தேடுதல்

Vatican News
மாட்டுப் பொங்கல் மாட்டுப் பொங்கல்  

விதையாகும் கதைகள்: எது மகிழ்ச்சி? பெறுவதா? கொடுப்பதா?

ஒருவர் தன் மகிழ்ச்சியின் முழுமையான பலனை அனுபவிப்பதற்கு, யாராவது ஒருவருடன் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் - Mark Twain

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு பள்ளியின் 2ம் வகுப்பு ஆசிரியர், ஒவ்வொரு நாளும் தன் மாணவர்களில் ஒருவரை, பள்ளியைவிட்டு எங்கேயாவது வெளியே அழைத்துச்சென்று வாழ்வியல் பாடத்தைக் கற்றுக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி அன்று அந்த ஆசிரியர் ஒரு மாணவனை அழைத்துக்கொண்டு வயல்வெளிக்குப் போனார். அங்கே வேலைசெய்த ஏழை விவசாயி ஒருவரின் பழைய, தேய்ந்துபோன காலணிகள் வரப்பில் கிடந்தன. அவற்றைப் பார்த்த அந்த மாணவர், அவற்றை புதருக்குள் ஒளித்து வைத்து, அந்த விவசாயியைச் சீண்டிப் பார்த்து விளையாட விரும்பினார். மாணவரின் சுட்டித்தனமான எண்ணத்தை இரசிக்காத ஆசிரியர், மகனே, ஏழைகளின் வாழ்வில் விளையாடுவது மிகவும் தவறு, அதற்குப் பதிலாக, அந்த விவசாயியின் காலணிகள் ஒவ்வொன்றிலும், நம்மிடமுள்ள கொஞ்சம் பணத்தாள்களையும், காசுகளையும் வைப்போம். பின்னர், நாம் அந்த புதருக்குள் ஒளிந்துகொண்டு, காலணிகளைப் பார்க்கும் விவசாயியின் முகத்தில் என்ன உணர்வுகள் தெரிகின்றன என்று கவனிப்போமா?’’ என்று கேட்டார். அதற்கு மாணவரும் உடன்பட, இருவரும் அவ்வாறே செய்துவிட்டு, புதர் பக்கம்போய் ஒளிந்துகொண்டனர். வயலில் வேலையை முடித்து, ஓடையில் கை கால் முகத்தைக் கழுவி, ஒரு காலணியில் காலை நுழைத்தபோது, வித்தியாசமாக ஏதோ இருப்பதை உணர்ந்து, அதைக் கையிலெடுத்தார் விவசாயி. அதற்குள் சில பணத்தாள்களும் நாணயங்களும் இருந்தன. அவற்றை எடுத்த அவர், இது யாருடையதாக இருக்கும் என்று அக்கம் பக்கம் பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம்வரை யாரும் தென்படவில்லை. எனவே, அவர் அவற்றை எடுத்து தன் பையில் போட்டுக்கொண்டார். அடுத்து இன்னொரு காலணியில் காலை நுழைத்தார். அதற்குள்ளும் பணத்தாள்களும் நாணயங்களும் இருப்பதைக் கண்டு வியந்தார். அந்த இடத்திலே மண்டியிட்டு, தன் இரு கைகளையும் விரித்துக்கொண்டு, ``கடவுளே..! வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் என் மனைவிக்கு மருந்து வாங்குவதற்கும், குழந்தைகளின் பசி போக்க தானியம் வாங்குவதற்கும் செய்வதறியாது திகைத்தேன். கடவுளே, இதற்காக காலையில் உன்னை நினைத்து மன்றாடவும் செய்தேன். கேட்டதைக் கொடுத்துவிட்டாய், உன் கருணையே கருணை! என்று கண்ணீருடன் எழுந்து வீட்டுக்குச் சென்றார். அந்த விவசாயி அங்கிருந்து போனதும், மாணவர் ஆசிரியரிடம், எனக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுத்துவிட்டீர்கள். இதை என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கவே மாட்டேன் என்று நன்றிபொங்கக் கூறினார். (ஈகரை, விகடன்)

16 January 2020, 14:27