தேடுதல்

Vatican News
பூசணிக்காய் பூசணிக்காய் 

விதையாகும் கதைகள்: தன்னையே சுடும் பொறாமை

வரப்போகும் ஆபத்தை முன்னமே அறிந்து தன்னைக் காத்துக்கொள்ளும் அறிவுடையோரை, நடுங்கும்படியான துன்பம் எதுவும் தாக்காது

மேரி தெரேசா: வத்திக்கான்

அந்த கிராமத்தில் ஆசிரியர் அன்பழகன் அவர்கள், அறிவுப் புலமையோடு, அன்பும், அடக்கமும் உள்ளவராய் விளங்கினார். அவர், அந்த கிராமத்தில் ஏழைக் குழந்தைகளுக்காக கல்வி நிலையம் ஒன்றை நடத்தி, சிறந்த கல்வியையும் வழங்கி வந்தார். கிராம மக்களும் ஆசிரியர் மீது நன்மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். அதே கிராமத்தில் வாழ்ந்துவந்த ராகவன் என்ற செல்வந்தன், ஒரு முரடன். கிராம மக்கள் அவனை மதிப்பதே இல்லை. கிராம மக்கள், தனக்கு மரியாதை கொடுக்காமல் ஆசிரியருக்குக் கொடுக்கின்றனரே என்று, ஆசிரியர் அன்பழகன் மீது பொறாமை கொண்டான் ராகவன். ஆதலால் ஆசிரியரை எந்த இடத்தில் சந்தித்தாலும் வம்புக்கு இழுப்பான், அவரை அவமானப்படுத்த நினைப்பான். ஒருநாள், ஆசிரியர் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், ராகவன், தன் இரு நண்பர்களுடன், தன் தோட்டத்திலிருந்து பறித்த ஒரு பூசணிக்காயுடன் வந்தான். அவன் ஆசிரியரை வழிமறித்து, வம்புக்கு இழுத்தான். நான் வீட்டுக்கு அவசரமாகச் செல்கிறேன், என்னைப் போகவிடு என்று கேட்டுப் பார்த்தார் ஆசிரியர். அவன் விடுவதாய் இல்லை. உனக்கு இப்போது என்ன வேண்டும் என்று கேட்டார், ஆசிரியர். நீங்கதான் பெரிய அறிவாளியாச்சே, நான் கேட்கும் கேள்விக்குப் பதில்சொல்லிவிட்டுப் போங்க என்றான் ராகவன். என் கையிலுள்ள பூசணிக்காயின் எடை எவ்வளவு, நீங்கள் சொல்வது சரியாக இருந்தால் அதை நிறுத்துப் பார்ப்போம், இல்லாவிடில் நீங்கள் முட்டாள் என அறிவிப்போம் என்று திமிராகப் பேசினான் ராகவன். சிறிது நேரம் சிந்தித்த ஆசிரியர், இந்த பூசணிக்காய், உன் தலையின் எடைதான், வேண்டுமானால் நிறுத்துப் பார்த்துக்கொள் என்று சொன்னார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராகவன், பூசணிக்காயின் எடையை சரிபார்க்க, நம் தலையை அல்லவா வெட்ட வேண்டும் என்று சொல்லி, அவன் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு ஓடியே போனான். அதன்பின் ராகவன், ஆசிரியரிடம் வம்பு செய்வதையே நிறுத்திக்கொண்டான்.

ஆம். பொறாமை படைத்தவர்கள், அவமானத்தைத் தேடிச் செல்லவே அவசியமிருக்காது. ஏனெனில் அத்தகையோரிடம் அது தானாகவே வந்துசேரும். இதே குணம் உடையவர்க்கு, எதிரியும், அவர்களின் அந்த குணம்தான்.

12 March 2020, 14:47