தேடுதல்

தூய்மைப்பணியாளர்கள் தூய்மைப்பணியாளர்கள் 

வாரம் ஓர் அலசல்: அதிசயங்களை நிகழ்த்திக் காட்டுவோம்

மாபெரும் அதிசயமான நம் மனிதப் பிறவியை, அர்த்தமுள்ளதாக வாழும்போதுதான், அந்தப் பிறவி முழுமையடைகிறது. இதற்கு, நம் ஒவ்வொருவருக்குள்ளும் பொதிந்து கிடக்கின்ற சிறப்பம்சங்களைக் வெளிக்கொணர்வோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்னா என்ற ஒன்பது வயதுச் சிறுமி, பிரித்தானியாவில் ஒரு சிறு கிராமத்தில் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்துவந்தார். அந்த கிராமத்துப் பள்ளியில் நான்காம் வகுப்புவரைதான் உள்ளது. அதற்குமேல் படிக்க வேண்டுமென்றால், மற்ற நகரங்களுக்குத்தான் செல்லவேண்டும். தனது கிராமத்துப் பள்ளியில் படிப்பை முடித்த சிறுமி அன்னாவுக்கு, அந்தக் கிராமத்திற்கு அருகிலிருந்த, மிகவும் மதிப்புமிக்க பள்ளி ஒன்றில் படிப்பதற்கு இடம் கிடைத்தது. அந்தப் பள்ளிக்குச் செல்லும் நாளும் வந்தது. புதிய பள்ளி, புதிய சூழல், முதல் நாள். சிறுமி சற்று பதட்டத்தோடுதான் இருந்தார். தனது வகுப்பறைக்குச் சென்ற சிறுமி அன்னாவை, மற்ற மாணவர்கள், வித்தியாசமாகப் பார்த்தனர். ஒருவரையொருவர் பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தனர். ஏனெனில் அன்னாவின் தலைவாரல், ஆடை, தோற்றம் எல்லாமே கிராமச் சூழலை எடுத்தியம்பியது. அன்று முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது. மாணவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். அன்று வகுப்பு ஆசிரியர் மாணவர்களின் பொது அறிவுத்திறனைப் பரிசோதிப்பதற்காக, அவர்களிடம், உலகின் ஏழு அதிசயங்கள் என்ன, எல்லாரும் அவற்றை வரிசையாக எழுதுங்கள் என்றார். மாணவர்களும், தாள்களில் கடகடவென எழுத ஆரம்பித்தனர். அன்னா, தயக்கத்தோடு ஆசிரியரைப் பார்த்தார். ஆசிரியரும், உனக்குத் தெரிந்ததை எழுது என்றார். அப்போது அன்னா, “மாம், எனக்கு எத்தனையோ அதிசயங்கள் தெரியும், அவற்றில் ஏழே ஏழை மட்டும் எழுதினால் போதுமா?’’ என்று கேட்டார். ஆசிரியரும் அன்னாவை அன்போடு தட்டிக்கொடுத்து, ``போதும்’’ என்று சொன்னார். அன்னாவும் ஒரு தாளில் எழுத ஆரம்பித்தார். மற்ற அனைவரும் பதிலை எழுதிக்கொடுத்த பிறகும்கூட, அன்னா எழுதிக்கொண்டிருந்தார். எல்லா மாணவர்களும் கொடுத்தபின்தான், தன் விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்தார், அன்னா. ஆசிரியர் ஒவ்வொரு தாளாக எடுத்து,  மாணவர்களின் பதில்களை வாசிக்கத் தொடங்கினார். தாஜ்மகால், எகிப்திய பிரமிடுகள், சீனப் பெருஞ்சுவர், பாபிலோன் தொங்கும் தோட்டம், உரோம் நகரின் கொலேசேயம், இத்தாலியின் பீசா நகர் சாய்ந்த கோபுரம்.. இவ்வாறு மாணவர்கள் பலரும் எழுதியிருந்தனர். கடைசியாக ஆசிரியர், அன்னா எழுதியிருந்ததை பார்த்து அதிசயித்தார். சிறுமி அன்னா இவ்வாறு எழுதியிருந்தார். `உலகின் ஏழு அதிசயங்கள் என்னவென்றால்... நம்மால் பார்க்க முடிவது, கேட்க முடிவது, உணர முடிவது, சிரிக்க முடிவது, சிந்திக்க முடிவது, இரக்கப்பட முடிவது, அன்புகூர முடிவது...’

“நாம் ஒவ்வொருவருமே நம்மை அறியாமலேயே, நமக்குள் சில அதிசயங்களைச் சுமந்துகொண்டிருக்கிறோம்” என்று, இங்கிலாந்தைச் சேர்ந்த பல்துறை வல்லுனர் தாமஸ் பிரௌன் (Thomas Browne) அவர்கள் கூறியிருக்கிறார். பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம். துளைசெல்லும் காற்று, மெல்லிசையாதல் அதிசயம். குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம். ஒரு வாசமில்லாக் கிளையின்மேல், நறுவாசமுள்ள பூவைப்போல், பூவாசம் அதிசயம். அலைக்கடல் தந்த மேகத்தில், துளிகூட உப்பில்லாமல் பொழியும் மழை நீரும் அதிசயம். மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல், மேனிகொண்ட மின்மினிகள் அதிசயம்.... இவ்வாறு அதிசயங்களை வர்ணித்துள்ள பாடல் வரிகளைக் கேட்டிருக்கிறோம். ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டு, அவற்றால் எந்தவிதப் பாதிப்புக்களும் அடையாமல், பழங்கால உலகின், புதிரான ஒரு வரலாற்றின் அடையாளமாக, இன்றளவும் நிமிர்ந்து நிற்கும் எகிப்திய பிரமிடுகளைப் பார்த்து அதிசயிக்கிறோம். ஆனால், நம் மானிடப் பிறவியே மாபெரும் அதிசயம்தான். இந்தப் பிறவியை அர்த்தமுள்ளதாக வாழும்போதுதான், அந்தப் பிறவி முழுமையடைகிறது. நமக்குள்ளும் எத்தனை எத்தனையோ திறமைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொணர, முழுமூச்சாய் முயற்சி செய்வதைவிடுத்து, வேறு இடங்களிலும், வேறு நபர்களிலும், அவற்றைத் தேடி அலைகிறோம்.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா என்கிற கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி, இந்த உலகம் முழுவதற்குமே ஒரேயோர் எதிரியாக, மனிதரின் அறிவுக்கும், ஆணவத்திற்கும் சவால்விட்டு வருகிறது. சொந்த நாடு செல்வோம், உறவுகளைப் பார்ப்போம், நண்பர்களைச் சந்தித்து பகிர்ந்து மகிழ்வோம், முன்னேற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் ஆக்கமுடன் பங்கேற்போம்... இவ்வாறு ஓராண்டுக்கு முன்னரே மனதில் வளர்த்திருந்த ஆசைகளெல்லாம், திட்டங்களையெல்லாம் சுக்குநூறாக்கிவிட்டது அந்தக் கிருமி. மனிதரின் திட்டங்களும், கடவுளின் திட்டங்களும் வெவ்வேறு என்பதை அந்த நுண்கிருமி நிரூபித்துவிட்டது. இந்த கோவிட்-19 கிருமியின் பரவலால் இந்த உலகம் சந்தித்துவரும் பேரிடர்கள், இந்தக் கிருமிக்கு இவ்வளவு ஆற்றலா என்று, பல நேரங்களில், கவலையுடன் அதிசயிக்க வைக்கின்றது. அதேநேரம், இந்த நெருக்கடியான சூழலில் சிலர் ஆற்றிவரும் சேவைகளும் நம்மை அதிசயிக்க வைக்கின்றன. அவர்களைக் கரம்கூப்பி நன்றி சொல்ல வைக்கின்றன.  

கொரோனா கிருமி பரவல் சூழலில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இரவு பகல் பாராமல் தொடந்து உழைக்கும் துப்புரவுப் பணியாளர்கள் பலர், கால்வலி, பாத எரிச்சல், மனஉளைச்சல் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தூய்மைப்பணியாற்றும் இவர்களின் வலிகளைக் குறைப்பதற்கு, புதுச்சேரியைச் சேர்ந்த தன்னார்வலர் பாஸ்கர் அவர்கள், மகத்தானதொரு சேவையை ஆற்றி வருகிறார். பாஸ்கர் அவர்கள், அந்தப் பணியாளர்களுக்கு, இலவசமாகப் பாத அழுத்த சிகிச்சை செய்து வருகிறார். இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு வலி நீங்கி, இரத்த ஓட்டம் சீராக்கப்படுவதுடன், மன உளைச்சல் நீங்கி, நிம்மதியாக தூக்கம் வரும் என்றும், பாஸ்கர் அவர்கள் சொல்லியுள்ளார். பாத அழுத்தச் சிகிச்சை நிபுணராகிய பாஸ்கர் அவர்கள், புதுச்சேரியில் பாத அழுத்த சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். பாஸ்கர் அவர்களிடம் சிகிச்சை பெற்ற புட்லாயி என்ற தூய்மைப்பணியாளர் சொல்கிறார்..  

புதுச்சேரியில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, 6ம் வகுப்பு படிக்கும் மாணவி அக்ஷயதேவி, தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து 75 கிலோ அரிசி வாங்கித் தந்துள்ளார். இச்சிறுமியின் தந்தை பாரதி மோகன் அவர்கள், ஒரு விவசாயி.

மதுரையில் செயல்பட்டுவரும், “படிக்கட்டுகள்” என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள், மதுரையில் ஊரடங்கில் தத்தளித்த 150 குடும்பங்களைத் தத்தெடுத்து உதவி வருகின்றனர். இந்த அமைப்பு, 2012-ம் ஆண்டில் மதுரை சேது பொறியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த 25 மாணவர்களால்  உருவாக்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பில், மாணவர்கள் தவிர, இளைஞர்கள், இளம் பெண்கள், தொழில் முனைவோர் போன்ற ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கோவிட்-19 வீராங்கனைகள்

நிவேதிதா குப்தா, பிரியா ஆபிரகாம், பிரீத்தி சுதன், ரேணு ஸ்வரூப் ஆகிய நால்வர், கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளுக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் வீராங்கனைகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள் என்று, இந்து தமிழ் திசை நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த, பிரியா ஆபிரகாம் அவர்கள், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் நுண்கிருமித் துறைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, புனே நகரிலுள்ள தேசிய நுண்கிருமித் துறை நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். பிரியா அவர்கள் தலைமையிலான ஆய்வாளர் குழுதான், கொரோனா கிருமி பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகளில் இருந்து, அந்தக் கிருமியைப் பிரித்தெடுத்து, உலக சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் இதற்குப் பிறகே, அக்கிருமி குறித்த பரிசோதனைகள், தடுப்பு மருந்துகள் குறித்த ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சாதனையில், இந்தியா ஐந்தாம் நாடாக பெயர்பெற்றுள்ளது.

மருத்துவர் நிவேதிதா குப்தா அவர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மூத்த அறிவியலாளர்களில் ஒருவர். தொற்றுநோயியல் துறையில் பணிபுரியும் இவர், தொற்றுக் கிருமி நோய்கள், தடுப்பூசி, போலியோ, கடுமையான மூளை அழற்சி போன்றவை குறித்த பணிகளுக்குப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு வருகிறார். இவர், 2009ம் ஆண்டில் இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் பரவியபோது ‘கிருமித் தொற்று நோயைக் கண்டறியும் ஆய்வகம்’ அமைக்கப்படக் காரணமாக இருந்தவர். தற்போது இந்தியாவில் நிவேதிதா குப்தா அவர்களின் தலைமையின்கீழ், கொரோனா தொற்றைக் கண்டறியும் பணியில், 130க்கும் அதிகமான அரசு மற்றும், 52 தனியார் ஆய்வகங்கள் இணைந்து செயல்பட்டுவருகின்றன.

மாபெரும் அதிசயமான நம் மனிதப் பிறவியை, அர்த்தமுள்ளதாக வாழும்போதுதான், அந்தப் பிறவி முழுமையடைகிறது. இதற்கு, நம் ஒவ்வொருவருக்குள்ளும் பொதிந்து கிடக்கின்ற சிறப்பம்சங்களைக் வெளிக்கொணர்வோம். அவற்றால் மற்றவர் பயன்பெற வாழ்வோம். அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி, கொரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமுதாயத்திற்கு அளிப்போம். நம் வாழ்வில், அதிசயங்களைத் தொடர்ந்து நிகழ்த்திக் காட்டுவோம்.

வாரம் ஓர் அலசல்: அதிசயங்களை நிகழ்த்திக் காட்டுவோம்
04 May 2020, 14:34