தேடுதல்

Vatican News
ஐஸ்லாந்து காடுகள் ஐஸ்லாந்து காடுகள்  (AFP or licensors)

மார்ச் 21, உலக வன நாள்

உலக நிலப்பரப்பில் 30 விழுக்காட்டு அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் தாவர வகைகள் உள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நிலங்கள் தரிசாக மாறி வருதல் மற்றும், காடுகள் இழப்பு பற்றி, இயற்கையின் மிக உன்னதமான ஆண்டாகிய, 2020ம் ஆண்டில் உலகினர் அனைவரும் சிந்தித்துப் பார்க்குமாறு, ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மார்ச் 21, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக வன நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், “பல்லுயிர் பாதுகாப்புக்கு காடுகளைக் காப்போம்” என்ற, இவ்வாண்டு உலக நாளின் குறிக்கோளைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டின் இந்நாள், காடுகளுக்கும் பல்லுயிர்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி சிறப்பாகச் சுட்டிக்காட்டுகிறது என்றும், வேளாண்மைக்காக காடுகள் அழிக்கப்படுவது கடந்த 25 ஆண்டுகளில், குறைந்துவந்தாலும், பெருமளவான காடுகள் தொடர்ந்து இழக்கப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.

உலகின் வன வளத்தை பாதுகாக்கவும், அதனைப் பற்றிய விழிப்புணர்வை உலகளவில் உணர்த்தவுமென, ஐக்கிய நாடுகள் பொது அவை, 2012ம் ஆண்டில், மார்ச் 21ம் தேதியை உலக வன நாளாக கொண்டாடத் தீர்மானித்தது.

வெப்பமண்டலக் காடுகள், உலகில் வாழும் ஐம்பது விழுக்காட்டு உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன. உலக நிலப்பரப்பில் 30 விழுக்காட்டு அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் தாவர வகைகள் உள்ளன. ஆயினும், தற்போது காடுகள் பல வழிகளில் அழிக்கப்படுவதால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் ஏறத்தாழ 24 விழுக்காட்டுப் பகுதி, காடுகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 17.59 விழுக்காட்டு பகுதியில் காடுகள் அமைந்துள்ளன. இந்தியாவில் உள்ள தாவரங்களில் மூன்றில் ஒரு பகுதி தமிழக வனங்களில் உள்ளன. (UN)

21 March 2020, 15:33