகள் இல்லாமையால், கற்றலில், உலக அளவில் சமத்துவமற்ற நிலை உருவாகியுள்ளது என்று, யுனிசெப் எனப்படும், ஐ.நா.வின் குழந்தைநல அமைப்பு, ஜூன் 05, இவ்வெள்ளியன்று  எச்சரித்துள்ளது.

பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் இணையதளம் வழியாக கல்வி கற்றுவரும் இந்நாள்களில், மாணவர்களுக்கு தொழில்நுட்பங்களும், மற்ற பொருள்களும் தேவைப்படுகின்றன என்றும், இந்த வசதி, அனைத்துப் பள்ளிகள் மற்றும், சிறாரிடம் இல்லை என்றும், யுனிசெப் அமைப்பின் கல்வித்துறை தலைவர் Robert Jenkins அவர்கள் கூறியுள்ளார்.

கல்வி கற்றல் சார்ந்த பிரச்சனை, கோவிட்-19 கொள்ளைநோய்க்கு முன்பே நிலவுகின்றது என்றும், தற்போது அந்தப் பிரச்சனை மிகவும் அதிகமாகியுள்ளது என்றும் கூறிய Jenkins அவர்கள், உலக அளவில் 71 நாடுகளில் சேகரிக்கப்பட்ட விவரங்களின்படி, அந்நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு, இணையதள வசதிகள் கிடையாது எனத் தெரியவந்துள்ளது என்று கூறினார்.

தங்கள் நாடுகளின் ஒதுக்குப்புறங்களில் வாழும் சிறார்க்கு, அதிகாரிகள் தொலைக்காட்சி வழியாக கல்வி வாய்ப்பை வழங்குகின்றனர், ஆயினும், அனைவருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடையாது என்றும், யூனிசெப் கூறியது.

ஐரோப்பாவிலும், மத்திய ஆசியாவிலும், 90 விழுக்காட்டிற்கு அதிகமான நாடுகளும், இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதிகளில் 77 விழுக்காட்டு நாடுகளும் இணையதளத்தைப் பயன்படுத்தி கல்வி வழங்கி வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது. (UN)

06 June 2020, 13:03