தேடுதல்

Vatican News
கோவிட்-19 சூழலில் குவாத்தமாலா கோவிட்-19 சூழலில் குவாத்தமாலா  (ANSA)

கோவிட்-19 உருவாக்கியுள்ள உணவு நெருக்கடியைக் களைய...

இக்காலத்திலும், வருங்காலத்திலும், அனவருக்கும் போதுமான, மற்றும், சத்தான உணவு கிடைப்பதற்கு, நாடுகள் இப்போதே நடவடிக்கை எடுக்கவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய், ஏறத்தாழ ஐந்து கோடி மக்களை வறுமைகோட்டிற்குகீழ் கொண்டுவந்து நிறுத்தும் என்றாலும், இந்தப் பிரச்சனை மற்றும், இது உருவாக்கியுள்ள மற்ற எதிர்விளைவுகளைத் தவிர்ப்பதற்கு, உலகளாவிய உணவு பாதுகாப்பு முறைகள் உடனடியாக செயல்படுத்தப்படவேண்டும் என்று, ஐ.நா. அவையின் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்காலத்திலும், வருங்காலத்திலும் அனவருக்கும் போதுமான மற்றும், சத்தான உணவு கிடைப்பதற்கு, நாடுகள் இப்போதே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, ஜூன் 9, இச்செவ்வாயன்று காணொளிச் செய்தி வழியாக வலியுறுத்தியுள்ளார், கூட்டேரஸ்.

இலட்சக்கணக்கான மக்கள், பசியால்...

இவ்வுலகில், அனைவரின் பசியை நீக்கத் தேவையான உணவு இருக்கின்றபோதிலும், 82 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இன்றும் போதுமான உணவு கிடைக்கவில்லை, இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்று கூறிய கூட்டேரஸ் அவர்கள், இந்த கொள்ளைநோய்க்கு முன்பாகவே, இலட்சக்கணக்கான மக்கள், பசியாலும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவாலும் துன்புற்றனர் என்பதையும் எடுத்துரைத்தார்.

அதேநேரம், ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால், உலகில் 5 வயதுக்குட்பட்ட ஏறத்தாழ 14 கோடியே 40 இலட்சம் சிறார், தங்கள் வயதிற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமல் உள்ளனர் என்றும், நிறைய உணவு இருக்கின்ற நாடுகளிலும்கூட, கோவிட்-19 கொள்ளைநோய், உணவு விநியோகத்தைப் பாதித்துள்ளது என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

இந்தப் புவி மண்டலத்தில் வெளியேற்றப்படும் மீத்தேன் வாயுவில் 44 விழுக்காடு உட்பட, கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தில் 29 விழுக்காட்டிற்கு, உணவு அமைப்புகள், பொறுப்பு என்பதையும், இது, பல்லுயிர்கள் மீது எதிர்மறை தாக்கத்தை விளைவிக்கின்றது என்பதையும், நம்மால் மறக்கமுடியாது என்றும், கூட்டேரஸ் அவர்கள், அந்த காணொளியில் கூறியுள்ளார். (UN)

11 June 2020, 14:26