தேடுதல்

Vatican News
மலைமீது அமைந்திருக்கும் ஒரு துறவு மடம் மலைமீது அமைந்திருக்கும் ஒரு துறவு மடம் 

விதையாகும் கதைகள் : குறைசொல்வதில் குறியாக இருந்தால்...

"என்னிடம் காலணிகள் இல்லை என்று குறை சொல்லி வந்தேன், இரு கால்களும் இல்லாத ஒருவரைச் சந்திக்கும்வரை." - அயர்லாந்து நாட்டின் பழமொழி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

மலைமீது அமைந்திருந்த ஒரு துறவு மடத்தில், மௌனம் காப்பது மிக மிக முக்கியமான ஒரு விதிமுறையாக கடைபிடிக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்தவர்கள், ஒவ்வொரு பத்து ஆண்டுகள் சென்றபின், இரு வார்த்தைகள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அந்த மடத்தில் புதிதாகச் சேர்ந்த ஓர் இளம் துறவி, பத்து ஆண்டுகள் சென்றபின், மடத்தின் தலைமைக் குருவைச் சந்திக்கச் சென்றார். தலைவர் அவரிடம், "நீ இங்கு பத்தாண்டுகள் இருந்துவிட்டாய். நீ சொல்ல விழையும் இரு வார்த்தைகள் என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த இளம் துறவி, "கடினமான படுக்கை" என்று கூறினார். "ஓ, அப்படியா" என்று தலைவர் சொல்லி, அவரை அனுப்பி வைத்தார்.

அடுத்த பத்தாண்டுகள் உருண்டோடின. தலைவரைக் காணச்சென்ற இளம் துறவியிடம், "இப்போது நீ சொல்ல விழையும் இரு வார்த்தைகள் என்ன?" என்று கேட்டார். இளையவர் மறுமொழியாக, "மோசமான உணவு" என்று கூறினார்.

அடுத்த பத்தாண்டுகளுக்குப் பின், தலைவரைச் சந்திக்கச் சென்ற இளம் துறவி, அவர் கேட்பதற்கு முன்னரே, "நான் போகிறேன்" என்ற இரு வார்த்தைகளைச் சொன்னார். தலைவர் அவரிடம், "நீ ஏன் போகிறாய் என்பது புரிகிறது. இங்கு வந்த நாள் முதல், குறை சொல்வதில் மட்டுமே நீ குறியாக இருந்தாய்" என்று கூறி, அவரை வழியனுப்பி வைத்தார்.

அயர்லாந்து நாட்டின் பழமொழி சொல்வது இதுதான்: "என்னிடம் காலணிகள் இல்லை என்று குறை சொல்லி வந்தேன், இரு கால்களும் இல்லாத ஒருவரைச் சந்திக்கும்வரை."

21 April 2020, 14:29