தேடுதல்

Vatican News
எகிப்தில்  ஒட்டகத்தில் சுற்றுலா பயணிகள் எகிப்தில் ஒட்டகத்தில் சுற்றுலா பயணிகள்   (AFP or licensors)

விதையாகும் கதைகள் : நூறு ஒட்டகங்களும், பிரச்சனைகளும்

அனைத்து பிரச்சனையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால், இந்த உலகத்தில் யாராலும் தூங்க முடியாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

"ஓடிக்கொண்டே இருக்கிறேன்.. பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்.. தூங்க முடியவில்லை. எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே துறவியின் முன்பாக வந்தார் ஒருவர்.

துறவி அவரிடம் "தோட்டத்திற்கு சென்று, அங்குள்ள 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா.." என்றார்..

"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவர் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை.." என்றார்.

"என்ன ஆச்சு?" என்றார் துறவி.

"சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன. சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அனைத்து ஒட்டகங்களையும் படுக்கவைக்க முடியவில்லை. சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன. அனைத்து ஒட்டகங்களையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை. அதனால் நான் தூங்குவதற்குப் போகவே இல்லை" என்றார்.

துறவி சிரித்தபடியே, "இதுதான் வாழ்க்கை.. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது. சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்.. சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம். ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிகாக எழலாம். அனைத்து பிரச்சனையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால், இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது. பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக்கொண்டே இருக்காதே. தீர்க்க முடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்" என்றார்.

18 March 2020, 10:23