தேடுதல்

Vatican News
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், தன் குடும்பத்துடன் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், தன் குடும்பத்துடன்  

வாரம் ஓர் அலசல் – வரலாற்று ஏட்டில் நமக்கென ஒரு பக்கம்

என் கனவில் வெள்ளை அமெரிக்கா, கறுப்பு அமெரிக்காவின் முன்பு மண்டியிட்டு அமர்ந்து தன் நூற்றாண்டுகாலத் தவறுகளுக்கு மன்னிப்புக்கோரும் - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

மேரி தெரேசா - வத்திக்கான்

கனவு காணுங்கள், உயர உயரப் பறக்க கனவு காணுங்கள், கனவை நனவாக்கப் பாடுபடுங்கள். அதன்பின் வானமும் வசப்படும் என்ற தாரக மந்திரத்தை, இளைஞர்களுக்கு உரக்க விதைத்தவர், முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது, நீங்கள் தூக்கத்தில் காண்பது அல்ல, மாறாக, உங்களைத் தூங்கவிடாமல் செய்வது எதுவோ, அதுவே இலட்சிய கனவு என்று இந்திய இளைஞர்களை விழித்தெழச் செய்தார், அப்துல் கலாம் அவர்கள். இந்தியாவில் நடுவண் அரசு அறிவித்துள்ள குடியுரிமை சட்ட திருத்த சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது முதல், பல்வேறு உரிமைகளுக்காக இளைஞர்கள் வீறுகொண்டு போராடி வருகின்றனர். அப்துல் கலாம் அவர்களின் எழுச்சியூட்டும் வீர வசனங்கள் இப்போது இளைஞர்கள் மத்தியில் செயல்உரு எடுத்து வருவதை பலரும் நம்பிக்கையாக நோக்கி வருகின்றனர். மன்னர் கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரித்தானிய சர்வாதிகாரத்தை எதிர்க்க முடியாது என்று மகாத்மா காந்தி அவர்கள் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிரமணியம், எம்.எஸ். சுவாமிநாதன் போன்றோர், முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் குரியன் அவர்கள், முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. பெரிய பெரிய கனவுகள் கண்டு, அதற்குச் செயலுருவம் கொடுக்க முடியும் என்று நம்பும் மனிதரால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு முழுமையாய் நம்பி, பெரிய கனவு கண்டு வரலாறு படைத்தவர்களில் ஒருவர், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

“எனக்கு ஒரு கனவு உள்ளது, எனக்கு ஒரு கனவு உள்ளது... (I Have a Dream)" என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உரக்க உரையாற்றியவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். தனது இலட்சியக் கனவு நனவாக்கப்பட உழைத்ததற்காகவே, தனது நாற்பதாவது வயதில், இனவெறி பிடித்த ஒருவனால், இந்த மாமனிதர் சுட்டுக் கொல்லப்பட்டார் (ஏப்.4,1968). 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி, வாஷிங்டன் நகரில், வேலைவாய்ப்புகள் மற்றும் சுதந்திரத்திற்காக, பெரும் வெள்ளமென திரண்டு பேரணி நடத்திய மக்களுக்கு மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்கள் ஆற்றிய வீர உரை, அந்நாட்டு வரலாற்றில் ஓர் அழியாத பகுதியாகவும், ஒரு திருப்புமுனையாகவும் அமைந்துள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில், வெள்ளையின மக்கள் போலவே, கறுப்பின மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று மிகவும் விரும்பி, அதற்காக பெரிய கனவு கண்டார் அவர். தற்போது அந்தக் கனவு அந்நாட்டில் நனவாகியிருக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மனித உரிமையின் தேசிய அடையாளமாக நோக்கப்படும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின் நினைவு நாள், தேசிய விடுமுறையாக, ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விடுமுறை நாள், இவ்வாண்டு சனவரி 20, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின், கனவு பற்றிய ஒரு கட்டுரை, இந்து தமிழ் திசை நாளிதழிலில் வெளிவந்தது.

எனக்கு ஒரு கனவு உள்ளது

அது ஒரு பெரிய நகரம். ஒரு மாலை நேரம். வீட்டிலிருந்து கிளம்புகிறேன். எனக்குப் பிடித்த பாடல் ஒன்றை மனதில் அசைபோட்டபடி நடந்து ஒரு பெரிய பூங்காவுக்குள் நுழைகிறேன்.... அடுத்து, எங்கே போகலாம்? நீண்ட நாட்களாகின்றன. ஒரு படம் பார்க்கலாமா? எனக்குப் பிடித்த திரையரங்குக்கு அருகில் இறங்கிக்கொள்கிறேன். புன்னகையோடு சீட்டு கிழித்து என் கையில் கொடுக்கிறார்கள். நல்ல இருக்கை ஒன்றில் அமர்கிறேன். நிதானமாக முழுப் படத்தையும் ரசிக்கிறேன். வெளியில் வருகிறேன். ஒரு நல்ல சட்டை எடுத்தால் என்ன? .... அருகிலுள்ள ஒரு பெரிய அடுக்குமாடி கட்டடத்துக்குள் நுழைகிறேன். கண்ணாடிக் கதவை மெதுவாகத் திறந்து என்னை அனுமதிக்கிறார் சீருடை அணிந்த பணியாளர் ஒருவர்.... ஒரு பாடலை முணுமுணுத்தபடி உற்சாகத்தோடு வெளியில் வந்து, ஓர் உணவகத்துக்குள் நுழைகிறேன். எனக்கொரு கோப்பை சுடச்சுட தேநீர் கிடைக்குமா? ஓ, இங்கே அமருங்கள் இதோ கொண்டுவருகிறேன் என்று பணியாளர் விரைகிறார். தேநீர் வருகிறது. மெதுவாக அருந்துகிறேன். மனம் முழுக்க இனம் புரியாத மகிழ்ச்சி. கோப்பையைக் கீழே வைக்கும்போது ஒரு குழந்தை என் கண்களைப் பார்த்துப் புன்னகை செய்கிறது. நான் என் கையை நீட்டுகிறேன், குழந்தை நெருங்கி வந்து என் விரல்களைப் பற்றிக்கொள்கிறது. மிருதுவான அதன் வெள்ளை விரல்களை வருடிக் கொடுக்கிறேன். கனவு நிறைவடைகிறது. ஆனால், இது மிகவும் சாதாரண ஒரு கனவுதானே என்று நீங்கள் திகைக்கலாம். இதில் ஒவ்வொன்றும் எனக்கும் என் மக்களுக்கும் நிறைவேறாத ஆசை. எனக்கு விருப்பப்பட்ட ஓரிடத்தில் வீடு எடுத்துத் தங்க முடியாது. பூங்காவுக்குள் நடந்து செல்ல முடியாது. இது உன் இடமல்ல என்று பிடித்துத் தள்ளுவார்கள். பேருந்தில் என் விருப்பத்துக்கு ஏற முடியாது. உன் வண்டியில் ஏறிக்கொள் என்பார்கள். எனக்குப் பிடித்த திரைப்படத்தை எனக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்து பார்க்க முடியாது. உன் இடத்துக்குப் போ என்பார்கள். என் இடம் என்பது, முக்கியத்துவமற்ற இடமாக இருக்கும். கண்ணாடிக் கதவைத் திறந்து ஒருவரும் என்னை அனுமதிக்க மாட்டார்கள். இங்கே உனக்கென்ன வேலை என்று சீறுவார்கள். நீயாகப் போகிறாயா அல்லது பாதுகாப்பு அதிகாரியிடம் பேசட்டுமா என்று விழிகளை உருட்டுவார்கள்.... தேநீர் இருக்கிறது, உனக்குக் கிடையாது என்று கைவிரிப்பார்கள்.... எனவே, நான் கனவு காண்கிறேன். என் கனவில் ஓர் அமெரிக்கனாக, ஒரு கிறிஸ்தவனாக, ஒரு கறுப்பு மனிதனாக, ஒரு மனிதனாக, ஓர் இயல்பான உயிராக என்னால் வாழ முடியும். என் கனவில் வெள்ளை அமெரிக்கா, கறுப்பு அமெரிக்காவின் முன்பு மண்டியிட்டு அமர்ந்து தன் நூற்றாண்டுகாலத் தவறுகளுக்கு மன்னிப்புக்கோரும். கறுப்பு அமெரிக்கா கீழே குனிந்து, வெள்ளை அமெரிக்காவின் தோளைத் தொட்டு உயர்த்தி, வா இங்கே என்று நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும். என் கனவில் ஒரு வெள்ளை மனிதர் எழுந்து நின்று, கறுப்புப் பெண்ணுக்குத் தன் பேருந்து இருக்கையை விட்டுக்கொடுப்பார். என் கனவில் ஒரு கறுப்பர் வெள்ளையருடன் அமர்ந்து பூங்காவில் மெல்லிய குரலில் சிரித்து உரையாடுவார். என் கனவில் ஒரு சிறுமி அப்பாவின் வெள்ளை விரல்களையும் அம்மாவின் கறுப்பு விரல்களையும் பற்றியபடி நடை பழகும். என் கனவில் ஆலயத்தில் கறுப்பு கிறிஸ்து புன்னகை செய்துகொண்டிருக்கிறார். என் அமெரிக்கா வெள்ளையும் கறுப்புமாகப் பிரிந்திருக்காது. அது அமெரிக்காவாக மட்டும் இருக்கும். அதில் வாழ்பவர்கள் அனைவரும் அமெரிக்கர்களாக மட்டும் இருப்பார்கள்.

வாழ்கின்ற சமுதாயத்தில் மாற்றத்தைக் காண விரும்பியவர்கள், அதற்காக பெரும் கனவு கண்டு, அக்கனவை நனவாக்கி வருகின்றனர்.

அபிராமி அரவிந்தன்

கோயம்புத்தூரில் வாழ்ந்துவரும் மருத்துவர் அபிராமி அரவிந்தன் என்பவர், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில், சமுதாய, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருக்கும் மலைவாழ் மற்றும் கிராம மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதற்காக 'டாக்டர்நெட் இந்தியா' எனும் தன்னார்வ அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். 2017ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில், ஏறத்தாழ நூறு மருத்துவர்கள் இணைந்துள்ளனர். அபிராமி அவர்கள், கிராமங்களுக்கும், மலைகளுக்கும் சென்று, சிகிச்சை முடியும்வரை, அம்மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.

கும்பகோணம் பாலுஜி

அதேபோல், கும்பகோணம் குருசாமி பாலசுப்பிரமணியன் என்பவர், மளிகைக் கடைக்காரர். இவர், பல ஆண்டுகளாக, ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’ என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். அதில் படிக்கின்ற 300-க்கும் அதிகமான மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கும்பகோணம் மற்றும், அதைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழைச் சிறார். இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள். ஆகையால், எல்லாப் பள்ளிக்கூடங்கள் போலன்றி, , காலை 6 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி முதல் 9 மணி வரை, இந்தப் பள்ளி இயங்குகிறது. இந்த இரு நேரங்களில் வசதியான நேரத்தில் மாணவ -மாணவியர் வருகிறார்கள். பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களும். வேலைக்குச் சென்றுகொண்டே கல்விச் சேவை தருபவர்கள். பாலுஜி என அறியப்படும் இவர், சொந்த வாழ்க்கையில் எதிர்கொண்ட துன்பமே, இந்த நற்பணிக்குக் காரணம். இவர் வீட்டுக்கு மூத்த மகன். இவர் எட்டாவது படிக்கும்போது இவரது தந்தை இறந்துவிட்டார். வகுப்பில் முதல் மாணவனாக படித்தாலும், குடும்ப வறுமையின் காரணமாக படிப்பைக் கைவிட்டு, மளிகைக் கடை ஒன்றில் வேலையில் சேர்ந்தார். படிப்பின் மீதுள்ள ஆவலால், தனியாகப் படித்து முதுகலை பட்டயமும் பெற்றுள்ளார். நெசவாளர்கள் அதிகம் உள்ள அந்தப் பகுதியில், வறுமையால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்த பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக கனவு கண்டார். அக்கனவை நனவாக்க, தன்னைப் போலவே நல்லெண்ணம் உள்ள சில மாணவர்களை இணைத்துக்கொண்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழக’த்தைத் தொடங்கி நடத்தி வருகிறார், பாலுஜி.

கனவு காண வேண்டும். பெரிய அளவில் கனவு காண வேண்டும். எவ்வாறு பிராணவாயு நம் உடம்பிலுள்ள எல்லா அணுக்களிலும் இருந்தால்தான் நாம் நலமாக வாழ முடியுமோ, அதேபோல் நாம் அடைய விரும்பும் இலட்சியம் உடம்பிலுள்ள ஒவ்வோர் அணுவிலும் இருக்க வேண்டும். கனவு நாயகன் அவர்கள் சொன்னது போன்று, வரலாற்றில் எல்லாருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பக்கத்தை உலகையே படிக்க வைப்பது உன் கையில்தான் உள்ளது. எனவே, வரலாற்று பக்கத்தில் நமக்கென ஒரு பக்கத்தை ஒதுக்கும் இலட்சிய மனிதர்களாக வாழ்வோம்

 

20 January 2020, 15:35