தேடுதல்

Vatican News
தேநீர் விற்கும் சிறுவன் தேநீர் விற்கும் சிறுவன்  (AFP or licensors)

விதையாகும் கதைகள் : இரக்கம் காட்டி சோம்பேறியாக்காதீர்கள்

உழைப்புக்கு ஊதியம் கொடுத்தால் போதும், உழைக்காமல் இருக்க ஊதியம் கொடுத்துவிடாதீர்கள், என்றான் சிறுவன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

இரயில் நிலையத்தின் அருகில், ஒரு தேநீர் கடையில், ஒரு சிறுவன், தேநீர் போட்டுக்கொண்டிருந்தான். வகுப்பறையில் இருக்கவேண்டிய வயதில், அவன், அனலில் நின்று வெந்து கொண்டிருந்தான். அவன் நிலையை எண்ணி, வருத்தமும் இரக்கமும் கொண்ட நண்பர் குழு ஒன்று, அவனிடம் தேநீர் வாங்கி குடித்துவிட்டு, காசை கொடுத்தது. அச்சிறுவனும், தேநீருக்குரிய தொகை போக, மீதமுள்ள இரண்டு ரூபாயை அவர்களிடம் நீட்டினான்.  “அதை நீயே வைத்துக்கொள் தம்பி, உனது தேநீர் மிக அருமையாக இருந்தது” என்றான், அனைவருக்காகவும் காசைக் கொடுத்த நண்பர்களுள் ஒருவன்.

“ரொம்ப நன்றி அண்ணா. நீங்க மொதல்ல கொடுத்த காசு எனக்கு மேன்மேலும் உழைப்பை கொடுக்கும். ஆனால், இரண்டாவது முறையாக கொடுத்த காசு என் உழைப்பை கெடுக்கும்”, என்ற சிறுவன், “நான் உங்களுக்கு ஓசியில தேநீர் கொடுத்தா வாங்கி அருந்துவீர்களா?” என கேட்டான்.

“மாட்டேன் தம்பி. ஏன் கேக்குற?”, என கேட்டான் காசு கொடுத்தவன்.

“அது போலத்தான், நீங்க என் உழைப்புக்கு ஊதியம் கொடுத்தால் போதும், உழைக்காமல் இருக்க ஊதியம் கொடுத்துவிடாதீர்கள்” என்றான் அச்சிறுவன்.

03 January 2020, 15:22