தேடுதல்

Vatican News
குழந்தைகளுக்கு உணவு வழங்கும் அமைப்புகள் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் அமைப்புகள்  (AFP or licensors)

கல்வி நிலைய மதிய உணவின்றி வாடும் மாணவர்கள்

கொரோனா தொற்றுநோய் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு கல்வி நிலையங்களால் வழங்கப்பட்டு வந்த சத்துணவை, வேறு வழிகளில் தற்போதைக்கு வழங்குவது குறித்து அரசுகள் சிந்திக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தற்போதைய கொரோனா தொற்றுநோய் பிரச்சனையால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி நிலையங்கள் வழியாக மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்துவந்த சிறார்களின் வருங்காலம் குறித்து அரசுகள் சிந்திக்கவேண்டும் என, ஐ.நா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

தற்போதைய நோய் நெருக்கடியால் 37 கோடி சிறார்கள், தங்கள் மதிய உணவை இழந்துள்ளனர் என கவலையை வெளியிட்டுள்ள WFP எனும் உலக உணவு திட்ட நிறுவனம், மற்றும், UNICEF எனும் குழந்தைகளுக்கான அவசரகால நிதி அமைப்பு, மதிய உணவு கிட்டாத நிலையில், இக்குழந்தைகளுக்கு போதிய சத்துணவு இல்லாமையால், நலப்பிரசனைகளும் உருவாகக்கூடும் என்ற அச்சத்தையும் வெளியிட்டுள்ளன.

நாளொன்றுக்கு, ஒருமுறைமட்டுமே உணவு என்ற நிலையில் வாழ்ந்துவந்த பல இலட்சக்கணக்கான சிறார்கள், பசியால் வாடுவதுடன், அதன் விளைவாக, பல்வேறு நலப்பிரசனைகளையும் எதிர்நோக்கும் நிலைகளைக் களைய வேண்டுமெனில், அரசு சிறப்புக் கவனம் எடுத்துச் செயல்படவேண்டும் என, இந்த ஐ.நா. அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

கல்வி நிலையங்களில் மதிய உணவு வழங்குதல் வழியாக, பெண் குழந்தைகளின்  கல்விக்கு உதவுவதுடன், அவர்கள், குடும்பங்களில், தவறாக நடத்தப்பட்டுதல், மற்றும், குழந்தை பருவ திருமணங்களைத் தடுக்கவும் உதவுகின்றன, எனக் கூறும் இந்த அமைப்புகள், பள்ளிகள் வழியாகவே குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவது இன்னுமொரு வரப்பிரசாதம் என மேலும் கூறியுள்ளன.

கொரோனா தொற்று நோய் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், அவர்களுக்கு கல்வி நிலையங்களால் வழங்கப்பட்டு வந்த சத்துணவு, தடுப்பூசிகள், பாதுகாப்பு, கல்வி போன்றவைகளை வேறு வழிகளில் தற்போதைக்கு வழங்குவது குறித்து, ஏழை நாடுகளுடன் இணைந்து திட்டமிட்டு, உழைத்து வருவதாகவும், ஐ.நா.வின் WFP, மற்றும், UNICEF அமைப்புகள் அறிவித்துள்ளன. (UN)

30 April 2020, 14:52