தேடுதல்

Vatican News
கோவிட்19 மருத்துவர்கள் கோவிட்19 மருத்துவர்கள்  (AFP or licensors)

விதையாகும் கதைகள்: அன்னை என்பவர் யார்?

பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தால்தான் அன்னையா? மற்றவரை தாய்மை உள்ளத்துடன், சேவை மனப்பான்மையுடன் கவனித்துக்கொள்ளும் அனைவருமே அன்னையர்தான்

மேரி தெரேசா: வத்திக்கான்

உலக வரலாற்றில் மாபெரும் இராணுவத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறவர் செங்கிஸ் கான் (Genghis Khan, 1162–ஆக.18,1227). இவர், 1206ம் ஆண்டில், வடகிழக்கு ஆசியாவில், மங்கோலிய, துர்க்கிய இனக்குழுக்களை ஒன்றிணைத்து பேரரசை அமைத்தவர். இவர் நிறுவிய மங்கோலிய பேரரசு, பசிபிக் கடலில் இருந்து, கிழக்கு ஐரோப்பா வரை பரவி, உலகின் மாபெரும் பேரரசாகத் திகழ்ந்தது. செங்கிஸ் கானின் இராணுவம், ஹிட்லரைவிட பலமடங்கு மக்களைப் படுகொலை செய்திருக்கிறது. செங்கிஸ் கான், ஒரு சில நாடுகளைக் கைப்பற்றும்போது, ஒட்டுமொத்த மக்களையும் கொன்று குவித்துள்ளான். அதேநேரம், செங்கிஸ் கானின் மங்கோலியா பேரரசில் பெண்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது.

ஒரு சமயம், செங்கிஸ் கானின் இராணுவம் படையெடுத்து வருவதைப் பார்த்து, தாய் ஒருவர் அஞ்சி நடுங்கி, இரண்டு குழந்தைகளைச் சுமந்துகொண்டு ஓடினார். கொஞ்சம் வளர்ந்த பிள்ளையை கையில் பிடித்துக்கொண்டு, மற்றொரு குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு ஓடினார், அந்த தாய். படைவீரர்கள் அந்த தாயை நெருங்கிவரவே, இடுப்பில் வைத்திருந்த குழந்தையை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு, கையில் பிடித்திருந்த பிள்ளையுடன் ஓடினார் அவர். ஆயினும் படைவீரர்கள், அந்த தாயைச் சூழ்ந்துகொண்டனர். அப்போது குதிரையில் வந்துகொண்டிருந்த செங்கிஸ் கான், அந்த தாயிடம், “அம்மா உண்மையைச் சொல், நீ வழியில் விட்டுவந்த குழந்தை நிச்சயமாக உன் குழந்தையாக இருக்காது, வேறு ஒருவரின் பிள்ளையாகத்தான் இருக்க வேண்டும், அப்படித்தானே?” என்று கேட்டார். அதற்கு அந்த தாய், “இல்லை, நான் வழியிலேயே விட்டுவந்த அதுதான் என் குழந்தை. இந்தப் பிள்ளை, நேற்று நீ கொலைசெய்த அந்தப் பெண்ணின் குழந்தை. அந்தப் பெண் இறப்பதற்குமுன், இந்தப் பிள்ளையை என்னிடம் ஒப்படைத்து பத்திரமாக பாதுகாத்துக்கொள் என்று சொல்லிவிட்டு உயிர்விட்டார். எனவே என் குழந்தையைக் காப்பாற்றுவதைவிட, இந்தக் குழந்தையைக் காப்பாற்றுவது எனக்கு முக்கியமாகப்பட்டது” என்று சொன்னார். பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை விவரிக்கத் தேவையில்லை. 

ஆம். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்று, பல அன்னையர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தால்தான் அன்னையா, இல்லை. மற்றவரை தாய்மை உள்ளத்துடன், சேவை மனப்பான்மையுடன் கவனித்துக்கொள்ளும் அனைவருமே அன்னையர்தான்.

11 May 2020, 13:05