தேடுதல்

Vatican News
Kyrgyzstanல் இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதன் 75ம் ஆண்டு நிறைவு நிகழ்வு Kyrgyzstanல் இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதன் 75ம் ஆண்டு நிறைவு நிகழ்வு   (ANSA)

75 ஆண்டுகள் கடந்தும், போரின் எதிர்விளைவால் இன்னும் பலர்...

1939ம் ஆண்டு முதல் நடைபெற்ற இரண்டாம் உலகப்போர், 1945ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி, நாத்சி கொள்கையைக் கொண்டிருந்த ஜெர்மனி சரணனடைந்ததையொட்டி, முடிவுக்கு வந்தது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இலட்சக்கணக்கான மக்களை, மே 08, 09 ஆகிய இரு நாள்களில் உலகம் நினைவுகூரும்வேளை, அமைதி மற்றும், ஒன்றிப்பை அடிப்படையாக வைத்து உலகம் அமைக்கப்படவேண்டிய தேவை உள்ளது என்று, ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

1945ம் ஆண்டு மே மாதத்தில் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததை நினைவுகூரும் நோக்கத்தில், காணொளிச் செய்தி வழியாகப் பேசியுள்ள கூட்டேரஸ் அவர்கள், அப்போரில் உயிரிழந்த அனைவருக்கும் மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்தப் போர் முடிவடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இன்றும் உலகில் பிரிவினைகள் நிலவுகின்றன என்று குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், இந்த கோவிட்-19 கொள்ளைநோய் காலத்திலும்கூட, பிரிவினை மற்றும், வெறுப்புப் பேச்சுக்களைப் பரப்பும் மக்கள் உள்ளனர், எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, இக்கொள்ளைநோயை முறியடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.   

உலக அளவில் கோவிட்-19 கிருமியால் தாக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதுபோல, வெறுப்பு மற்றும், அந்நியர் மீது காட்டப்படும் வெறுப்பும் சுனாமியாக உருவெடுத்துள்ளன என்றும், ஐ.நா. பொதுச்செயலர் கவலை தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 பரவல் நெருக்கடி காலத்தில், வெளிநாட்டவர் மீது காழ்ப்புணர்வு, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், யூதமத விரோதப்போக்கு போன்றவையும் நிலவுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கூட்டேரஸ் அவர்கள், பொதுமக்கள், நலிந்த மக்கள் மீது இரக்கம் காட்டுமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஒருவரையொருவர் மதிப்பதில், சமயத் தலைவர்கள் முன்மாதிரிகையாக விளங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், சாதாரண மக்களை ஒதுக்கும் அரசியல், சர்வாதிகாரம், தேசியவாதம், வெளிநாட்டவர் மீது வெறுப்பு போன்றவை, வன்முறை மற்றும், வெட்கத்துக்குரிய கடந்தகாலத்திற்கு உலகை இழுத்துச் செல்லும் என்று எச்சரித்துள்ளார். (UN)

09 May 2020, 12:34