தேடுதல்

Vatican News
கிரேக்க மெய்யியல் மேதை சாக்ரடீஸ் கிரேக்க மெய்யியல் மேதை சாக்ரடீஸ் 

விதையாகும் கதைகள்: பயனுள்ள தகவல்களைப் பரிமாறுவோம்

மனிதர் தவிர, மரங்கள், செடிகள், விலங்குகள் போன்ற அனைத்துமே, மற்றவைகள் பற்றி வதந்திகளைப் பரப்புவதில்லை. எனவே ஒருவர் தனக்குத்தானே உண்மையாக வாழ்ந்தால், மகிழ்வாக இருக்க முடியும்

மேரி தெரேசா : வத்திக்கான்

கிரேக்க மெய்யியல் மேதை சாக்ரடீஸ் அவர்கள், ஒரு வேலையில் மூழ்கி இருந்தார். அந்நேரம் பார்த்து அவரிடம், ஒருவர், தகவல் ஒற்றைச் சொல்வதற்காக, மூச்சிறைக்க ஓடி வந்தார். வந்த வேகத்தில் ஐயா என்று அவர் குரல் கொடுக்க, நிமிர்ந்து பார்த்த சாக்ரடீஸ் அவர்கள், என்னப்பா என்று கேட்டார். ஐயா, தங்களிடம் ஒரு செய்தி சொல்ல வந்தேன் என்று, எதையோ சொல்ல முயன்றார் வந்தவர். அவசரப்படாதே நண்பா, நீ சொல்லவந்த அந்த செய்தியை மூன்று சல்லடைகளில் சலித்துப் பார்த்தாயா என்று கேட்டார். வந்தவர் விழி பிதுங்கினார். புரியவில்லை ஐயா என்றார் அவர். அதாவது முதல் சல்லடை, உண்மையல்லாதவற்றைத் தடுத்து நிறுத்திவிடும். நீ சொல்ல வந்த செய்தி உண்மையானதா என்று சாக்ரடீஸ் அவர்கள் கேட்க, அது எனக்குத் தெரியாது, மற்றவர்கள் பேசிக்கொண்டார்கள், அவ்வளவுதான் என்றார் அவர். இரண்டாவது சல்லடை, கெட்ட செய்திகளைத் தடுத்துவிடும், நீ சொல்ல வந்தது நல்ல செய்தியா என்று மெய்யியல் மேதை கேட்க, இல்லை என்றார் வந்தவர். மூன்றாவது சல்லடை, மற்றவர்களுக்குத் துன்பம் தரும் செய்திகளைத் தடுத்துவிடும். நீ சொல்ல வந்தது மற்றவர்களுக்கு நன்மை தரக்கூடியதா என்று சாக்ரடீஸ் அவர்கள் கேட்க, அதற்கும் இல்லை என்றார் வந்தவர்.  அப்படியானால், நீ என்னிடம் சொல்ல வந்த செய்தி, உண்மையானது அல்ல, நல்ல செய்தியும் அல்ல, அதனால் யாருக்கும் நன்மையோ மகிழ்ச்சியோ ஏற்படக்கூடியதும் அல்ல, சரிதானே என்று கேட்க, ஆமாம் என்றார் வந்தவர். அருமை நண்பா, அப்படிப்பட்ட செய்தியைப் பேசி, நாம் ஏன் நமது நேரத்தையும் உழைப்பையும் வீணாக்க வேண்டும் என்று சொல்ல, வந்தவர் பதில் சொல்லாமல் திரும்பிச் சென்றார்.

16 April 2020, 11:17