தேடுதல்

Vatican News
ஈரான் நாடாளுமன்றம் ஈரான் நாடாளுமன்றம் 

இன்றைய உலகின் நிலவரம் குறித்து ஐ.நா.

புதிய ஆண்டு, நம் உலகில் மிகவும் துன்பநிலையில் பிறந்துள்ளது. எனவே பன்னாட்டு உறவுகளை, உரையாடல் வழியாகப் புதுப்பிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

புவியியல் விவகாரத்தால் தாக்கம் அடைந்து, அரசியல் தொடர்பாக, குறிப்பாக, பன்னாட்டு உறவுகள் தொடர்பாக நிலவும் பதட்ட நிலைகள், இந்த நூற்றாண்டில் உச்சகட்டத்தை எட்டியுள்ளன என்று கவலை தெரிவித்துள்ள ஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், உலகத் தலைவர்கள், இப்பதட்டநிலைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய ஆண்டு, நம் உலகில் மிகவும் துன்பநிலையில் பிறந்துள்ளது என்றும், நாம் மிகவும் ஆபத்தான காலங்களில் இருக்கின்றோம் என்றும், கலவரங்களும், கொந்தளிப்புகளும் அதிகரித்து வருகின்றன என்றும் கூறியுள்ளார், கூட்டேரஸ்.

ஈரானின் மிக முக்கியமான இராணுவத் தளபதி காசிம் சுலைமான் அவர்கள், ஈராக்கில் அமெரிக்க ஐக்கிய நாட்டால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறை மற்றும், போராட்டங்களைக் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், அணு ஆயுதப்பரவல் தடைகூட, கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

அணு ஏவுகணை பரிசோதனையை தானாகவே நிறுத்தி வைத்திருந்த வட கொரியா, அத்தீர்மானத்தைக் கைவிடுவதாக, இப்புத்தாண்டு நாளில் கூறியிருப்பது மிகவும் கவலையளிக்கின்றது என்றுரைத்துள்ள கூட்டேரஸ் அவர்கள், ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டுமென, ஈராக் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது உலகிற்குத் தேவை என்ன என்பதை நான்கு தலைப்புகளில் வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர், பயங்கரவாதம், தேசியவாதம், தீவிரவாதம் போன்றவை முன்னேறி வருவது, காலநிலை மாற்றத்தின் நெருக்கடி ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பன்னாட்டு உறவுகளை உரையாடல் வழியாகப் புதுப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். (UN)

07 January 2020, 15:09