தேடுதல்

Vatican News
பேரரசர் அக்பர் அவையில் அமைச்சர் பீர்பால் பேரரசர் அக்பர் அவையில் அமைச்சர் பீர்பால்  

விதையாகும் கதைகள்: வார்த்தைகளைச் சிந்தித்துப் பேச...

யார் யார், எதை எதைச் சொல்ல வேண்டுமோ, அதை அதைச் சொன்னால்தான் நிறைவேறும்

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்று அமைச்சர் பீர்பால், அவைக்குத் தாமதமாக வந்தார். கோபத்துடன் காத்திருந்த பேரரசர் அக்பர், பீர்பால் வந்தவுடன், அவையில் அத்தனை பேரும், நீர் ஒருவர் வருவதற்காகக் காத்திருக்கிறார்கள், தாமதம் ஏன் என்று கேட்டார். அதற்கு பீர்பால், அரசே, மன்னிக்கவும், எந்த வேலை செய்தாலும் கவனம் சிதறாமல் செய்ய வேண்டும் அல்லவா. அதற்கு தியானம் மிகவும் உதவும். அதனால், தியானத்திற்குச் சென்றிருந்தேன் என்று பதில் சொன்னார். அப்படியா, எனக்கும் தியானம் செய்யக் கற்றுக்கொடு என்றார் அக்பர். இல்லை அரசே, நான் அதை 48 நாள்கள், என் குருவிடம் கற்றுக்கொண்டேன். நீங்கள் பேரரசர். உங்களுக்கு ஒரு குருதான் சொல்லிக் கொடுக்க முடியும். நான் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று அடக்கத்தோடு சொன்னார் பீர்பால். அக்பருக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. அப்படியானால் நீர் 48 நாள்கள் அரசவைக்கு வர வேண்டாம். நான் யாரிடமாவது தியானம் செய்ய கற்றுக்கொள்கிறேன் என்றார் அக்பர். அரசர் ஆணைப்படி, 48 நாள்கள் சென்று அரசவைக்கு வந்தார் பீர்பால். அமைச்சரை மிகவும் கேலியாகப் பார்த்து சிரித்த அக்பர், அவரை ஓர் அறைக்கு அழைத்துச் சென்று, நான் தியானம் செய்வதைப் பார் என்றார். பீர்பாலும் அமைதியாக உட்கார்ந்திருந்தார். நேரம் செல்லச் செல்ல, அரசர் செய்வது தியானமே இல்லை என்று, பீர்பாலுக்கு எரிச்சல் வந்தது. தனது கைகளைத் தட்டி, காவலர்களைக் கூப்பிட்டு, இந்த முட்டாளைக் கைது செய்யுங்கள் என, பீர்பால் கத்தினார். அந்த சப்தத்தில் அக்பர் விழித்துக் கொண்டார். பீர்பால் முக்கிய அமைச்சர், அவர் சொன்னால் எதையும் செய்யலாம். ஆனால் பேரரசரரையா என்று, ஒன்றும் புரியாமல், காவலர்கள், குழம்பி நடுங்கினர். அக்பருக்கோ கோபம். இந்த பீர்பாலுக்கு அதிகம் செல்லம் கொடுத்துவிட்டோம். அதனால்தான் என்னையே கைது செய்யச் சொல்லுகிற அளவுக்கு துணிச்சல் வந்துவிட்டது என்று நினைத்து, அவரும் கோபத்தோடு, முதலில் இந்த முட்டாளை கைது செய்யுங்கள் என்று காவலர்களிடம் கட்டளையிட்டார். அடுத்த வினாடியே காவலர்கள் பாய்ந்துவந்து பீர்பாலை கைது செய்தார்கள். அப்போது பீர்பால் சிரித்தார். அரசே! நீங்கள் சொன்ன அதே சொற்களைத்தான் நானும் சொன்னேன். ஆனால் நான் சொன்னது பலிக்கவில்லை. இப்போது புரிகிறதா, யார் வாயிலிருந்து எது வந்தால் செல்லுபடி ஆகும் என்று சொன்னார், பீர்பால்.

27 January 2020, 15:14