தேடுதல்

Vatican News
2020ம் ஆண்டின் உலக வானொலி நாளுக்கு உருவாக்கப்பட்டுள்ள விளம்பரம் 2020ம் ஆண்டின் உலக வானொலி நாளுக்கு உருவாக்கப்பட்டுள்ள விளம்பரம் 

உலக வானொலி நாள் - ஐ.நா. அவை பொதுச்செயலரின் செய்தி

1946ம் ஆண்டு, பிப்ரவரி 13ம் தேதி, ஐ.நா. அவையின் வானொலி உருவாக்கப்பட்டதையடுத்து, அந்த நாளை, உலக வானொலி நாளாகச் சிறப்பிக்க, 2012ம் ஆண்டு, ஐ.நா. அவை முடிவெடுத்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வானொலி என்ற ஊடகத்தின் வழியே, பன்முகக் கலாச்சாரமும், உலக அமைதியும் கொண்டாடப்படுகின்றன என்று, ஐ.நா.அவையின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

சனவரி 13, இவ்வியாழனன்று, உலக வானொலி நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, தன் வாழ்த்துச் செய்தியை வழங்கியுள்ள கூட்டேரஸ் அவர்கள், நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகளை நாம் வெல்வதற்கும், சுற்றுச்சூழல் நெருக்கடியை சமாளிக்கவும் தேவையான நல்ல தகவல்களை, உலகின் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்வதற்கு, வானொலி மிகச் சிறந்ததோர் ஊடகமாகச் செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.

ஒலி அலைகளையும், அதிர்வுகளையும் கொண்டு பரவும் AM, மற்றும் FM ஆகிய வடிவங்களிலும், வலைத்தள வானொலி வடிவிலும் செயலாற்றும் இவ்வூடகம், உலகெங்கும், அதிக அளவில் பரவியுள்ள ஊடகம் என்று, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான ‘யுனெஸ்கோ’வின் தலைமை இயக்குனர் Audrey Azoulay அவர்கள் கூறியுள்ளார்.

அண்மைய ஆண்டுகளில் அமைக்கப்பட்டுள்ள குழும வானொலி நிலையங்கள் வழியே, குரல் எழுப்ப வாய்ப்பற்ற மக்களின் குரல்கள் இன்று அதிகம் கேட்கப்படுகின்றன என்பதையும் Azoulay அவர்கள் எடுத்துரைத்தார்.

1946ம் ஆண்டு, பிப்ரவரி 13ம் தேதி, ஐ.நா. அவையின் வானொலி உருவாக்கப்பட்டதையடுத்து, அந்த நாளை, உலக வானொலி நாளாகச் சிறப்பிக்க, 2012ம் ஆண்டு, ஐ.நா. அவை முடிவெடுத்தது.

வானொலியைக் கண்டுபிடித்த குலியெல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi) அவர்கள், ஐ.நா. அவையின் வானொலி உருவாவதற்கு 15 ஆண்டுகள் முன்னதாக, 1931ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களின் உரையுடன், வத்திக்கான் வானொலியின் முதல் ஒலிபரப்பை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

13 February 2020, 15:06