தேடுதல்

Vatican News
இலண்டனில் பயின்றுவந்த இளம் காந்தி இலண்டனில் பயின்றுவந்த இளம் காந்தி 

விதையாகும் கதைகள் : வானத்தை நோக்கி துப்பினால்...

வானத்தை நோக்கி துப்பப்படும் எச்சில், எங்கு விழும் என்பது, நமக்குத் தெரிந்ததுதானே!

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

மகாத்மா காந்தி அவர்கள், இலண்டன் மாநகரில், ஒரு பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த காலத்தில், அங்கு பணியாற்றிவந்த, வெள்ளையினப் பேராசிரியர், பீட்டர்ஸ் அவர்கள், காந்தியின் அறிவுத்திறனைக் கண்டு பொறாமையுற்றார். அடிக்கடி அவர், காந்தி அவர்களை அவமானப்படுத்த முயன்றார்.

ஒருமுறை, பீட்டர்ஸ் அவர்கள், பல்கலைக்கழக உணவு விடுதியில் மதிய உணவருந்திக் கொண்டிருந்தபோது, மாணவர் காந்தி, ஒரு தட்டில் தன் உணவை எடுத்துக்கொண்டு அவருக்கெதிரே அமர்ந்தார். இதைக்கண்ட பேராசிரியர், "காந்தி, உனக்கு இது புரியாமல் இருக்கலாம். ஆனால், பறவையும், பன்றியும், ஒரே இடத்தில் உணவருந்த முடியாது" என்று கூறினார். காந்தி அவர்கள், உடனே, தன் உணவுத் தட்டை கையில் எடுத்துக்கொண்டு, "கவலைப்படாதீர்கள் சார், நான் பறந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, அடுத்த மேசைக்குச் சென்றார்.

உணவு விடுதியில், பலருக்கு முன், காந்தி அவர்கள் கூறிய இந்த பதில், பேராசிரியரை மிகவும் கோபமுறச் செய்தது. சில நாள்கள் சென்று, வகுப்பறையில், அவர், காந்தியிடம், "நீ சாலையில் நடந்துகொண்டிருக்கும்போது, அங்கு, ஒரு பையில், அறிவுத்திறனும், ஒரு பையில் பணமும் இருந்தால், நீ எதை எடுப்பாய்?" என்று கேட்டார். காந்தி அவர்கள், சற்றும் தயங்காமல், "பணமுள்ள பையை எடுத்துக்கொள்வேன்" என்று சொன்னார். பேராசிரியர், ஓர் ஏளனச் சிரிப்புடன், "அதுதான், உனக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு. நானாக இருந்தால், அறிவுத்திறன் உள்ள பையைத்தான் எடுத்திருப்பேன்" என்று கூறினார். உடனே காந்தி அவரிடம், "ஒருவரிடம் எது இல்லையோ, அதைத்தானே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்" என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

பேராசிரியரின் கோபம் ஒவ்வொருநாளும் கூடி வந்தது. அடுத்து வந்த தேர்வில், காந்தி அவர்கள், மிகச் சிறந்த முறையில் பதில் எழுதியிருந்தார். அதை ஒரு வரியும் வாசிக்காமல், பேராசிரியர் பீட்டர்ஸ் அவர்கள், அந்த விடைத்தாளின் முதல் பக்கத்தில், "முட்டாள்" என்ற சொல்லை மட்டும் பெரிதாக எழுதி, அதை, காந்தியிடம் கொடுத்தார். அதைக்கண்ட காந்தி அவர்களுக்கு எரிச்சல் வந்தாலும், சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் அவர் பேராசியரிடம் சென்று, தன் விடைத்தாளைக் காண்பித்து, "சார், நீங்கள் இந்த விடைத்தாளில் கையொப்பமிட்டுள்ளீர்கள்; ஆனால், மதிப்பெண் வழங்கவில்லையே" என்று கூறினார்.

வானத்தை நோக்கி துப்பப்படும் எச்சில், எங்கு விழும் என்பது, நமக்குத் தெரிந்ததுதானே!

28 January 2020, 14:46