தேடுதல்

Vatican News
இயற்கைக்கு நம் இதயத்தோடு உரையாடும் சக்தி உள்ளது இயற்கைக்கு நம் இதயத்தோடு உரையாடும் சக்தி உள்ளது  

விதையாகும் கதைகள் : தன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை!

நீயே உன்னை உற்றுக் கவனி. எதையெல்லாம் நிறுத்த வேண்டும், எதையெல்லாம் மாற்றவேண்டும் என்பது உனக்கே தெரியவரும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

வாழ்க்கை மீது மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த மன்னர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் தன் தேரில் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த மனிதரைப் பார்த்தார். எளிமையான உடைகளுடன் இருந்த அந்த மனிதரின் முகத்தில் பேரானந்தம் தாண்டவமாடுவதை ஆச்சரியத்துடன் நோக்கினார். அந்த ஞானி முன் அமர்ந்து, "நான் ஓர் அரசன். எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாத எண்ணமே என்னை வதைத்துக்கொண்டிருக்கிறது. என் பிரச்சனையை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் ஒளியுடைய முகம் என்னை ஈர்த்தது. நான் சாவதற்கு முடிவு எடுத்துள்ளேன். என் பிரச்சனை என்னவென்று அதற்கு முன்னர் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றார் மன்னர். மன்னன் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த ஞானியின் பார்வை மன்னரின் கால்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. மன்னருக்குச் சிறு வயது முதலே காலாட்டுகிற பழக்கம் உண்டு. அந்த ஞானி தன் கால்களைப் பார்க்கிறார் என்பதை அறிந்த மன்னர் சட்டென்று காலாட்டுவதை நிறுத்திவிட்டார். "மன்னனே உனக்கு எவ்வளவு காலமாக காலாட்டுகிற பழக்கம் உள்ளது?" என்று கேட்டார் ஞானி. தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் காலாட்டுவதாக மன்னர் பதில் கூறினார். "இப்போது நீ ஏன் காலாட்டுவதை நிறுத்திவிட்டாய்?" என்று கேட்டார் அவர். "நீங்கள் என் கால்களையே கவனித்தீர்கள்" என்று பதிலளித்தார் மன்னர். "நான் உன் கால்களையே கவனித்ததால் உன் நீண்ட நாள் பழக்கத்தை நிறுத்திவிட்டேன் என்கிறாய். இனிமேல் நீயே உன்னைக் கவனி. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது, உனக்கே தெரியவரும் என்று கூறினார் அந்த ஞானி. மன்னரின் இருண்ட மனதில் ஓர் ஒளிக்கீற்று தெரியத் தொடங்கியது. மன்னர் அவர் காலில் விழுந்து வணங்கினார். தன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை என்பதை அறிந்த மன்னரின் தேர் இப்போது அரண்மனை நோக்கி ஓடத் தொடங்கியது.

22 April 2020, 13:33