தேடுதல்

Vatican News
இந்தோனேசியாவில் ஒளியேற்றி செபம்(கோப்பு படம்) இந்தோனேசியாவில் ஒளியேற்றி செபம்(கோப்பு படம்)  (AFP or licensors)

திருத்தந்தையின் அழைப்புக்கு இந்தோனேசியா பெரும் ஆதரவு

இம்மாதம் 14ம் தேதி, இந்தோனேசிய அரசும் செப வழிபாடு ஒன்றை இணைந்து நடத்தி, அதனை அரசு தொலைக்காட்சி, மற்றும், தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் 14ம் தேதியை செபம், உண்ணாநோன்பு, மற்றும், பிறரன்பின் நாளாக கடைப்பிடிக்கவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பு, மனித சமுதாயத்தில் உடன்பிறந்த உணர்வை மேம்படுத்தும் எனக் கூறி தங்கள் ஒருமித்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர், இந்தோனேசிய மத, மற்றும், அரசியல் தலைவர்கள்.

கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக இந்நாளை செபத்தின் நாளாக சிறப்பிக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், மனித உடன்பிறந்தநிலை குறித்த உயர்மட்ட அவையும் விடுத்த அழைப்பை வரவேற்பதாக கூறும் இத்தலைவர்கள், உலகிலேயே அதிக அளவில் இஸ்லாமியர்களைக் கொண்டுள்ள இந்தோனேசியாவில் திருத்தந்தையின் அழைப்புக்கு பெரிய வரவேற்பு கிட்டியுள்ளது என கூறியுள்ளனர்.

இம்மாதம் 14ம் தேதி, உலகிலுள்ள அனைத்து மதத்தினரும் அவரவர் இடங்களில் இருந்து செபிக்கும் வேளையில், அதேநாளில் இந்தோனேசிய அரசும், செப வழிபாடு ஒன்றை இணைந்து நடத்தி, அதனை அரசு தொலைக்காட்சி, மற்றும், தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

அரசுத்தலைவர் Joko "Jokowi" Widodo அவர்களால் துவக்கி வைக்கப்படவுள்ள இந்த செபவழிபாட்டில், அந்நாட்டு கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo உட்பட கிறிஸ்தவத் தலைவர்களும், இஸ்லாமிய, இந்து, புத்தம் என அனைத்து மதத்தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இது தவிர, இம்மாதம் 16ம் தேதி, சனிக்கிழமையும் இதே செப நோக்கத்துடன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது, இந்தோனேசிய அரசு. (AsiaNews)

12 May 2020, 09:45