தேடுதல்

Vatican News
பிரெஞ்சு அரசுத்தலைவர், இம்மானுவேல் மக்ரோன் பிரெஞ்சு அரசுத்தலைவர், இம்மானுவேல் மக்ரோன்  (AFP or licensors)

ஆப்ரிக்க நாடுகளின் கடன் சுமையை நீக்கிய பிரெஞ்சு அரசுத்தலைவர்

கோவிட் 19 தொற்றுக்கிருமியை எதிர்த்துப் போராடும் ஆப்ரிக்க மக்களுக்கு உதவும் வகையில், அவர்களின் கடன்களை நீக்குவது இவ்வேளையில் தேவையானது - அரசுத்தலைவர் மக்ரோன்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 நெருக்கடியால் இவ்வுலகம் துன்புறும் இவ்வேளையில், ஆப்ரிக்க நாடுகளின் மீதுள்ள கடன் சுமையை தள்ளுபடி செய்வதாக, பிரெஞ்சு அரசுத்தலைவர், இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அவர்கள் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் தற்போது நிலவும் முழு அடைப்பு நிலை, மே 11ம் தேதி வரை நீடிக்கும் என்பதை, ஏப்ரல் 13, இத்திங்களன்று அறிவித்த வேளையில், இந்த தொற்றுக்கிருமியை எதிர்த்துப் போராடும் ஆப்ரிக்க மக்களுக்கு உதவும் வகையில், அவர்களின் கடன்களை நீக்குவது இவ்வேளையில் தேவையானது என்று அரசுத்தலைவர் மக்ரோன் அவர்கள் குறிப்பிட்டார்.

நாம் வாழ்வது உண்மையை உணர்வதற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு நேரம் என்று கூறிய பிரெஞ்சு அரசுத்தலைவர், மக்ரோன் அவர்கள், இனி நாம் சந்திக்கப்போகும் புதிய உலகில், புது வழிகளில் ஒருங்கிணைப்பும், கூட்டுறவு முயற்சிகளும் இடம்பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் 12, உயிர்ப்புப் பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ‘ஊர்பி எத் ஓர்பி’செய்தியில், உலகளாவிய பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படுவதற்கும், வறிய நாடுகளின் கடன் சுமைகள் மன்னிக்கப்படுவதற்கும் அழைப்பு விடுத்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்குதலில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், இத்தாலி, இஸ்பெயின் ஆகிய இரு நாடுகளைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டில், 14,000த்திற்கும் அதிகமானோர் இந்நோயின் தாக்குதலால் இறந்துள்ளனர்.

இந்நாட்டில், மார்ச் 17ம் தேதி ஆரம்பமான முழு அடைப்பு, ஏப்ரல் 14 தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது, முழு அடைப்பு மே மாதம் 11ம் தேதி வரை நீடிக்கும் என்று அரசுத்தலைவர் மக்ரோன் அவர்கள் அறிவித்துள்ளார்.

15 April 2020, 14:43