தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ், பஹ்ரேய்ன் மன்னர் Hamad bin Isa Al-Khalifa திருத்தந்தை பிரான்சிஸ், பஹ்ரேய்ன் மன்னர் Hamad bin Isa Al-Khalifa   (ANSA)

மே 14ம் தேதி நோன்பு நாளுக்கு உலகத் தலைவர்கள் அழைப்பு

மே 14ம் தேதியை, இறைவேண்டல் மற்றும் நோன்பு நாளாக கடைபிடிக்க மனித உடன்பிறந்த நிலை உயர்மட்டக் குழு விடுத்துள்ள அழைப்பை, பல உலகத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம்மை அச்சுறுத்தும் தொற்றுக்கிருமியிடமிருந்து இவ்வுலகைப் பாதுகாக்க, மே 14ம் தேதியை, இறைவேண்டல் மற்றும் நோன்பு நாளாக கடைபிடிக்க மனித உடன்பிறந்த நிலை உயர்மட்டக் குழு விடுத்துள்ள அழைப்பை உலகத் தலைவர்கள் பலர் ஏற்றுக்கொண்டு தங்கள் நாடுகளில் மக்கள் இதனைக் கடைபிடிக்கும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.

மனித உடன்பிறந்த நிலை உயர்மட்டக் குழு விடுத்த இந்த அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அல் அசார் பெரும் தலைவர் Sheikh Ahmed al Tayyeb அவர்களும் ஏற்றுக்கொண்டதோடு, தங்கள் சார்பில், மக்களிடம் இது குறித்து விண்ணப்பித்துள்ளதை, பாலஸ்தீனா நாட்டின் அரசுத் தலைவர், மஹ்முத் அப்பாஸ் அவர்கள் வரவேற்றுள்ளார்.

இந்த மே 14ம் தேதி வழிபாடுகளிலும், நோன்பிலும் தான் கலந்துகொள்ளப் போவதாகவும், இந்த முயற்சியில் பாலஸ்தீன மக்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படியாகவும் அப்பாஸ் அவர்கள் விடுத்துள்ள இந்த அழைப்பைத் தொடர்ந்து, பஹ்ரேய்ன் மன்னர் Hamad bin Isa Al-Khalifa அவர்களும் இதே விண்ணப்பத்தை தன் மக்களுக்கு விடுத்துள்ளார்.

திருத்தந்தையும், அல் அசார் தலைவரும் விடுத்துள்ள அழைப்பைத் தொடர்ந்து, இந்த கடினமான காலத்தில், மக்களினம் அனைத்தும் ஒருங்கிணைந்து, தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்துவது சிறந்தது என்று, ஐ.நா. அவையின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும் அழைப்பு விடுத்துள்ளார்.

மனித உடன்பிறந்த நிலை உயர்மட்டக் குழு, மே மாதம் 3ம் தேதி, 13 மொழிகளில் வெளியிட்டிருந்த விண்ணப்பம், மனிதகுலத்தைச் சேர்ந்த அனைத்து உடன்பிறப்புக்களுக்கும், குறிப்பாக, மத நம்பிக்கையுள்ள உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (Fides)

06 May 2020, 14:34