தேடுதல்

Vatican News
புனித அன்னை தெரேசா, Javier Perez de Cuéllar புனித அன்னை தெரேசா, Javier Perez de Cuéllar  

ஐ.நா. முன்னாள் பொதுச்செயலர் Javier Perez de Cuéllar மறைவு

ஜவஹர்லால் நேரு விருது உட்பட எண்ணற்ற விருதுகளை தன் அமைதிப்பணிகளுக்கென பெற்றுள்ளவர், ஐ.நா அவையின் முன்னாள் பொதுச்செயலர் Javier Perez de Cuéllar

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐ.நா. அவையின் முன்னாள் பொதுச்செயலர் Javier Perez de Cuéllar அவர்கள், மார்ச் 4, இப்புதன்று, தன் 100வது வயதில், காலமானார். பெரு நாட்டைச் சேர்ந்த Perez de Cuéllar அவர்கள், இலத்தீன் அமெரிக்காவிலிருந்து, இவ்வுயர் பதவியை வகித்த ஒரே நபர் ஆவார்.

பெரு நாட்டு தலைநகரில் 1920ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி பிறந்த Perez de Cuéllar அவர்கள், ஐ.நா. நிறுவனத்தின் 5வது பொதுச்செயலராக 1982ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டுவரை, அனைத்துலக சமூகத்தை வழிநடத்திச் சென்றார்.

இவரின் மரணம் குறித்து தன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ குட்டேரஸ் அவர்கள், 1946ம் ஆண்டு, ஐ.நாவின் முதல் பொது அவைக் கூட்டத்தில் பங்குபெறத் துவங்கியதிலிருந்து, தன் வாழ்நாள் முழுவதும் Perez de Cuéllar அவர்கள், ஐ.நா.வில் நல்ல பாதிப்புக்களை உருவாக்கினார் என அதில் தெரிவித்துள்ளார்.

Perez de Cuéllar அவர்கள், ஐ.நா. பொதுச்செயலராக பதவி வகித்த காலத்தில், Falkland தீவுகள் குறித்த விவகாரத்தில், இங்கிலாந்திற்கும் அர்ஜென்டினாவிற்கும் இடையே  அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது, நமீபியா நாட்டின் விடுதலைக்காக உழைத்தது, ஈரான்-ஈராக் போரை முடிவுக்குக் கொணர்ந்தது, லெபனானில் சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பிணையக் கைதிகளை விடுவிக்க உதவியது, கம்போடியா, மற்றும், எல் சால்வதோர் நாடுகளில் அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உதவியது, நிக்கராகுவா நாட்டில், அரசியல் நிலையான தன்மைக்கு உதவியது, ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வெளியேற வழிவகுத்தது போன்றவை முக்கியமானவை.

அனைத்துலக புரிந்துகொள்ளும் தன்மைக்கென Olof Palme விருது, மற்றும், ஜவஹர்லால் நேரு விருது உட்பட, எண்ணற்ற விருதுகளை தன் அமைதிப்பணிகளுக்கென பெற்றுள்ளார் Perez de Cuéllar.

Perez de Cuéllar அவர்கள் ஐ.நா. பொதுச்செயலராக பணியாற்றிய காலத்தில் 1989ம் ஆண்டு, ஐ.நா. அமைதி காப்புப்படை நொபெல் அமைதி விருதைப் பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.(UN)

05 March 2020, 15:21