தேடுதல்

Vatican News
ரபி இஷ்மாயேல் பென் எலிஷா  (90AD.-135AD) ரபி இஷ்மாயேல் பென் எலிஷா (90AD.-135AD) 

விதையாகும் கதைகள்: ‘நான்’ என்பது ஒரு மனக்கொள்கை

நான், நான் என்று மனிதர் அடிக்கடி சொல்லும், ‘நான்’ என்பது எங்கே இருக்கிறது? குழந்தையாக இருந்த அந்த ‘நானா’? சிறுவனாக வளர்ந்த, அந்த ‘நானா’? இளைஞரான, அந்த ‘நானா’? முதுமை அடைந்த, அந்த ‘நானா’? எது அந்த ‘நான்’... - ஞானி

மேரி தெரேசா: வத்திக்கான்

இஷ்மாயேல் பென் எலிஷா (Yishmael ben Elisha, கி.பி.90-135 ) என்பவர், முதலாம், மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற யூதமத ரபி. இவர் மக்கள் மத்தியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தவர், போதித்ததை வாழ்ந்தவர், இளைஞர்களுக்கு கனிவு காட்டுங்கள், வயது முதிர்ந்தோரிடம் கண்டிப்பு காட்டாதீர்கள் என்று சொல்லியவர். ஒருசமயம், ரபி இஷ்மாயேல் அவர்கள், ஓர் ஊருக்குச் சென்றார். அவர் முதன்முதலாக தங்கள் ஊருக்கு வந்ததை அறிந்த அந்த ஊர் மக்கள், அவருக்கு ஒரு பெரிய வரவேற்பு விழா நடத்தி, அவரை கவுரவிக்க விரும்பினர். அதனால் ஊர் பெரியவர்கள் சிலர், இஷ்மாயேல் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். அவரும் அதற்கு இணங்கினார். அவர்கள் சென்றபின், அவர், தன் அறைக்குள் சென்று கதவை உள்புறமாகத் தாளிட்டார். அறையிலே, எதையோ திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தார். அந்தப் பக்கம் சென்ற மக்களுக்கு ஓரிரு சொற்கள் மட்டும் காதில் விழுந்தன. சிறிதுநேரம் சென்று ரபி இஷ்மாயேல் அவர்கள், கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். அவரைப் பார்ப்பதற்காக அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள், அவரிடம், நீங்கள் அறையில் எதையோ திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தீர்களே, அதன் அரத்தம் என்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா? என்று கேட்டனர். அதற்கு ரபி, அது ஒன்றுமில்லை, இன்று மாலையில் நடக்கவிருக்கும் விழாவில் நீங்கள் என்னை, சூரியனே, சந்திரனே, தவப்புதல்வனே... இப்படியெல்லாம் வானளாவ புகழ்ந்து பேசுவீர்கள். அந்த வார்த்தைக்ளைக் கேட்கும்போது எனக்கு அகந்தை அதிகமாகிவிடும். அதனால் அந்தச் சொற்களை முதலில் நானே திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன். இப்போது அவை எனக்குப் பழக்கமாகிவிட்டன. சலிப்பும் தட்டிவிட்டன. இன்று மாலை நீங்கள் அவற்றை எத்தனை முறை சொன்னாலும், எனக்கு அகந்தையே வராது என்று சொன்னார்.

ஆம். நான், தான் என்ற அகந்தை, அழிவை விதைக்கும் ஆயுதம். நான் என்பது ஒரு மனக்கொள்கை, அதற்கு வடிவம் கிடையாது.

03 February 2020, 14:51