தேடுதல்

நேபாளத்தில் பறவைகள் நேபாளத்தில் பறவைகள் 

பல்லுயிர்களைக் காப்பதற்கு ஒன்றிணைந்து உழைப்போம்

நாம், இயற்கையிடம் அத்துமீறி நடந்துகொள்வது மற்றும், முக்கிய வாழ்விடங்களை அழித்து வருவது, பல்லுயிர்களுக்கு அதிக ஆபத்தாக உள்ளன. இந்நிலை, மனித சமுதாயத்தையும், நாம் விரும்பும் வருங்காலத்தையுமே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றம் உருவாக்கியுள்ள சீரழிவு, மேலும் மோசமடையாமல் இருக்கவும், தண்ணீர் மற்றும், உணவு பாதுகாப்பிற்கு உறுதிவழங்கவும், கொள்ளைநோய்களைத்  தடுக்கவும், பல்லுயிர் மேலாண்மை மிகவும் முக்கியம் என்று, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மே 22, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட பல்லுயிர் உலக நாளுக்கென, காணொளிச் செய்தி வழங்கியுள்ள கூட்டேரஸ் அவர்கள், விலங்கிடமிருந்து தொற்றியதாகச் சொல்லப்படும் கோவிட்-19 கிருமி நோய், மனிதரின் நலவாழ்வு, இந்த உலகின் இயற்கையோடு எவ்வளவு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை உணரவைத்துள்ளது என்று கூறினார்,

நாம், இயற்கையிடம் அத்துமீறி நடந்துகொள்வது மற்றும், முக்கிய வாழ்விடங்களை அழித்து வருவது, பல்லுயிர்களுக்கு அதிக ஆபத்தாக உள்ளன என்று எச்சரித்துள்ள கூட்டேரஸ் அவர்கள், இந்நிலை, மனித சமுதாயத்தையும், நாம் விரும்பும் வருங்காலத்தையுமே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

தற்போதைய நெருக்கடிநிலையிலிருந்து சிறந்த ஓர் உலகை அமைப்பதற்கு வழிகளைத் தேடிவரும் நாம், பல்லுயிர்களைக் காப்பதற்கு ஒன்றிணைந்து உழைப்போம், இதன் வழியாக, ஐ.நா.வின் நீடித்த மற்றும், நிலையான இலக்குகளை எட்ட இயலும் என்றும், கூட்டேரஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

இவ்வாறு செயல்படுவதன் வழியாக, வருங்காலத் தலைமுறைகளின் உடல்நலத்தையும், நல்வாழ்வையும் நம்மால் பாதுகாக்க முடியும் என்றும், தனது காணொளிச் செய்தியில் கூறியுள்ளார், ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்.

"நம் தீர்வுகள், இயற்கையில் இருக்கின்றன" என்ற தலைப்பில், மே 22, இவ்வெள்ளியன்று பல்லுயிர் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

பல்லுயிர் பாதுகாப்பு உலக நாள், இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து சிறப்பிக்கப்பட்டு வருகிறது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 May 2020, 15:11