தேடுதல்

Vatican News
சவுதி அரேபியாவில் ஆட்டுச் சந்தை சவுதி அரேபியாவில் ஆட்டுச் சந்தை 

விதையாகும் கதைகள்: கடவுளுக்கு அஞ்சியதற்கு கிடைத்த பரிசு

ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், கடவுளுக்கு அஞ்சி நேர்மையாய் வாழ்ந்தால் அவரது வாழ்வு சிறப்படையும். நேர்மைக்கு கடவுளது வெகுமதி எப்போதும் உண்டு

மேரி தெரேசா: வத்திக்கான்

யூசுப் என்ற சூடான் நாட்டு மனிதர் ஒருவர், சவுதி அரேபியாவின் பாலைவனப் பகுதியில், அந்நாட்டவர் ஒருவரின் ஆட்டுப்பண்ணையின் புறவெளிப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்தப் பக்கமாக காரில் வந்த ஓர் அராபியர்,  யூசுப்பைப் பார்த்து, உனது முதலாளிக்குத் தெரியாமல் எனக்கு ஓர் ஆட்டைக் கொடு, அதற்கு இருநூறு ரியால் பணம் தருகிறேன் என்று கேட்டார். யூசுப்பின் மாத ஊதியம் நூறு ரியால்தான் என்றாலும் யூசுப் அவரிடம், என்னால் முடியாது, நான் என் முதலாளிக்குத் துரோகம் செய்ய மாட்டேன் என்று சொன்னார். அதற்கு வந்தவர், இந்தப் பண்ணையிலுள்ள நூற்றுக்கணக்கான ஆடுகளில் ஓர் ஆட்டை எடுத்துக்கொடுப்பது, உனது முதலாளிக்குத் தெரியவா போகிறது, இந்த வெயிலில் இவ்வளவு பாடுபட்டு நீ உழைப்பதால் உனது முதலாளி பெரிதாக எதுவும் உனக்குக் கொடுக்கமாட்டார். அதனால் இந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு ஓர் ஆட்டை எடுத்துக்கொடு என்று மீண்டும் கேட்டார். அதற்கு யூசுப், இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகளில் ஓர் ஆட்டை நான் எடுத்துக்கொடுத்தால் எனது முதலாளிப் பார்க்கமாட்டார்தான், ஆனால், அது என்னைப் படைத்த கடவுளுக்குத் தெரியும். நாளையோ மறுநாளோ நான் அவரிடம் போய் பதில் சொல்ல முடியாது. அதனால் நான் இந்த உலகில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, ஆனால் சொர்க்கத்தில், நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன், அதனால் என்னுடைய இந்த நேர்மையான ஊதியமே போதும், உங்களுடைய பணம் எனக்கு வேண்டாம், நீங்கள் கிளம்புங்கள் என்று சொன்னார். இதைக்கேட்டு வியந்த அந்த நபர், உன்னிடமிருந்து இப்படியொரு பதிலை நான் எதிர்பார்க்கவில்லை, உனக்கு கடவுள் அருள்புரிவாராக என்று வாழ்த்திச் சென்றார். அதேநேரம் அந்த நபரோடு சென்றிருந்த மற்றொருவர் தனது கைபேசியில், எதேச்சையாக அங்கு நின்ற ஆடுகளைப் புகைப்படம் எடுத்தபோது, யூசுப்புக்கும், அந்த அராபியருக்கும் இடையே நடந்த உரையாடலையும் பதிவுசெய்தார். அவ்விருவரும் வீடு சென்றதும், அந்த காணொளி அவரது நண்பர்கள் வழியாக சவுதி முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. இறுதியில், இச்செய்தியைக் கேள்விப்பட்ட சவுதியின் உள்துறை அமைச்சகம், ஆடு மேய்க்கும் ஓர் ஏழைக்கு இவ்வளவு கடவுள் பக்தியா என வியந்து, காவல்துறை வழியாக யூசுப்பைக் கண்டுபிடித்து, இரண்டு இலட்சம் ரியால் பரிசுத்தொகை வழங்கி கவுரவப்படுத்தியதோடு, சவுதியில் பணியாற்றும் அனைத்து பணியாளருக்கும் யூசுப்பை எடுத்துக்காட்டாக அறிவித்தது. மேலும், யூசுப் போன்றதொரு நல்ல மனிதரை, சவுதிக்குப் பணிக்கு அனுப்பி வைத்த சூடான் அரசுக்கும், நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது சவுதி அரசு. இத்தகவல், சூடான் தூதர் வழியாக சூடான் அரசுக்கு அறிவிக்கப்பட்டது. சூடான் அரசும் உடனடியாக யூசுப்பை தன் நாட்டிற்கு வரவழைத்து பலத்த மரியாதையோடு வரவேற்பும் கொடுத்து, ஒரு பெரிய பரிசுத்தொகையையும் அளித்து பாராட்டியுள்ளது.

நான் என் கடவுளுக்கு அஞ்சுகிறேன் என, அன்று யூசுப், கூறியதால் இன்று அவர் பல கோடிகளுக்கு அதிபர். ஆம். ஒருவர் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், கடவுளுக்கு அஞ்சி நேர்மையாய் வாழ்ந்தால் அவரது வாழ்வு சிறப்படையும். அவரது நேர்மைக்கு கடவுளது வெகுமதி எப்போதும் உண்டு

20 April 2020, 13:02