தேடுதல்

Vatican News
மகாத்மா காந்தி மகாத்மா காந்தி  

விதையாகும் கதைகள்: காந்திஜியும், மாம்பழச்சாறும்

எத்தனையோ மக்கள் பசி பட்டினியால் வாடும்போது, இந்த விலையுயர்ந்த பழச்சாறு என் உடலுக்கு ஊட்டம் அளிக்கும் என்று கொடுத்துள்ளாய், இது எனக்குத் துன்பத்தையே அளிக்கும் – மகாத்மா காந்தி

மேரி தெரேசா : வத்திக்கான்

ஒரு மே மாதத்தில், மகாத்மா காந்தி அவர்கள், டெல்லியில் பங்கிக் காலனியில் தங்கியிருந்தார். அச்சமயம், அவரின் நண்பர்கள், ஒரு கூடை நிறைய சுவையான மாம்பழங்களைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தனர். காந்திஜி அவர்களை மிகவும் பொறுப்போடும், விழிப்போடும் பராமரித்துவந்த அவரது பேத்தி, மனுபென், அந்த மாம்பழங்களில் சிலவற்றை எடுத்து பிழிந்து, ஒரு கண்ணாடிக் குவளை நிறைய நிரப்பி அண்ணலிடம் கொடுத்தார். உடனே அவர் மாம்பழத்தின் விலை என்ன என்று கேட்டார். பாபுஜி விளையாட்டாக கேட்கிறார் என்று நினைத்து, மனுபென், எந்தப் பதிலையும் சொல்லாமல் சென்றுவிட்டார். சிறிதுநேரம் சென்று, அந்தக் குவளையை எடுக்க வந்த பேத்தியிடம், நீ மாம்பழத்தின் விலையைத் தெரிந்துகொண்டு வருவாய் என்று நினைத்தேன், உண்மையில் நீ அந்தப் பழச்சாற்றைப் பிழிவதற்குமுன், ஒரு பழத்தின் விலை என்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், இப்போது ஒரு பழத்தின் விலை பத்தணா என்று கேள்விப்பட்டேன், அப்படிப் பார்த்தால், இந்தப் பழச்சாற்றின் விலை இரண்டரை ரூபாய் ஆகிறது, எனவே இது இன்றி என்னால் இருக்க முடியும், எத்தனையோ மக்கள் பசி பட்டினியால் வாடும்போது, இந்த விலையுயர்ந்த பழச்சாறு என் உடலுக்கு ஊட்டம் அளிக்கும் என்று கொடுத்துள்ளாய், இது எனக்குத் துன்பத்தையே அளிக்கும், இதைக்கூட உன்னால் உணர முடியவில்லையே என்று சொன்னார். அந்நேரம் பார்த்து இரு புலம்பெயர்ந்த பெண்கள், தங்கள் பிள்ளைகளுடன் காந்தியடிகளைப் பார்க்க வந்தனர். உடனே அவர், இரு டம்ளர்களில் பழச்சாற்றைப் பகிர்ந்து ஊற்றி, அவற்றை அந்தப் பிள்ளைகளிடம் கொடுத்துப் பருகச் சொன்னார். பின்னர் காந்தியடிகள், கடவுள் என்றும் என் பாதுகாவலராக இருக்கிறார். நல்லவேளை, அவர் என்னைக் காக்கத் தவறவில்லை. தக்க நேரத்தில் அவர் இந்தப் பிள்ளைகளை இங்கே அனுப்பினார். இவர்களைப் போன்றவர்களே இங்கு வரவேண்டுமென்று விரும்பினேன், கடவுள் எவ்வளவு கருணையுள்ளவர் என்பதை நினைத்துப் பாருங்கள் என்று சொன்னார். அவரது பேத்தி மனுபென்னும், பாபுஜியின் மனம் துன்புறும்படி செய்துவிட்டேனே என மனம் வருந்தினார். 

23 April 2020, 11:40