தேடுதல்

Vatican News
போரால் சிதைந்துள்ள இத்லிப், சிரியா போரால் சிதைந்துள்ள இத்லிப், சிரியா  (AFP or licensors)

சிரியாவின் பிரச்சனைக்கு அமைதியான தீர்வு முக்கியம்

2011ம் ஆண்டில் சிரியா அரசுத்தலைவர் பாஷர் அல்-அசாத் அவர்களுக்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கப்பட்ட சனநாயக ஆதரவு போராட்டங்கள், உலக சக்திகள் உள்ளிட்ட சிக்கல் நிறைந்த போராக உருவெடுத்துள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிரியாவில் போர் தொடங்கி மார்ச் 15, இஞ்ஞாயிறோடு ஒன்பது ஆண்டுகள் நிறைவுறும்வேளை, அந்நாட்டுப் பிரச்சனைக்கு, உடனடியாக அமைதியான தீர்வு காணப்படவேண்டியது இன்றியமையாதது என்று, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

சிரியாவில் பத்தாவது ஆண்டாகத் தொடரும் போர், கடந்த ஒன்பது ஆண்டுகளில், வெறும் அழிவுகளையும், துன்பங்களையுமே கொண்டுவந்துள்ளது, இதில் அப்பாவி குடிமக்களே கடுமையான விளைவுகளைச் சந்தித்துள்ளனர், இதற்கு இராணுவத் தீர்வே கிடையாது, எனவே, தூதரக முறையில் தீர்வு காண்பதற்கு காலம் கனிந்துள்ளது என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

சிரியாவில் போர் தொடங்கி ஒன்பது ஆண்டுகள் முடிவதையொட்டி, தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவுசெய்துள்ள கூட்டேரஸ் அவர்கள், 2011ம் ஆண்டில் சிரியா அரசுத்தலைவர் பாஷர் அல்-அசாத் அவர்களுக்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கப்பட்ட சனநாயக ஆதரவு போராட்டங்கள், உலக சக்திகள் உள்ளிட்ட சிக்கல் நிறைந்த போராக உருவெடுத்துள்ளன என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் ஒரு கோடியே 10 இலட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு நிவாரண உதவி தேவைப்படுகிறது, இவர்களில் ஏறத்தாழ பாதிப்பேர் சிறார் என்று ஐ.நா. கூறியுள்ளது. (UN)

14 March 2020, 15:51