தேடுதல்

Vatican News
ஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் ஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்  

இளைஞர்கள், உலகின் நம்பிக்கை - ஐ.நா.பொதுச் செயலர்

2020ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 75ம் ஆண்டு நிறைவு. இவ்வாண்டில், நீடித்த நிலையான வளர்ச்சிக்கென பத்தாண்டு திட்டம் உருவாக்கப்படுகின்றது. இதன் வெற்றிக்கு இளைஞர்களின் உதவி தேவை - கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இளைஞர்கள் உலகின் மாபெரும் வளங்கள் என்று தான் உறுதியாக நம்புவதாக, ஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், 2020ம் ஆண்டு புத்தாண்டு செய்தியில் கூறியுள்ளார்.

தற்போது உலகில் தொடர்ந்து நிலவும் சமத்துவமின்மை, வளர்ந்துவரும் காழ்ப்புணர்வு, போர், பூமிக்கோளம் வெப்பமடைந்து வருவது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நீண்டகால பிரச்சனை போன்றவை, தெளிவான ஆபத்தை இவ்வுலகிற்கு முன்வைக்கின்றன, இத்தகைய ஓர் உலகை நம் தலைமுறைகளுக்கு விட்டுச்செல்ல முடியாது என்று கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

நம் பூமிக்கோளம் பல்வேறு பிரச்சனைகளால் எரிந்துகொண்டிருந்தாலும், நம்பிக்கையும் தெரிகின்றது என்று புத்தாண்டு செய்தியில் கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கை தொடங்கி, பாலின சமத்துவம், சமுதாய நீதி, மனித உரிமைகள் போன்றவற்றைப் பெறுவதற்கு, இளைஞர்கள் முழுவீச்சுடன்  செயல்பட்டு வருவதைப் பாராட்டியுள்ளார்.

இளைஞர்களே, நீங்கள் வருங்காலத்தை வடிவமைப்பதில் உங்களின் பங்கைச் சரியாக வலியுறுத்தி வருகிறீர்கள், உங்களின் முயற்சியில் நான் உங்களோடு இருக்கிறேன் என உறுதியாகச் சொல்கிறேன், ஐ.நா. நிறுவனமும் உங்களோடு இருக்கிறது, அது உங்களுக்குரியது என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

2020ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 75ம் ஆண்டு நிறைவு என்பதைக் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், நீடித்த நிலையான வளர்ச்சிக்கென பத்தாண்டு திட்டத்தை உருவாக்குகிறோம், இதன் வெற்றிக்கு இளைஞர்களின் உதவி தேவை என்றும் கூறியுள்ளார்.

இவ்வாண்டில், இளைஞர்களே, உலகுக்கு நீங்கள் தேவை, பெரிய அளவில் சிந்திக்க, எல்லைகளைக் கடந்து அனைவரையும் தூண்டிவிட, பிரச்சனைகள் பற்றி தொடர்ந்து பேச, நீங்கள் அவசியம் என்றுரைத்துள்ள கூட்டேரஸ் அவர்கள், 2020ம் ஆண்டில் அமைதியும் மகிழ்வும் நிரம்பட்டும் என வாழ்த்தியுள்ளார். (UN)

01 January 2020, 16:17