தேடுதல்

Karen Mandau Karen Mandau 

விதையாகும் கதைகள்: செல்வங்களை முறையாகப் பயன்படுத்தினால்...

இந்த உலகிலுள்ள பொருள்களை முறையாகப் பயன்படுத்தினால் மகிழ்ச்சி கிடைக்கும். அந்தப் பொருள்களுக்கெல்லாம் உரிமைக் கொண்டாடத் தொடங்கினால் கவலை அதிகரிக்கும்

மேரி தெரேசா: வத்திக்கான்

புத்தமதத் துறவி ஒருவர், ஓர் ஊரின் ஒதுக்குப்புறத்தில், ஒரு மரத்தடியில் மிக எளிமையாக வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தப் பகுதி மன்னர், ஒரு நாள் அந்தத் துறவியிடம் சென்று, அவர் பாதம்தொட்டு வணங்கினார். ஐயா, தாங்கள் இனிமேல் என் அரண்மனையிலேயே தங்க வேண்டும், அதனால் தங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன் என்று சொன்னார். அப்படியா, சரி, அரண்மனைத் தேரைக் கொண்டு வா, ஏனெனில் அரண்மனைக்குப் போகும்போது அதற்குத் தகுந்த ஆடம்பரத்துடன் செல்ல வேண்டும் என்றார் துறவி. இதைக் கேட்டதும் மன்னருக்கு மனதிற்குள்ளே சந்தேகம் முளைத்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, தேரை வரவழைத்தார். அது வந்ததும், மிக உற்சாகமாக ஏறி அமர்ந்தார் துறவி. மன்னர் அவர் அருகில் அமர்ந்தார். தேர் அரண்மனையை அடைந்ததும், அதைக்கொண்டு வா, இதைக் கொண்டு வா என கட்டளையிட்டார் துறவி. இங்கு இருந்தால் மன்னரைப்போல் இருக்க வேண்டும் அல்லவா என்றும் துறவி சொன்னார். இரவில் பஞ்சு மெத்தையில் ஆழ்ந்து தூங்கினார். பகலில் அரண்மனைத் தோட்டத்தில் நடைபயணம், நீச்சல் குளத்தில் குளியல், ஆடம்பரமான ஆடை என்று துறவி மகிழ்வாக, எந்தக் கவலையுமின்றி  வாழ்ந்துகொண்டிருந்தார். மன்னரால் அவ்வாறு இருக்க முடியவில்லை. அதனால் ஒரு நாள் துறவியிடமே சென்று தங்களிடம் பேச வேண்டும் என்று கேட்டார் மன்னர். நான் மரத்தடியில் வாழ்ந்துவந்தபோது அடிக்கடி வந்து சந்தித்து ஏதாவது விளக்கம் கேட்பாய், ஆனால் இப்போது என்னை நீ சந்திப்பதே கிடையாது, நீ கேட்க நினைப்பதை தாராளமாக கேள் என்றார் துறவி. ஐயா, நாம் இருவரும் இப்போது அரண்மனையிலேதான் இருக்கிறோம், ஆனால் தாங்கள் மகிழ்வாக இருக்கிறீர்கள், நான் அப்படியில்லை, இவ்வளவுக்கும் தாங்கள் முன்பிருந்த நிலையில்கூட இல்லை, நம் இருவருக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டார், மன்னர். சரி சற்று என்னோடு வா என்று மன்னரை அந்த நகர எல்லைக்கு அழைத்து வந்தார் துறவி. இங்கே பார், நான் இந்த இடத்தைத்தான் தேடிக்கொண்டிருந்தேன், இனிமேல் நான் உன்னோடு திரும்பி வரமாட்டேன், நீ என்னோடு வருகிறாயா அல்லது திரும்பிப் போகிறாயா என்று கேட்டார் துறவி. அதெப்படி ஐயா நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரமுடியும் என்றார் மன்னர். இதுதான் நம் இருவருக்கும் இடையே இருக்கின்ற வேறுபாடு. நான் அரண்மனையில் இருந்தபோது, எல்லாப் பொருள்களையும் கொண்டிருந்தேன், ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட உரிமை கொண்டாடவில்லை. நீயோ அனைத்திற்கும் உரிமை கொண்டாடுகிறாய், இதுதான் நமக்குள் இருக்கும் வேறுபாடு. இவ்வாறு கூறிய துறவி, அந்த இடத்திலேயே அரண்மனை ஆடைகளைக் களைந்து மன்னரிடம் கொடுத்துவிட்டு, அவர் வழியே நடந்துபோனார், திரும்பிப் பார்க்காமலே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2020, 14:55