தேடுதல்

Vatican News
பச்சை பசேலென வேப்ப மரம் பச்சை பசேலென வேப்ப மரம்  (©taweepat - stock.adobe.com)

விதையாகும் கதைகள்: உதிராத கடைசி இலை!

சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலே போதும். செடிகளும், பூக்களும் பூத்துக்குலுங்க ஆரம்பித்து விடும்!

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேருகிறார். அவர் மனதில் அணுவளவுகூட, தான் குணமடைவேன் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டு, உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. ஆனால் அவரைப்  பேணும் செவிலிப் பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவரை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அவரது அறையின் வெளியில் ஒரு மரம், தனது இலைகளை  தினமும் உதிர்த்துக்கொண்டே வந்தது. அந்தக் காட்சி அவரை மிகவும் பாதித்தது. அதைச் சுட்டிக்காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாகப் புலம்ப ஆரம்பித்தார். நாளாக ஆக, மரத்தின் ஓர் இலையைத் தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போயின. அந்தக் கடைசி இலை விழும்போது, தானும் இறந்துவிடுவோம் என அஞ்சினார். அந்தச் செவிலிப்பெண்,  எவ்வளவு தைரியம் சொல்லியும், அவர் நம்பவில்லை. நாளைக் காலை கடைசி இலை உதிரும்போது தானும் உதிர்வேன் என்றே நம்பினார். பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை.! இதைக் கண்டதும் அவருக்கு மகிழ்ச்சி பிறந்துவிட்டது. நம்பிக்கை விதை முளை விட்டது. அந்த ஒற்றை இலைபோல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்தார். மருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்து விரைவில் குணமடைந்தார். அவர் வீட்டுக்குச்  செல்லும் நாள் வந்தது. அந்தச் செவிலிப்பெண் வந்து அவரை மரத்தருகில் அழைத்துச் சென்று, அந்த ஒற்றை இலையைப் பறித்து அவரிடம் தந்தார். அது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது, அப்போது அவருக்குத் தெரிந்தது. அதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்குமுன், ஓர் ஓவியரைக் கொண்டு வரைந்து, மரத்தில் பொருத்தியிருந்தார். அது, நோயாளியின் நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது.

ஆம், சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலே போதும். செடிகளும், பூக்களும் பூத்துக்குலுங்க ஆரம்பித்து விடும்!

17 April 2020, 13:04