தேடுதல்

Vatican News
மகாத்மா காந்தியின் 72-வது நினைவு நாள் மகாத்மா காந்தியின் 72-வது நினைவு நாள்  (AFP or licensors)

விதையாகும் கதைகள்: மகாத்மா காந்தியின் நினைவு நாள்

வெள்ளையினத்தவர், நிறவெறியை எப்போது தங்களிடமிருந்து அகற்றுகிறார்களோ அன்றுதான் அவர்களே நிம்மதியுடனும், மகிழ்வுடனும் இருப்பார்கள் – தென்னாப்பிரிக்காவில், காந்திஜி

மேரி தெரேசா: வத்திக்கான்

மகாத்மா காந்தி அவர்கள், மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியாக, தென்னாப்பிரிக்காவில் முதலில், டர்பன், (Durban) பின்னர், ஜொகான்னஸ்பர்க் (Johannesburg) ஆகிய நகரங்களில் 21 ஆண்டுகள் (1893-1913) வழக்கறிஞராகப் பணியாற்றினார். அக்காலக்கட்டத்தில், இவர், ஒரு தெருவின் வழியாக ஒவ்வொரு நாளும் நடந்து செல்வது வழக்கம். இது, அந்த தெருவில் காவலுக்கு நிற்கும் வெள்ளையின காவல்துறையினர் அனைவருக்கும் தெரியும். ஒரு நாள், அந்தத் தெருவில், ஒரு புதிய வெள்ளையின காவல்துறையினர், காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், காந்திஜி அவர்களை, ஓர் ஆப்ரிக்கக் கறுப்பர் என்று நினைத்து, வெள்ளையின காவல்துறையினர் இருக்கும் பகுதிக்குள் ஒரு கறுப்பர் வருவதா?' என்று ஆத்திரமடைந்தார். அந்த கோபத்தில், அவர், தன் முரட்டுக் காலணிகளால், காந்திஜியை உதைத்து கீழே தள்ளினார். கீழே விழுந்த காந்திஜிக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்த காவல்காரர் தன்னை இவ்வளவு கோபத்துடன் உதைத்து தரையில் தள்ளுமளவுக்கு, நான் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று எண்ணியபடி தடுமாறி எழுந்தார் காந்திஜி. அப்போது, தற்செயலாக அந்தப் பக்கம் வந்த, காந்திஜியின் கிறிஸ்தவ நண்பரான குரோட்ஸ் அவர்கள், காந்திஜி உதைத்துக் கீழே தள்ளிவிடப்படும் காட்சியைக் கவனித்து விட்டு, ஓடி வந்தார். அவர் காந்திஜியிடம், "மிஸ்டர் காந்தி! இந்த காவல்காரர், ஒரு தவறும் செய்யாத உங்களை உதைத்துக் கீழே தள்ளியதை என் கண்களால் பார்த்தேன். இவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருங்கள். நான் வந்து சாட்சி சொல்லுகிறேன்!'' என்று சொன்னார். அதற்கு காந்திஜி, "எனது தனிப்பட்ட விடயங்களுக்காக நான் நீதிமன்றத்திற்குப் போகக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். என்னைப் பற்றி இந்த காவல்காரருக்கு எதுவும் தெரியாது. இவர்கள் நிறவெறியை எப்போது தங்கள் மனத்திலிருந்து அகற்றுகிறார்களோ அன்றுதான், இவர்களே நிம்மதியுடனும், மகிழ்வுடனும் இருப்பார்கள்'' என்று கூறினார்.

சனவரி 30, இவ்வியாழன், மகாத்மா காந்தியின் 72-வது நினைவு நாள். இதே நாள், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

30 January 2020, 14:29