தேடுதல்

Vatican News
கோவிட்-19 துன்பநேரத்தில் தேவையில் இருப்போருக்கு உதவி வரும் திருக்கருகாவூர்  சிவசண்முகம் கோவிட்-19 துன்பநேரத்தில் தேவையில் இருப்போருக்கு உதவி வரும் திருக்கருகாவூர் சிவசண்முகம் 

வாரம் ஓர் அலசல்: துன்பங்கள் அனைத்தும் தூசிகளே

கோவிட்-19 காலத்தில் உலகெங்கும் உயர்ந்து நிற்கும் மனிதாபிமானம் அது முடிந்தபின்னும் உயரவேண்டுமென்பதே அனைவரின் ஆவல். தனது சுகதுக்கங்களைத் தூசிகளாகத் தட்டிவிட்டு மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள எல்லாரையும் நன்றியுடன் நினைத்துப் போற்றுவோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

அந்தப் பெண் குழந்தையின் அப்பா இந்திய இராணுவத்தில் பணியாற்றினார். எனவே அக்குழந்தை பிறந்து இருபது நாள்களிலேயே பெற்றோர் அவளை வடமாநிலத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அந்தச் சிறுமிக்கு மூன்று வயது நடந்தபோது, அவளுக்கு ஒரு தம்பி, மாற்றுத்திறனோடு பிறந்தான். அந்தச் சிறுமிக்கு பத்து வயது நடக்கையில், அவளது அப்பா காஷ்மீருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அக்காலக்கபட்டத்தில் அவர் திடீரென ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவரது அப்பா உயிரோடு இருக்கும்போது, அக்குடும்பம் தமிழ்நாட்டிற்கு விடுமுறைக்கு வரும்போதெல்லாம் உறவினர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைக்கும். ஏனெனில் அவளது அப்பா, உறவினர்கள் எல்லாருக்கும் நிறைய பொருள்கள் வாங்கி வருவார். நீங்கள் எப்போது ஊருக்கு வருவீர்கள் என்று அடிக்கடி மடல்களும் அப்பாவுக்கு வரும். ஆனால் அவளது அப்பாவின் உடலோடு, அவளது தாய், சொந்த ஊருக்கு வந்தபோது உறவினர்கள் அனைவரும் வேண்டாவெறுப்போடு அவர்களைப் பார்த்தனர். அந்த வெறுப்பான பார்வையை, அந்தச் சிறுமி, அப்போதுதான் முதல்முறையாக அனுபவித்தாள். அச்சிறுமிக்கு, அந்த வெறுப்பு, சிறிதுகாலம் சென்று எல்லா விடயங்களிலும் துரோகமாக மாறிவிட்டது. மெத்தையில் படுத்து உறங்கின சிறுமி, ஆட்டுத்தொழுவத்தில் படுத்துத் தூங்கினாள். மனநிலை பாதிக்கப்பட்ட தனது தம்பியையும் வைத்துக்கொண்டு அவளது அம்மா மிகவும் கஷ்டப்பட்டார். இப்படியிருந்த சூழலில், அந்தச் சிறுமி பத்தாவது படிக்கையில், அந்தக் குடும்பத்திலிருந்த மாமா, அத்தை, சித்தி போன்றோரின் பிள்ளைகளைவிட அதிகமாக மதிப்பெண் எடுத்தாள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத உறவினர்கள் அந்தச் சிறுமியின் படிப்பை நிறுத்தி, சொத்து வெளியே போகாதபடி,  அவளுக்குச் சொந்தத்திலேயே திருமணம் செய்துவைக்கத் தீர்மானித்தனர். அதனால் 16வது வயதில் அவளுக்குத் திருமணம் நடைபெற்றது. கண்கலங்கிய அச்சிறுமியிடம் அவளது தாய், நீ இந்த திருமணத்திற்கு இணங்காவிட்டால், நாம் மூன்றுபேரும் தற்கொலைதான் செய்யவேண்டியிருக்கும் என்று சொன்னவுடன், மகளும் திருமணத்திற்கு இசைவு தெரிவித்தாள். ஏனெனில் உறவினர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், தாய்க்கும் வேறுவழி தெரியவில்லை.

திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குச் சென்றாள் அச்சிறுமி. 12வது பொதுத்தேர்வு எழுதவேண்டும். அக்குடும்பத்தில் அவளுக்கு கடும் எதிர்ப்பு. அதையும் மீறி தேர்வு எழுதச் சென்றாள். அப்போது அவள் ஏழு மாத கர்ப்பிணி. பள்ளியில் அவளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு சென்னைக்குச் சென்றார் கணவர். தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த சிறுமியை, வீட்டார் அடித்து உதைத்தனர். இதனால் கர்ப்பம் கலைந்துவிட்டது. வலியால் துடித்தார். உறவுக்காரர் ஒருவர்கூட அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவில்லை. மூன்று நாள்கள் சென்று வீட்டிற்குத் திரும்பி வந்த அவளது கணவர், அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். குழந்தை வயிற்றிலேயே இறந்து உப்பிவிட்டது. தாயைக் காப்பாற்றுவது கஷ்டம் என்று சொல்லிவிட்டார், மருத்துவர். ஆயினும் அந்த இளம் தாய் பிழைத்துவிட்டாள். அவள் வீட்டிற்கு வந்தபின் தொடர்ந்து படிக்க அனுமதிகேட்டு கெஞ்சினாள். அடுத்த குழந்தை பிறப்பதற்கு வழியைப் பார் என்று குடும்பத்தில் சொல்லிவிட்டனர். அடுத்த குழந்தையும் பிறந்தது. திரும்பவும் படிப்பதற்கு கணவரிடமும் உறவுகளிடமும் கெஞ்சினாள் அவள். சரி கல்லூரிக்குச் செல்வதற்குத்தானே தடை அதனால் தொலைதூரக் கல்வியில் படி என்று கணவர் அனுமதி கொடுத்தார். அவளின் கணவர், அந்தக் குடும்பத்தில் கூட்டுத்தொழில் செய்வதால், தானும் சூழ்நிலை கைதியாக இருக்கிறேன் என்று கூறினார். அவள் இளங்கலை முதலாமாண்டு தேர்வு எழுதியது தெரிந்த உறவுக்காரர்கள், அவளது கணவரைக் கூட்டுத்தொழிலிருந்து நீக்கிவிட்டு அவரைத் தெருவிற்குக் கொண்டுவந்து விட்டனர். அப்போதும் அந்தப் பெண் தன்னம்பிக்கையோடு படிக்கிறேன் என்று சொன்னதால், கணவரும் நீ படி, எவ்வளவு கஷ்டமானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று ஊக்கமளித்தார். அப்படியானால் நான் கல்லூரியில் சேர்ந்தே படிக்கிறேன் என்று அந்த இளம் தாய். அந்த கூட்டுக்குடும்பத்தில், 11 பேர் என்பதால், அவள் இரவு பத்து மணி முதல் காலை 3 மணி வரைதான் படிக்க முடியும். மற்ற நேரங்களில் அவ்வளவு வேலை இருக்கும். அவ்வாறு படித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக அந்தப் பெண் தேர்ச்சி பெற்றாள். இது அவளது கணவருக்குப் பெருமையாக இருந்தது. அவள் தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டாள். கணவருக்குப் பணக்கஷ்டம். இந்த நிலையில் திறமையின் அடிப்படையில், அனைத்திந்திய அளவில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு அவள் விண்ணப்பித்தாள். இராஜஸ்தான், குருஷேத்ரா ஆகிய இரு பல்கலைக்கழகங்களில் அவளுக்கு இடம் கிடைத்தது. அவள் இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் படித்து. M.Phil, Ph.D, LLB ஆகிய மூன்று பட்டங்கள் பெற்றாள். எந்தச் சட்டத்தால் உறவுக்காரர்களிடமிருந்து துரோகம் வந்ததோ அதே சட்டத்தைப் படிக்க வேண்டுமென்ற உறுதியில் சட்டம் படித்து, இழந்த சொத்துக்களை மீட்டாள். 2015ம் ஆண்டில் நாகபட்டிணத்திற்கு வந்த அவரை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் உட்பட பல அதிகாரிகள் தேடி வந்தனர். தற்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம், தான் படித்த கல்லூரியில் வகுப்பு எடுத்து வருகிறார். யார் .யார் பள்ளிக்குப்போக முடியாமல் இடையில் நிறுத்தப்பட்டார்களோ அவர்கள் மீண்டும் படிக்க உதவி வருகிறார். இவ்வாறு 2008ம் ஆண்டிலிருந்து 58க்கும் அதிகமான பிள்ளைகள் படிக்க உதவியிருக்கிறார். 11 திருநங்கைகளுக்கு இவர் உதவியிருக்கிறார். இன்றும் அவர்கள் அந்தப் பெண்ணை ஒரு தெய்வமாகப் பார்க்கின்றனர். சட்டம் தெரியாததால் தன்னைப்போல் யாரும் கஷ்டப்படக் கூடாது என்று நினைத்து, ஒவ்வொரு மாதமும் மூன்று கிராமங்களுக்குச் சென்று சட்ட உதவிகளை ஆற்றி வருகிறார் அவர். இத்தனை துன்பங்களையும் கடந்துவந்தது வேறு யாருமல்ல, இப்போது உங்கள்முன் பேசும் நான்தான், முனைவர் வினோதினி என்று சொன்னபோது அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.

இவ்வாறு முத்துப்பேட்டை A. அப்துல் ரகுமான் அவர்கள் நடத்திய ஓர் அரங்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தான் கடந்துவந்த கரடுமுரடான, வலிகள் நிறைந்த பாதை பற்றி அறிவித்தார், முனைவர் வினோதினி. ஒரு பெண்ணின் சாதனை என்பது, அந்தப் பெண் மட்டும் கஷ்டப்படுவதிலோ, தியாகம் செய்வதிலோ மட்டும் அடங்கியில்லை. மாறாக, தானும் முன்னேறவேண்டும், தன் குடும்பமும், சமுதாயமும் முன்னேறவேண்டும் என்று நினைப்பதில் உள்ளது என்று சொன்னார், முனைவர் வினோதினி. சமுதாயத்திற்கு, மேலும் பல சேவைகள் புரியவேண்டும், சாதனைகள் படைக்கவேண்டும் என்ற தனது இலட்சியத்தையும் அறிவித்தார், முனைவர் வினோதினி.

கொரோனா தன்னார்வலர்கள்

இன்றைய கொரோனா கொள்ளைநோய் காலத்தில் உலகெங்கும் பலர், தங்களின் ஏழ்மையிலும், பல்வேறு நிலைகளில் துன்புறும் பலரை நினைத்து அவர்களுக்கு உதவி வருகின்றனர். தென்னாப்ரிக்காவின் கேப் டவுனில் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் எதிர்த்து போரிட்டுவந்த புரட்சிக்குழுக்கள், போர் நிறுத்தத்தை அறிவித்து, தங்கள் சமுதாயங்களில் துன்புறும் மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றன. பெங்களூரில் தேசி மசாலா (Desi Masala) என்ற சிறிய உணவகம், ஒவ்வொரு நாளும், பத்தாயிரத்திற்கு அதிகமான ஏழை மக்களுக்கு உணவளித்து வருகிறது. இதேபோல் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள், கோவிட்-19 துன்பநேரத்தில் தேவையில் இருப்போருக்கு உதவி வருகின்றனர்.

சிவசண்முகம் என்பவர், தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள திருக்கருகாவூரில் 200 மாணவர்கள் மட்டுமே பயிலும் சிறிய பள்ளியின் தாளாளர். இவர், கொரோனா ஊரடங்கால் வாடியிருக்கும் பாபநாசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சலவைத் தொழிலாளிகள், முடிதிருத்துவோர், மூட்டை தூக்குவோர், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டடத் தொழிலாளிகள், ஆதரவற்றவர்கள், திருநங்கைகள் போன்ற பலரைத் தேடிச்சென்று, ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கி வருகிறார். இதுவரை இவரிடம் உதவி பெற்றோர் எண்ணிக்கை 650க்கும் அதிகம். நிவாரண உதவிகள் வழங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் மக்களுக்குக் கபசுரக் குடிநீர் வழங்குவதிலும், இவர் அக்கறை காட்டுகிறார். அத்துடன், பாபநாசம் தொடங்கி தஞ்சாவூர் வரைக்கும் வேனில் சென்று வழிநெடுகிலும் மக்களைக் காக்கும் பணியில் இருக்கும் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு, தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட், வெள்ளரிக்காய் போன்றவற்றையும் இவர் வழங்கி வருகிறார். இத்தனைக்கும் இவர் பெரிய பணக்காரர் இல்லை. வாடகை வீட்டில்தான் வாழ்கிறார். மற்றவர்களிடமிருந்து உதவிபெற்று மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிவசண்முகம். “பத்தாம் வகுப்புவரை பள்ளியில் மதிய உணவு. பன்னிரண்டாம் வகுப்புவரை ஒரே ஒரு சீருடைதான் எனக்கு இருந்தது. நான் பரங்கிக்காயை வீடு வீடாகப் போய் விற்றுவந்து கொடுத்த பணத்தில் அரிசி வாங்கிச் சாப்பாடு சமைத்துச் சாப்பிட்டிருக்கிறோம். இப்படி இளமையிலேயே வறுமையை உணர்ந்தவன் என்பதால் உதவுவதும் என்னுடைய குணமாக மாறியுள்ளது” . இவ்வாறு, தன்னைப் பற்றிச் சொல்லியுள்ள சிவசண்முகம் அவர்கள், இயன்றபோது மட்டுமல்ல, இயலாதபோதும் உதவிசெய்வதுதான் என் இலட்சியம்” என்று கூறியுள்ளார்.

கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுக்குத் தங்களை அர்ப்பணித்துள்ள அறிவியலாளர்கள், உலக அளவில் இத்தகைய ஓர் ஒத்துழைப்பை இதுவரைக் கண்டதில்லை என்று கூறுகின்றனர். வறிய நாடுகளுக்கு ஊசிமருந்துகளை விநியோகம் செய்வதற்கென, 740 கோடி யூரோக்களை வழங்க உறுதியளித்துள்ளனர் உலகத் தலைவர்கள். கடந்த ஏப்ரல் இறுதியில் கியூபா நாட்டிலிருந்து 200க்கும் அதிகமான மருத்துவர்கள், கொரோனா நோயாளிகள் மத்தியில் பணியாற்ற தென்னாப்ரிக்கா சென்றனர். இவர்கள்போன்று, தேவையில் இருக்கும் நாடுகளுக்கு உதவ எத்தனையோ மருத்துவப் பணியாளர்கள், தங்கள் குடும்பங்களின் நலனைக் கருதாமல் உதவி வருகின்றனர். கோவிட்-19 காலத்தில் உலகெங்கும் உயர்ந்து நிற்கும் மனிதாபிமானம் அது முடிந்தபின்னும் உயரவேண்டுமென்பதே அனைவரின் ஆவல். தனது சுகதுக்கங்களைத் தூசிகளாகத் தட்டிவிட்டு மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள எல்லாரையும் நன்றியுடன் நினைத்துப் போற்றுவோம். இந்த உலகில், இத்தகைய மனிதாபிமானம் நிச்சயம் தொடர்ந்து நிலவும் என நம்புவோம்.

வாரம் ஓர் அலசல்: துன்பங்கள் அனைத்தும் தூசிகளே
18 May 2020, 14:22