தேடுதல்

Vatican News
பாலத்தின் நடுவே தனிமனிதர் பாலத்தின் நடுவே தனிமனிதர்   (ANSA)

விதையாகும் கதைகள் : நம்மால் இயன்றதை நாமே ஆற்றுவோம்

தவத்தின் வழியாக நன்மை செய்ய விரும்பிய சீடரும், செயல்பாட்டின் வழியாக நன்மை புரிந்த தலைமைக் குருவும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஒரு சீடர் தன் குருவிடம் வந்தார். ''குருவே, நான் தவம் செய்யப்போகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்'' என்றார்.
''என்ன நோக்கத்துக்காக தவம் செய்யப்போகிறாய்?'' என்று கேட்டார் குரு.
''அதை இப்போதே சொல்ல விருப்பம் இல்லை. ஆனால், இந்தப் பகுதிக்கு ஒரு நன்மை செய்யவே தவம் செய்யப் போகிறேன்'' என்றார் சீடர்.
''இறைவன் விரைவிலேயே உன்னைச் சந்திக்க வாழ்த்துகிறேன்'' என்று ஆசீர்வதித்தார் குரு.
சீடர், ஆள் நடமாட்டம் ஏதுமற்ற ஓர் இடத்துக்குச் சென்று தனது தவத்தை ஆரம்பித்தார். 20 ஆண்டுகள் கடுமையாகத் தவம் செய்து, கடவுளிடம் வரம் பெற்றார். மகிழ்ச்சியுடன் குருவைத் தேடிவந்தார்.
''குருவே, நினைத்ததை நடத்தும் ஆற்றலை, கடவுள் எனக்கு கொடுத்துவிட்டார். நம் ஊர் எல்லையில் ஓடும் ஆற்றினால், மக்கள் அடுத்த ஊருக்கு நீண்டதூரம் சுற்றிக்கொண்டு செல்கிறார்கள். என் வரத்தின் துணைகொண்டு, ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்போகிறேன்'' என்றார்.
''அப்படியா... இதற்காகவா 20 வருடங்களை வீணடித்தாய்?'' என்று அமைதியாகக் கேட்டார் குரு. சீடருக்குக் கோபம் வந்துவிட்டது. ''நான் கடவுளிடம் வரம் பெற்றுவந்ததில் உங்களுக்குப் பொறாமை. மனம் இருந்தால், நான் செய்யப்போகும் நல்ல காரியத்தை வந்து பாருங்கள்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
ஆற்றங்கரையை அடைந்த சீடர் திகைத்துவிட்டார். அங்கே ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் இருந்தது. அதில் மனிதர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது, அவர் தோள் மீது ஒரு கை அன்புடன் தொட்டது.
சீடர் திரும்பிப்பார்த்தார். அங்கு நின்றது, அவரது குருதான். அவர் சீடரிடம், ''இதை நான்தான் கட்டினேன். நீ தவம் செய்யப் போனபிறகு, தினமும், ஓய்வு நேரத்தில், இங்கே வருவேன். கற்களை எடுத்து, ஆற்றில் போட ஆரம்பித்தேன். என்னுடன் ஒரு சிலர் உதவிக்கு வந்தார்கள். இரண்டே ஆண்டுகளில், இந்தப் பாலத்தைக் கட்டிவிட்டோம்'' என்றார்.
சீடர், பதில் பேச முடியாமல், தலைகுனிந்து நின்றார்.
 

08 May 2020, 12:24