தேடுதல்

Vatican News
ஹிரோஷிமா Simane Gokoku Shrine கோவில் ஹிரோஷிமா Simane Gokoku Shrine கோவில்  (©Don - stock.adobe.com)

விதையாகும் கதைகள்: பார்வை மாற வேண்டும்

நேர்மறை சிந்தனை, நம் எண்ணங்களை நல்வழிப்படுத்தும். மன அழுத்தம் மற்றும், அது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். அச்சிந்தனை, உடலுக்கும் மனதிற்கும் பல்வேறு நலன்களை நல்கும்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு நாள் புத்தருடைய சீடர் ஒருவர், அவரிடம் ஆசீர்பெற்று, தான் பெற்ற பேறை, மற்றவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியூர் புறப்பட்டார். அந்த நேரம் பார்த்து புத்தர் அவரைக் கூப்பிட்டு, நீ செல்லும் பகுதியிலுள்ள மக்கள் உன் மீது வசைமொழிகளை அள்ளி வீசினால், நீ என்ன செய்வாய் என்று கேட்டார். அதற்கு அந்தச் சீடர், நான் மகிழ்ச்சியடைவேன் என்று சொன்னார். ஏன் என்று புத்தர் கேட்க, நல்லவேளை, அந்த மக்கள் என்னை திட்டுவதோடு மட்டும் நிறுத்திவிட்டார்களே, அடிக்கவில்லையே, அதனால் அவர்கள் மிகவும் நல்லவர்கள் என்று நினைப்பேன் என்று பதில் சொன்னார். சரி, அந்த மக்கள் உன்னை அடிக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம், அப்போது நீ என்ன செய்வாய் என்று கேட்டார் புத்தர். அதற்கு அந்தச் சீடர், அடடா, இந்த மக்கள் இவ்வளவு நல்லவர்களாய் இருக்கிறார்களே, என்னை இப்படி வெறுங்கையால் அடிப்பதோடு மட்டும் நிறுத்திவிட்டார்களே என்று நினைத்து மகிழ்ச்சியடைவேன் என்று சொன்னார். அப்படியா, அவர்கள் உன்னை ஆயுதத்தால் தாக்கினால், அப்போது  நீ என்ன நினைப்பாய் என்று புத்தர் கேட்டார். அதற்கு அந்தச் சீடர், மகானே, இவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள், பிறவி என்ற தளையிலிருந்து விடுபடுவதற்கு இந்த உலகில் ஒவ்வொருவரும் எவ்வளோ கஷ்டப்பட்டு முயற்சி செய்கிறார்கள், ஆனால் நான் மிக எளிதாக முத்தி அடைவதற்கு இவர்கள் உதவிசெய்கின்றார்களே, இவர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் போதாது, அவ்வாறு நினைத்து மகிழ்வேன் என்று சொன்னார். உடனே புத்தர், அந்தச் சீடரை மனதார வாழ்த்தி, தூதுரைப் பணிக்கு வழியனுப்பி வைத்தார்.

*இந்த உலகில் மனிதர் பலவிதம். எதையும் நேர்மறைச் சிந்தனையோடு, நல்ல எண்ணத்தோடு பார்க்கிறவர்கள் உள்ளனர். அதற்கு நேர்மாறாக, எதையும் குறையோடு, தீய எண்ணத்தோடு பார்க்கிறவர்களும் உள்ளனர். ஒருவர் நல்லது செய்தால்கூட அதை நல்லவிதமாக எடுக்காதவர்களும் உள்ளனர். நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக்கொள்வது, வாழ்வில் அதிக நம்பிக்கையைக் கொடுக்கும்.

02 March 2020, 15:11