தேடுதல்

Vatican News
WHO தலைமை இயக்குனர், Tedros Adhanom Ghebreyesus WHO தலைமை இயக்குனர், Tedros Adhanom Ghebreyesus  

பொது எதிரியான கோவிட் 19ன் பரவலைத் தடுக்க...

செல்வ நாடுகள் வறிய நாடுகள், என்ற எந்த பாகுபாடும் இன்றி, அனைவரையும் தாக்கியுள்ள இந்தக் கிருமியை எதிர்த்துப் போராட, அனைவரும், தங்கள் வேறுபாடுகளை விடுத்து, ஒன்றிணையவேண்டிய நேரம் இது - WHOவின் தலைமை இயக்குனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக நலவாழ்வு நிறுவனமான WHOவின் பணிகளுக்கு, அமெரிக்க ஐக்கிய நாடு, நீண்ட காலமாக, மிகவும் தாராளமாக ஆதரவு வழங்கிவந்துள்ளது என்றும், தற்போது, அந்நாட்டின் அரசுத்தலைவர் நிதி உதவியை நிறுத்துவதாக அறிவித்திருப்பது, வருத்தத்திற்குரிய முடிவு என்றும், WHOவின் தலைமை இயக்குனர், Tedros Adhanom Ghebreyesus அவர்கள் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசுத்தலைவைர் டொனால்டு டிரம்ப் அவர்கள் WHOவுக்கு வழங்கிவந்த நிதி உதவிகளை நிறுத்தப் போவதாக இச்செவ்வாயன்று அறிவித்ததையடுத்து, இப்புதனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய இயக்குனர் Ghebreyesus அவர்கள், மனித குலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் பொது எதிரியான கோவிட் 19ன் பரவலைத் தடுப்பதில், அனைத்து நாடுகளும் இணைந்து வரவேண்டும் என்று, மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்துள்ளார்.

செல்வ நாடுகள் வறிய நாடுகள், சிறிய நாடுகள், பெரும் நாடுகள் என்ற எந்த பாகுபாடும் இன்றி, மதம், இனம் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி அனைவரையும் தாக்கியுள்ள இந்தக் கிருமியை எதிர்த்துப் போராட, அனைவரும், தங்கள் வேறுபாடுகள் அனைத்தையும் விடுத்து, ஒன்றிணையவேண்டிய நேரம் இது என்று, Ghebreyesus அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

இந்த தொற்றுநோயை ஒழிக்கும் மருந்தைக் கண்டுபிடிக்க, மார்ச் 18ம் தேதி உருவாக்கப்பட்ட "ஒருங்கிணைந்த முயற்சி" (“Solidarity Trial”) என்ற திட்டத்தைக் குறித்துப் பேசிய Ghebreyesus அவர்கள், இதுவரை, இந்த திட்டத்தில் 90 நாடுகள் இணைந்துள்ளன என்றும், அவை பரிந்துரைத்துள்ள 4 மருத்துவ வழிமுறைகளுக்கு தங்களையே உட்படுத்திக்கொள்ள, இதுவரை 900 நோயாளிகள் முன்வந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மூன்று தடுப்பு மருந்துகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும், அவற்றின் விளைவுகளை அறிந்ததும், அவற்றை துரிதமாக தயாரிக்கும் வழிமுறைகள், வழங்கும் முறைகள் ஆகியவை குறித்த பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் WHO இயக்குனர் Ghebreyesus அவர்கள், செய்தியாளர்களிடம் உறுதி அளித்தார்.

பொது வாழ்விலிருந்து விலகியிருத்தல், மற்றும் சுத்தமான சூழலை உருவாக்குதல் ஆகியவை, தற்போதைய அவசியங்கள் என்று கூறிய WHO உயர் அதிகாரி, மைக்கிள் ரயன் அவர்கள், நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு அடைப்பு நிலையை குறைப்பதற்கு WHO அமைப்பு வழிகளைத் தேடிவருகிறது என்று கூறினார்.

16 April 2020, 14:04