தேடுதல்

Vatican News
கர்மவீரர் காமராசர் கர்மவீரர் காமராசர்  

வாரம் ஓர் அலசல்: ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்

வீட்டிற்கு, உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் போன்றோர் வரும்போது, எதைப் பேசுவது என்பதைவிட, எதைப் பேசக்கூடாது என்பதில், மிகவும் கவனமாக இருப்பதற்கு, பெரியவர்கள், சிறியவர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

யார் யார், எதை எதை, எந்தெந்த இடத்தில் சொல்ல வேண்டுமோ, அதை அதை, அந்தந்த இடங்களில் சொன்னால் மட்டும்தான் அது நிறைவேறும். எவர் எதைச் சொன்னாலும் அது எடுபடுவதில்லை. அதற்கு ஒரு தகுதி வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்லும் சொற்கள் வேறு, சாமானிய மனிதர் சொல்லும் சொற்கள் வேறு. அவை, சொல்ல வேண்டியவர்கள், சொல்ல வேண்டிய இடத்தில், சொல்லும் முறையில் சொன்னால் மட்டும் மதிக்கப்படுகின்றன. இந்தச் சிந்தனையின்றி பேசுபவர்கள், சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். அது அரசியலோ, திரை உலகமோ, சமுதாயக் களமோ, உறவுகளோ, எல்லா நிலைகளிலுமே இந்த சிக்கல் நிலவுகிறது. இந்நிலை, சிலரை நீதிமன்றம்வரைகூட இட்டுச் செல்கிறது. இடம், பொருள் காலம் அறிந்து பேசாத பேச்செல்லாம் பேச்சு என்றே சொல்ல முடியாது. வீட்டிற்கு, உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் போன்றோர் வரும்போது, எதைப் பேசுவது என்பதைவிட, எதைப் பேசக்கூடாது என்பதில், மிகவும் கவனமாக இருப்பதற்கு, பெரியவர்கள், சிறியவர்களுக்குக் கற்றுக்கொடுக்கின்றனர்.

எல்லாரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில், ஏதேனும் ஒரு சோகமான நிகழ்ச்சியைப் பற்றிப் பேசி எல்லாரையும் கலங்கடிக்கக் கூடாது. அதேபோல், ஒருவருடைய உடல்நிலையைப் பற்றித் தொடர்ந்து, அவரிடம் பேசி நோகடிக்கக் கூடாது. பலர் முன்னிலையில், ஒருவரின் நோய் பற்றி விசாரிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், தான் நோயாளி என்பதை எல்லாரும் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பமாட்டார்கள். அதேபோல் ஒருவருடைய குடும்ப வருமானம், அந்தரங்க வாழ்க்கை, வேலை விவரம்... போன்றவை பற்றிக் கேட்டு, சந்திக்கும் குடும்பத்தினரை சங்கடத்தில் வீழ்த்தக் கூடாது. ஏனெனில் ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். 

கர்மவீரர் காமராசர் - மாலை நேர கல்லூரி

கர்மவீரர் காமராசர் அவர்கள், முழுநேர, மற்றும், மாலை நேர கல்லூரி படிப்புமுறையை கொண்டுவந்தது பற்றிய ஒரு நிகழ்வு உள்ளது.

காமராசர் அவர்களும், வழக்கறிஞர் டி.சீனிவாசன் அவர்களும் நல்ல நண்பர்கள். ஒரு நாள், சீனிவாசன் அவர்கள், காமராசர் அவர்களிடம், தனது மகனுக்கு, சென்னை மாநிலக் கல்லூரியில் வேதியல் துறையில் முதுகலை பட்ட படிப்புக்கு இடம் வாங்கித் தருமாறு கேட்டார். இதற்காகவா நான் முதலமைச்சர் ஆனேன் என்று காமராசர் அதிரடியாகச் சொன்னதும், அந்த வழக்கறிஞர், சிறிது கவலையுடன், இல்லை, அந்த படிப்புக்கு மொத்தமே 15 இடங்கள்தான் உள்ளதாம் என்று கூறினார். உடனே காமராசர், அந்த கல்லூரியைத் தொடர்பு கொண்டார். கல்லூரி நிர்வாகம் பல்கலைக்கழகத்தைச் சுட்டிக்காட்டியது. எனவே, பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டார் காமராசர். முதன்மைச் செயலரை அழைத்து, 15 பேருக்குத்தான் இடம் என்றால், மற்றவர்கள் எப்படி படிப்பது, நாடு எப்படி முன்னேறும், அந்த பையன் நிறைய மதிப்பெண்கள் வாங்கியிருக்கான், அவனுக்கு ஓர் இடம் கொடுங்கள் என்று சொன்னார். அதற்கு அந்த செயலர், ஐயா, அந்த வேதியல் படிப்பு ஆய்வுக்கூடத்தில், 15 மாணவருக்கு மட்டுமே போதுமான கருவிகள் உள்ளன. அந்தப் பையனுக்கு இடம்கொடுக்க வேண்டுமென்றால், ஏற்கனவே சேர்த்த ஒரு மாணவனை நான் நீக்க வேண்டிவரும் என்று சொன்னார். அதற்கு காமராசர் அவர்கள், அதென்னப்பா ஆய்வுக்கூடம்? என்று கேட்டார். ஐயா, வேதியல் படிக்கும் மாணவர்கள், வகுப்பில் மூன்று மணி நேரம், ஆய்வுக் கூடத்தில் மூன்று மணி நேரம் படிப்பார்கள் என்று சொன்னார். அப்படியா, மாணவர்கள் மூன்று மணி நேரம் ஆய்வுக்கூடத்தில் இருக்கையில், வகுப்பறையில் யார் இருப்பார்கள் என்று கேட்டார் காமராசர். அது காலியாகத்தான் இருக்கும். ஆய்வுக்கூடமும் அதேபோல்தானே இருக்கும் என்றார் செயலர். சரிப்பா.. மேலும் 15 மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். 15 பேர் மூன்று மணி நேரம் ஆய்வுக்கூடத்தில் இருக்கையில், மற்ற 15 பேர் வகுப்பறையில் இருக்கட்டும், அந்த 15 பேர் வகுப்பறையில் இருக்கையில், மற்ற 15 பேர் ஆய்வுக்கூடத்தில் இருக்கட்டும் என்றார் காமராசர். அதற்கு அந்த செயலர், ஐயா அப்படியெல்லாம் செய்ய முடியாது, ஏனெனில் அப்படியொரு கல்வி ஆணை கிடையாது என்று சொன்னார். உடனே காமராசர் அவர்கள், நான் சொல்கிறபடி ஒரு தாளில் எழுதிக்கொண்டு வா, நான் கையெழுத்துப் போடுவதுதான் கல்வி ஆணை என்றார். அவ்வாறு வந்த படிப்புமுறைதான் ஷிப்ட் படிப்பு முறை. காலை நேர கல்லூரி, மாலை நேர கல்லூரி என்று சொல்கிறார்கள். 

இலட்சியங்களை மறந்து, கோடிகளை நினைத்து வாழும் 'தலைமைகள்' நிறைந்துள்ள இக்காலத்தில், காமராசர் போன்ற கர்மவீரர்களுக்காக நாடு ஏங்குகின்றது. சனநாயகத்தை மதிக்கும், நல்ல தலைவர்கள் கிடைப்பதற்காக கடவுளை மன்றாடுவோம்.

இரு பண்டிதர்கள் - மாடு, கழுதை

எதை, எந்த இடத்தில், எவ்வாறு பேச வேண்டும் என்று யோசிக்காமல், வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினால், அதற்கு கிடைக்கும் வெகுமதி என்னவாக இருக்கும்? அவமரியாதைதான்.

ஓர் ஊரில் சோமநாதர் என்ற ஒரு பெரிய மனிதர் இருந்தார். அவரிடம் செல்வம் இருந்தது. அதோடு நல்ல குணமும் சேர்ந்தே இருந்தது. நாலுபேர் நன்றாக வாழ வேண்டும் என விரும்பி உதவி செய்பவர் அவர். ஒருநாள் அவர், ஞான பண்டிதர், ராம பண்டிதர் ஆகிய இரு பண்டிதர்களை தன் வீட்டுக்கு அழைத்து, மரியாதை செய்ய விரும்பினார். அன்று இருவரையும் வீட்டுக்கு அழைத்து விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார் சோமநாதர். வீட்டுக்கு வந்திருந்த இருவரும் அவரோடு சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் முதலில் ஞான பண்டிதர், குளிக்கச் சென்றார். அச்சமயத்தில், சோமநாதர் அவர்கள், ஞான பண்டிதர் பற்றி, ராம பண்டிதரிடம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அதைக் கேட்ட ராம பண்டிதர், ஊர் உலகம் அவரை பெரிய மேதை எனச் சொல்கிறது. அந்த அளவுக்கு அவரிடம் என்ன இருக்கிறது, உண்மையைச் சொல்லப்போனால், அது ஒண்ணும் தெரியாத மாடு என்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத சோமநாதர் மனதுக்குள்ளே வருத்தப்பட்டார். அந்நேரத்தில் குளிக்கச் சென்ற ஞான பண்டிதர் வந்துவிட்டார். அடுத்து ராம பண்டிதர் குளிக்கச் சென்றார். இவரிடம் பேசிக்கொண்டிருக்கையில், உங்கள் நண்பர் ராம பண்டிதர், பெரிய ஞானி போல் தெரிகிறார் என்று புகழ்ந்தார். அதற்கு ஞான பண்டிதர், அவரைப் பற்றி உங்களுக்கு ஒண்ணும் தெரியவில்லை. அது ஒரு மோசமான கழுதை என்றார். இதைக் கேட்டதும் சோமநாதர் மேலும் நொந்து போனார். பதில் எதுவும் பேசாமல் இருந்தார். உணவு நேரம் வந்தது. அவ்விரு பண்டிதர்கள் முன்னால் இரு தட்டுகளை வைத்து, ஒரு தட்டில் புல்லு, அடுத்த தட்டில் தவிடு வைத்தார் சோமநாதர். அதைப் பார்த்த பண்டிதர்களுக்கு கோபம் தலைக்கேறியது. எங்களை என்ன மிருகம் என்றா நினைத்தீர்கள், அவமதிக்கவா வீட்டிற்கு அழைத்தீர்கள் என்று கேட்டார்கள். அய்யய்யோ அப்படியெல்லாம் நினைக்க வேண்டாம். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தேன். நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் மாடு, கழுதை என்று பெயர் சூட்டினீர்கள். மாடும், கழுதையும் சாப்பிடுவதைத்தான் வைத்தேன் என்றார், சோமநாதர்.

சொற்களை தவறான இடத்தில், தவறாகப் பதிவுசெய்யும்போது அதன் விளைவும் அப்படியேதான். நம்மில் பலர் மனிதரை, மனிதராக மதிக்காமல், ஒருவரையொருவர் இப்படித்தானே அழைத்துக்கொள்கின்றனர்!

திருத்தந்தையின் மறையுரை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 26, இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், “முதல் இறைவார்த்தை ஞாயிறு” திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றினார். அப்பொழுது திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், இவ்வாறு கூறினார்.

விவிலியத்தில், நம் வாழ்வை மாற்றவல்ல கடவுளின் வல்லமைமிக்க வார்த்தை உள்ளது. எனவே, கடவுளின் வார்த்தைக்கு நம் வாழ்வில் இடமளிக்க வேண்டும்,  ஒவ்வொரு நாளும், நல்தூண்டு பெறுவதற்கென, விவிலிய நூலில் ஒன்று அல்லது இரண்டு இறை வசனங்களை வாசிக்க வேண்டும். இந்த வாசிப்பை நற்செய்தி நூலிலிருந்து துவங்குவோம். நம் மேஜையில் அதை திறந்து வைத்திருப்போம். நம் சட்டைப் பையில் அதனை கொண்டுசெல்வோம். நம் கைபேசிகளில் அதனை வாசிப்போம். ஒவ்வொரு நாளும், நமக்கு உள்தூண்டுதல் தர அனுமதிப்போம். ஆண்டவர் தம் வார்த்தையை நமக்கு வழங்குகிறார், எனவே, அவர் நம் அருகில் இருக்கிறார் என்பதை நாம் உணர உதவுவதற்கு, அவர் நமக்கு எழுதிய அன்புக் கடிதம் போன்று, அதைப் பெறுவோம்.     அதனை நம்மோடு வைத்திருப்போம். அவருடைய வார்த்தை ஆறுதலளிக்கின்றது, மற்றும், ஊக்கப்படுத்துகின்றது. அதேவேளை, அது, தன்னலம் என்ற பிணைப்பிலிருந்து நம்மை கட்டவிழ்த்துவிட்டு, மனமாற்றத்திற்கு நம்மைக் கையளிக்கச் சவாலாக உள்ளது.  ஏனெனில், ஆண்டவரின் வார்த்தை, நம் வாழ்வை மாற்றும் சக்திவாய்ந்தது மற்றும், இருளினின்று ஒளிக்கு நம்மை இட்டுச் செல்கின்றது....இவ்வாறெல்லாம், கடவுளின் வார்த்தையின் மேன்மையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருமையாக எடுத்துரைத்தார்.

மதங்களின் புனித நூல்களிலுள்ள இறைவார்த்தை, துன்பத்தில் ஆறுதலாக, மனத்தளர்ச்சியில் ஊக்கமூட்டுவதாக, தடுமாறும் நிலைகளில் நல்பாதை காட்டும் வழித்துணையாக... இவ்வாறு நம் வாழ்வுக்குத் தேவையான எல்லாவற்றிற்கும் எல்லாமுமாக அமைந்து உதவுகின்றது. அது நம் வாழ்வின் நல்மாற்றத்திற்குச் சவாலாக உள்ளது. ஆதலால், நல்வார்த்தைகளை வாசித்து சிந்திப்போம், பேசுவோம். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். வெல்லும் சொற்களையே எப்பொழுதும் சொல்வோம். 

வாரம் ஓர் அலசல்: ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்
27 January 2020, 15:17